ஜெ,
பிரபஞ்ச தரிசனம் எனும் பெருவெடிப்புக் கொள்கையில் ஆரம்பித்த வெண்முரசு துவக்கம் முதலே தனக்கான அறிவியல் நோக்கினைக் கொண்டுள்ளது. மீயதார்த்தங்கள் கூட கனவுகளிலோ மயக்க நிலைகளிலோ அல்லது சூதர் பாடல்களிலோ தான் வருகின்றன. ஆனால் வெய்யோனின் சில தகவல்கள் அவை சாத்தியம் தானா எனும் கேள்விகளை எழுப்புகின்றன. அவை :
1 . காண்டவ வன எரிப்பின் போது கந்தகம் கலந்த சீனர்களின் வெடி பொருள் பயன்படுத்தினர் என்பது- - சீனர்கள் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தான் அவற்றைக் கண்டு பிடித்தனர் என தரவுகள் சொல்லுகின்றன. மேலும் ஈரம் நிறைந்த இடங்களில் அவை நீரில் ஊறி வெடிக்காது போய் விடும் என்பது என் ஐயம் .
2. சூரிய கிரகணம் கருநிலவு நாளில் தான் வரும் என்பது அறிவியல். பீமன் முழு நிலவு நாளில் விழவு என்று தான் துரியனை அழைக்கிறான். அன்று நிகழும் கிரகணமும் குறியீட்டு நோக்கில் மிகவும் பொருந்தினாலும் நிகழ் தகவினை கேள்விக்குள்ளாக்குகிறது.
வழக்கம் போல் தயக்கமும், சோம்பேறித் தனமும்.தாமதத்திற்கு மன்னிக்கவும்.
செந்தில்நாதன்
அன்புள்ள செந்தில்நாதன்,
வெண்முரசு நாவல்கள் முன்வைக்கும் புனைவில் மானுட உணர்வுகள், உறவுச்சிக்கல்கள், அரசியல் ஊடுபாவுகள், வரலாற்றுப்புலம் ஆகியவை யதார்த்தம் சார்ந்து இருக்கும்.
அந்த யதார்த்ததின் மேலேயே சாகஸம் சார்ந்தும் தொன்மம் சார்ந்தும் மிகைக் கற்பனை இருக்கும். சாகசங்கள் சிறுவர்கதைகள் போலவும் தொன்மங்கள் தேவதைக்கதைகள், குலக்கதைகள், பேய்க்கதைகள் போலவும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மிகைபுனைவு மகாபாரதத்தின் பௌராணிகத்தன்மை அளிக்கும் சுதந்திரத்தை, குறியீட்டுத்தன்மையை தக்கவைப்பதற்காக. சிறுவர்கதையின் அழகியலைத் தவறவிட்டுவிட்டு புராணம் அமையமுடியாது.
போர்க்களக்காட்சிகள் அத்தகைய சாசசப்புனைவு வகையானவை. சிறுவனாக உருமாறி வாசகன் செல்லவேண்டிய இடங்கள் அவை. அவற்றுக்கு ஒரு சாத்தியக்கூறுத்தன்மை இருந்தால் மட்டும் போதுமானது.
வெடிமருந்து விஷயத்தில் அந்த சாத்தியக்கூறு என்னவென்றால் கிமு ஒன்றாம்நூற்றாண்டிலேலேயே சீனர்கள் வெடிமருந்து குறித்து எழுதிவிட்டார்கள். அதன் வெடிச்சாத்தியங்கள் பற்றி
அப்படியென்றால் அதற்கு முன்னரே கந்தகத்தின் எரியும்தன்மை குறித்து அவர்கள் அறிந்திருக்கக்கூடும். அது அழுத்ததில் வெடியாக ஆகும் என்பதை அறிவதற்கு பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே விரைவில் எரியும் ஒன்றாக அதை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். சீன பேரிலக்கியங்களில் எரியம்புகள் பற்றிய ஏராளமான வர்ணனைகள் உள்ளன
இரண்டு, கந்தகம் பற்றிய ஞானம் மகாபாரதக் காலகட்டத்திலேயே இருந்தது. நாற்றமடிப்பது என்னும் பொருளில் அது கந்தகம் எனப்பட்டது. கந்தகம் உமிழும் கந்தமாதன மலை பற்றிய குறிப்புகள் மகாபாரதத்தில் உள்ளன
ஆகவே விரைவாக எரியும் பொருளாக கந்தகக்கலவை பயன்படுத்தப்பட்டிருக்க ‘சாத்தியம்’ உண்டு. அது போதும் புனைவுக்கு. எரிபொருளாக அதை நனையாமல் கொண்டுசெல்வதெல்லாம் பெரிய விஷயம் அல்ல.
சூரியக்கிரஹணம் நிலவின் தொடக்க நாட்களில் மட்டுமே வரும். அப்படித்தான் இந்திரப்பிரஸ்தத்தின் நிமித்திகர் கணித்துமிருந்தனர். ஆனால் மிக அபூர்வமான ஒரு நிகழ்வாக அது நிகழ்ந்தது என்றே நாவல் சொல்கிறது. நிகழாது, நிகழ்ந்தது என்று. அது இரண்டாம்வகையிலான ஒரு ஃபேண்டஸி மட்டுமே.
ஜெ