Sunday, March 13, 2016

மனிதர்கள்

 
 
//என் கண்ணில் பீமார்ஜுனர்களின் கண்ணில் தெரியும் பகைக்கு சரியான காரணங்கள் இல்லை.//

நாம் இதுவரை படித்திருப்பது ஒரு பக்கத்தை அல்லவா. அடுத்த பக்கத்தையும் படித்தால் விவரம் தெரியலாம்.  வெய்யோன் முழு கதையும் கர்ணனின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுகிறது. பாண்டவர் தரப்பு எண்ணங்கள் பதியப் படவேயில்லை. ஒரு வேளை அடுத்த பகுதியில் இதற்கான காரணங்கள் சொல்லப்படலாம்.

    மற்றொன்று மனிதர்கள் நடவடிக்கைகள் வெளி விதிகளால் நிர்ணயிக்கப்படுவதில்லை.  அவர்களின் மனதில் இருக்கும் வஞ்சம், பொறாமை, ஆசை போன்ற பல்வேறு காரணிகளால் நிகழ்த்தப்படுகின்றன.  துரியோதனன் மேல் பீமனுக்கும் அர்ச்சுனனுக்கும் இருக்கும் கோபத்திற்கு அவர்கள் தரப்பில் காரணங்கள் இருக்கக்கூடும். கதை ஒரு உச்சத்தில் இருக்கும்போது வெய்யோன் முடிந்துள்ளது.  இன்னும் சொல்லப்படவேண்டியவை அதிகம் இருக்கின்றன. அவை அடுத்தப் பகுதியில் தொடரும் என்று தோன்றுகிறது.

//  உண்டாட்டுக்கு அழைத்துவிட்டு தருமன் எங்கே போக முடியும்?//
அது பெரிய மாளிகை நூற்றுக்கணக்கனவர் குழுமி இருக்கும் இடம். உணவு அறைக்கு வெளியே இருக்கும் கூடத்தில்தான் இந்த நிகழ்வு நடக்கிறது. அந்த நேரம் உண்ணும் அறைக்கு விருந்தினர் சென்றுகொண்டிருக்கின்றனர். பலராமர் கண்ணன் போன்றோர் முதலிலேயே உள்ளே சென்றுவிட்டிருக்கக்க்கூடும். தருமன் உள்ளிருந்து அவர்களை அமரவைத்துக்கொண்டிருந்திருக்கலாம். அதனால் அவர்களுக்கு அந்த நிகழ்வே முற்றிலுமாக அப்போதைக்கு தெரிந்திருக்காமல் போயிருக்கலாம். அவர்கள் இந்த நிகழ்வை அறிந்த பின்னர் என்ன நடந்தது என்பது அடுத்த பாகத்தில்தான் சொல்லப்படும். இதில் சொல்லப்படமுடியாது. ஏனென்றால் அங்கு கர்ணன் இல்லை. கர்ணன் இல்லாத இடத்து நிகழ்வுகள் வெய்யோனில் சொல்லமுடியாது. ஆக அடுத்தப்பகுதி வரும்வரை  பொறுத்திருக்கவேண்டும். வேறு வழியில்லை என நினைக்கிறேன்.

தண்டபாணி துரைவேல்