Friday, March 18, 2016

வெண்முரசு விவாதக்கூட்டம் சென்னை




அன்பிற்கினிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கங்களுடன் அ மலைச்சாமி எழுதுகிறேன்.

சென்ற ஞாயிற்றுகிழமையன்று சென்னையில் நடந்த வெண்முரசு கலந்துரையாடலில் புதியவனாக நான் கலந்து கொண்டேன். இதுவரை நான் கலந்துகொண்ட இலக்கிய கூட்டங்களுள் தாங்கள் பங்கேற்கும், தங்கள் வாசகர்கள் நடத்தும் கூட்டங்கள் முற்றிலும் வித்தியாசமானவை.

இன்றும் சென்னையில் நடக்கும் பல இலக்கிய கூட்டங்களை, சில பரிதாபத்துக்குரியவர்களே நடத்துகிறார்கள். வருபவர்களுக்கு டீயும், தவிட்டு ரொட்டியும் வாங்கி கொடுப்பார்கள். அந்த காசுக்கும் கஷ்டப்படுபவர்கள். அவர்கள் பேசும் இலக்கியம் கூட அதுபோல்தான் இருக்கும். அவர்கள் யாருமே நவீன இலக்கிய ஆக்கங்களை வாசிப்பதோ, பேசுவதோ கிடையாது.

சோற்றுக்கு போதாத வருவாயில் நான் வாழ்ந்து கொண்டிருந்த சமயங்களில் இப்படிப்பட்டவர்கள்தான் என்னை ஊக்கப்படுத்தினார்கள். ஆனால் இவர்களால்தான் நான் இலக்கியம் வாசித்தேன் என்று என்னால் நம்ப முடியவில்லை.

நான் இலக்கியத்தை வெறுத்த நாள் ஒன்று உண்டு. 2005 ல் சென்னையில் நான் மேற்சொன்ன வகையிலான இலக்கிய கூட்டத்தின் கவியரங்கில் கவிதை என்ற பேரில் சிலர் வாசிக்க கவியரங்க தலைமை என்ற பேரில் நான் முறைப்படுத்தி கொண்டிருந்தேன்.

அந்த விழா முடிந்து நான் வீட்டுக்கு கிளம்பி பேருந்து நிலையம் வந்து சட்டையை தடவினால் சட்டைப்பையில் வெறும் மூன்று ரூபாய் மட்டுமே இருந்தது. பேருந்து நடத்துனரை ஏமாற்ற மனமில்லாமல் கிண்டியில் இறங்கி அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் நடந்து அறைக்கு சென்றேன். அதன் பிறகு அது போன்ற கூட்டங்களுக்கு நான் செல்வதே இல்லை.

இதே நிலைமை சென்ற ஞாயிற்று கிழமையும் நடந்தது. நான் ஒரு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து விடலாம் என்ற நினைப்பில் சோறு வடிக்காமல் கலந்துரையாடலுக்கு வந்துவிட்டேன். ஆழ்வார் திருநகரில் விழா நிறைவுறும் போதே மணி எட்டரையாகிவிட்டது. என் பையில் இருபது ரூபாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் அந்த காசில் நான்கு இட்லி வாங்கிக்கொள்ளலாம் என்று எண்ணி வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தேன். பத்து மணிக்கு ஓட்டல் அருகே வந்து பையை துழாவினால் 18 ரூபாய்தான் இருந்தது. வேறு வழியில்லாமல் 10 மணிக்கு வீட்டுக்கு சென்று சமைத்து சாப்பிட்டேன். அந்த 18ம் மிச்சம்.

2005 ல் நடந்த தூரத்தை காட்டிலும் அன்று நடந்த தூரம் அதிகம். ஆனால் கொஞ்சம் கூட கோபமோ, விரக்தியோ இல்லை. மாறாக மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தேன். 

கலந்துரையாடலில் வழங்கப்பட்ட உணவும், அதில் பேசிய கருத்துகளும் என்னை வெகுவாக கவர்ந்தது. ஒரு சிறந்த இலக்கிய அனுபவமாக மாற்றியது. இதுவரை நான் பங்கேற்ற பலநூறு இலக்கிய  கூட்டங்களில் ஒன்றில் கூட இவ்வளவு நுட்பமான வாசகர்கள் இருந்தததே இல்லை. அதைவிட முக்கியம் இதுவரை நான் கலந்து கொண்ட எல்லா இலக்கிய கூட்டங்களிலும் நானே மிக இளையவனாக இருப்பேன். ஆனால் என்னிலும் இளையவர்களாக அரசன், அஜிதன் என இன்னும் சிலர் இருந்தனர்.

கலந்துரையாடலில் அதிகமாய் பேசப்பட்ட பாத்திரம் துரோணர்தான்.

என் வாசிப்பில் வெண்முரசின் கதா பாத்திரங்கள் அனைத்தும் ஒரு தத்துவ தரப்பாகவே உணர்கிறேன். வெண் முரசு முழுக்கவே சூதர்கள் சொல்லும் தத்துவங்களுக்கு விளக்கங்களாகவே கதாபாத்திரங்கள் உரையாடுகிறார்கள். சில இடங்களில் கதா பாத்திரங்களின் உரையாடல்களை, நிகழ்வுகளை சூதர்கள் தத்துவங்களாக தொகுக்கிறார்கள். ஆகவே சூதர்களின் உரையாடல்களை நான் மிகவும் சிலாகித்து வாசிப்பதுண்டு.

என் முதல்குருவான திரு.கோவி மணிசேகரன் அவர்களின் யாகசாலை என்ற புதினத்தின் கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு தத்துவ தரப்பாகவே அமைந்திருப்பதை நான் ரசித்து வாசித்திருக்கிறேன்.

கலந்துரையாடலில் வெண்முரசு கதாப்பாத்திரங்களின் தத்துவத்தன்மையை கவனிக்க வேண்டும் என்று நான் கூறினேன். ஏற்கனவே நீங்கள் கூறியதாகவே நான் கூறினேன். அதன்பின் இரண்டு மணி நேரம் வெண்முரசின் தத்துவ விவாதமாகவே நகர்ந்தது. அஜிதன் தத்துவ கடலில் மூழ்கி கலந்துரையாடலை ஒரு ஆழமான நிலைக்கு கொண்டு சென்றார். அதுதான் வெண்முரசு வாசிப்பின் கூர்மை என நான் நினைக்கிறேன். நானோ கரையில் நின்று பாதுகாப்பாக வேடிக்கை மட்டுமே பார்ப்பவன். இன்னும் தத்துவங்களின் பெயர்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை. ஆனாலும் பிடித்திருக்கின்றன.  


தல்ஸ்தோய், காண்ட் பற்றியெலாம் அஜிதன் பேசினார். நான் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு நாவலை மட்டும் வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் வாசிக்கவில்லை. அஜிதன் சொன்ன பின்பு அந்த புத்தகம் இதுவரை இருந்ததை காட்டிலும் இப்போது சற்று அதிகமாகவே என்னை உறுத்திக்கொண்டுள்ளது.  

மொத்தத்தில் இலக்கிய கூட்டங்களுக்கு வெண்முரசு கலந்துரையாடல் ஒரு ஆரோக்கியமான புதிய இலக்கணத்தை எழுதி வருகிறது.

அன்பன்
அ மலைச்சாமி