அன்புடன் ஆசிரியருக்கு
அதற்குப் பிந்தைய
உண்டாட்டு பானுமதியிடம் துரியோதனன் தயங்குவது துச்சலையின் மைந்தன்
நூற்றுவர்களின் புதல்வரோடு ஒட்டிக் கொள்வது அடங்காமல் அலைபவர்கள்
திருதராஷ்டிரருடன் மௌனித்து இசை கேட்பது ஜெயத்ரதன் திருதராஷ்டிரரிடம்
தன்னை வெளிப்படுத்துவது கர்ணனுக்கு தன்னையே அவன் ஒப்புக்கொடுப்பது என
கண்ணீரும் உவகையும் கலந்து பெருகிய வெய்யோன் விடிவெள்ளி எழுந்து பீமன்
நகர் நுழைகையில் "நான் உங்களில் ஒருவன் அல்ல" என திரும்பிச் சென்று
விடுகிறான்.
அதன்பின் அவன் கருணையையும் பெருந்தன்மையையும் துரியோதனன்
சூடிக் கொள்கிறான். கர்ணன் நாகர்களை சந்திக்கும் இடத்திலிருந்து வேறொரு
உலகம் திறந்து கொள்கிறது. ஜராசந்தனின் அறிமுகம் பதற்றமடையச் செய்து
துரியோதனனுடன் அவன் தோள் கோர்த்த பின் இயல்பாகிறது. துரியோதனன் உயர
உயர கர்ணன் ஆழம் நோக்கிச் செல்கிறான். திரௌபதி மணிமுடியை அணியாதது
கர்ணன் நுண்மையாக அவமதிக்கப்படுவது என அனைத்தையும் துரியோதனன் கடந்து
செல்கிறான். அங்கத நாடகம் சிறப்பான இடைவெளி.
ஆனால் அதுவும் பழியில்
வந்தே முடிகிறது. அதன்பின் நாகனிடம் கேட்கும் விழைவும் வஞ்சமும்
நிறைந்து குருதி கொண்ட வரலாற்றுடன் கர்ணன் எழுகிறான்.
அந்நகரும் கர்ணனுமே அங்கிருக்கிறார்கள். அவன் விழிகள்
வழியாகவே திரௌபதி சமைக்கப்படுகிறாள். அந்நாகனே கர்ணன் தானோ என்ற ஐயம்
எழுகிறது. ஏனெனில் அந்த அங்கத நாடகத்தின் பின்பு தான் அவனுக்கு காண்டவ
வன அழிப்பு முழுச் சித்திரமாக தெரிகிறது. பெருங்காதலும் பெருவஞ்சமும்
கொண்ட ஒருவன் பெருங்கருணை கொண்ட மற்றொருவன். நாளை என்ன நிகழுமோ என்ற
பதைபதைப்பு தினம் ஏறி வருகிறது.
என் புகைப்படத்தை பார்த்தபோது சற்று குழப்பமாக இருந்தது.
அடிக்கடி பார்ப்பதால் முதலில் ஒன்றும் தோன்றவில்லை. அதன் பின்னரே அது
இருக்கும் தளம் உங்களுடையது என நினைவெழுந்தது. துள்ளி மகிழ்ந்தேன்.
நன்றி
அன்புடன்
சுரேஷ் ப்ரதீப்
சுரேஷ் ப்ரதீப்