Tuesday, March 29, 2016

இணைந்து வாழ்தல்: ( பன்னிரு படைக்களம் -3 )


         ஒரு தம்பதியர் இணைந்து வாழும்போது இருவரும் காலப்போக்கில் ஒரே மாதிரியாக சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள் எனச் சொல்ல முடியாது. குடும்ப பொருளாதாரத்தைப் பேணலில், உறவுகளை அனுசரித்துப் போதலில், குழந்தைக்கு உணவளித்து வளர்ப்பதில் அவர்களை படிக்க வைப்பதில், என பல காரியங்களில் ஒருவர் சிந்தனையைப்போல் ஒருவர் சிந்தனை அமைவதில்லை. ஆனாலும் இந்தியாவின்  பெரும்பான்மையான குடும்பங்கள் சிக்கலின்றி வெற்றிகரமாக நடந்துவருகின்றன. அது எப்படி என்று பார்த்தால் ஒவ்வொரு விஷயத்திற்கேற்ப சிந்திப்பதையும் அதில் முடிவெடுப்பதையும் யாராவது ஒருவர் பார்த்துக்கொள்வார். ஒரு விஷயத்தில் இருவரும் சேர்ந்து முடிவெடுப்பதுபோலிருந்தாலும் உண்மையில் ஒருவர்தான் முடிவெடுப்பதில் முக்கியப் பங்கு ஆற்றுவார். மற்றவர் ஏதாவது சில ஆலோசனைகளைச் சொல்வதுடன் நிறுத்திக்கொள்வார்.   நாட்பட நாட்பட இந்த நடைமுறையை தம்பதிகள் அவ்ர்கள் அறியாமலேயே மேற்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். அதை இருவர் மனமும் ஒரே மாதிரி சிந்திக்கிறது எனச் சொல்ல முடியாது. சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய விஷயங்களை இருவரும் பகிர்ந்துகொள்கிறார்கள். இது அவர்கள் தம் மனம் அறிந்தும் அறியாமலும் நடந்துகொள்கிறார்கள். எப்போதாவது ஒருவர் பிரிந்து பல நாட்கள் வெளியூர் செல்லும்போது சில விஷயங்களுக்காக முடிவெடுக்க வேண்டிவரும்போது அதைப்பற்றி எத்தகைய அறியாமையில் தாம் இருக்கிறோம் என்பதை மற்றொருவர் உணர்கிறார். அப்போதுதான் இதற்கான சிந்தனையை முன்னெடுத்து முடிவெடுத்து செய்லபடுத்தியதில் தான் அதிகம் பங்குகொள்ளவில்லை  என்பதை உணர்கிறார். ஆனால் இதில் ஒன்றும் தவறில்லை. இப்படி சிந்தனையை பகிர்ந்துகொள்வதால் வாழ்வு இருவருக்கும் இலகுவாகிறது. இருவரும் குடும்பத்திற்கென அதிகம் பயனளிக்கும்படி பங்காற்ற முடிகிறது.  தம்பதியர் மனங்கள் இப்படி ஒட்டி வாழ்தல் கூட்டாக அவர்களை மிகவும் திறனுடையவர்களாக ஆக்குகிறது.


   விதிவசத்தால் அவர்கள் ஒற்றையாளாக பிரிந்துவிட நேரிடும்போது(பெரும்பாலும் அது ஒருவர் இறப்பினால் இருக்கும்)  அவர்கள் தன் சிந்தனைத்திறனில் ஒரு பாதியை இழந்தவர்களாக கையறு நிலையை அடைகிறார்கள்.  அந்த இழப்பு குடும்ப பொறுப்புகள் அதிகம் இருக்கும்போது நேர்ந்தால்  குடும்பத்தை நடத்திக்கொண்டு செல்வது பாதிக்கப்படுகிறது. வயதான காலத்தில் பிரிவது குடும்பத்தை அதிகம் பாதிக்காது என்றாலும் தாம் உடலளவில் ஊனமுற்றதைப்போல் தவித்துப்போகிறார்கள்.


     இப்படி இருஉள்ளங்கள் இணைந்திருப்பதையும் பின்னர் அவை துண்டிக்கப்படுவதின் உளவியல் சிக்கல்களையும் உருப்பெருக்கி காட்டுகிறது ரம்பன் குரம்பன் கதை. அவர்கள் இணைந்தே வளர்கிறார்கள், இணைந்தே அறிகிறார்கள், இணைந்தே சிந்திக்கிறார்கள்,  இணைந்தே இவ்வுலகை உணர்கிறார்கள்.  அவர்கள் சிந்தனையில் முரண் என்பதே இல்லாத காரணத்தால் இருவரும் தம்மை ஒருவரெனக் கொண்டிருகின்றனர்.   ஆனால் அவர்கள் இணைந்து சிந்திக்கிறார்கள் என்பது இருவரும் ஒரே சிந்தனை கொண்டிருக்கிறார்கள் எனப் பொருளாகாது. ஒருவர்  சிந்திக்கும் ஒரு விஷயத்தை இன்னொருவர் மேற்கொண்டு சிந்திக்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என எண்ணங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை வலுக்கட்டாயமாக பிரித்துவிடும்போது ஒவ்வொருவரிடமும் எண்ணங்களில் வெற்றிடம் ஏற்படுகிறது. அதனால்  தன்னை குறையுள்ளவர்களாக உணர்கிறார்கள். தன்னை முழுமையாக்க இன்னொருவன் தேவைப்படுவதை அறிகிறார்கள். அவனின் சிந்தனையோட்டம் சேராமல் தன்னுடைய சிந்தனையோட்டம் முழுமை பெருவதில்லையாதலால் இருவரும் பிரிந்த பின்னர் பெரிய அளவில் உளச்சிக்கலுக்கு உள்ளாகிறார்கள்.  தன் வாழ்வில் மற்றொருவனின் இன்றியமையாமையை அறிவது,  முதலில்  மற்றொருவன்பால் நேசத்தையும், பின்னர் கடும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அவர்களின் ஒருவரையொருவர் நேசித்துக்கொள்ளுதலும் விரோதித்துக்கொள்ளுமான  முரண்பட்ட இந்த நடவடிக்கைகளை  இவ்வாறு நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம் என நினைக்கிறேன்.

தண்டபாணி துரைவேல்