Saturday, January 9, 2016

வெகுண்டு எழும் காமம் (வெய்யோன் - 13)



    பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். ஏனென்றால் ஒருவனுக்கு பசி எடுப்பது அவனின் உயிரைக் காத்துக்கொள்ள இயற்கை விடுக்கும் அழைப்பு, ஒரு எச்சரிக்கை. அதை அவன் தொடர்ந்து மீறினான் என்றால் அவன் உயிர் துறக்க  வேண்டியிக்கும்.  உயிர் வாழ்வது இயற்கை ஒருவனுக்கு அளித்திருக்கும் முக்கிய கடமை.  இதை அவன் தன் உள்ளுணர்விலும் சிந்தையிலும் அறிந்திருக்கிறான்.  ஆகவே தன் உயிர் காக்க அவன் தன் பசியினைப் போக்கிக்கொள்ளவேண்டும். ஒருவன் தன் பசியைப் போக்கிக்கொள்வதற்கான உரிமை உண்டு என உலகம் சொல்கிறது. அப்படி தன் பசியை தானே போக்கிக்கொள்ள உணவு கிடைக்காத ஒருவனுக்கு உலகத்தினர் உதவ முற்படுகின்றனர்.  சிலர் இதன் காரணமாக சிறு தவறுகள் செய்யும்போது உலகம் அதை கரிசனத்தோடு பார்க்கிறது. அவனை அதற்க்காக மன்னிக்க ஒத்துக்கொள்கிறது. 
  
 அதே நேரத்தில் ஒருவருக்கு காம இச்சை ஏற்படுவது என்பதும்   ஒருவர் உடல் கொண்டிருக்கும் மூல விதிகளில் ஒன்று.  காமத்தைப்பொறுத்தவரை உயிர்கள் இயற்கையின் கைப்பாவை.   இயற்கை உயிர்கள் தன் அறிவினால் தானாக தன்  சந்ததிப் பெருக்கத்திற்கு முயலவேண்டும் என வைக்கவில்லை.   அது  உயிர்களின் சந்ததியைப் பெருக்க காம இன்பம் என்ற மாய வழியின்மூலம்  விலங்குகளை ஈடுபட வைக்கிறது.  இந்த காம இன்பத்தின் பொருட்டே உயிர்கள் தன சந்ததிப்பெருக்கத்தை நடத்துகின்றன.  ஆனாலும் மனிதன் சிந்திக்கத்தெரிந்தவன். இயற்கையின் இந்த மாய விளையாட்டை அவனால் உணர்ந்துகொள்ள முடியும். அப்படியிருந்தும் ஒரு சாதாரண சிற்றுயிர்களைப்போலவே இந்த விஷயத்தில் மனிதன் நடந்துகொள்கிறான்.  காம இச்சையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்பதற்கு பதிலாக, அல்லது காம ஈடுபாட்டை குறைத்துக்கொள்வதற்கு பதிலாக,  அதில் இன்னும் காரம், மணம் எல்லாம் சேர்த்து அதிகரித்துக்கொள்கிறான்.  
      
 ஆனால் இந்த இச்சை ஒருவர் தவிர்க்க முடியாத ஒன்றல்ல. தன் காம இச்சையை தீர்த்துக்கொள்ளாத ஒருவர் அதனால தன் உயிரை இழப்பது இல்லை. அவர் வேறு  எவ்வித இழப்பையும் அடைவதில்லை.   அதனால் காம இச்சைக்காக பத்தில் ஒன்றுகூட பறக்க வேண்டிய அவசியம் இல்லைஎன தோன்றுகிறது.   கூடுதலாக காம இச்சையை தவிர்த்து வாழ மத நூல்கள், ஆன்மீக சான்றோர்கள் நமக்கு அறிவுறுத்துகின்றனர்.   உண்ணாவிரதம் இருக்கும் ஒருவனை உணவு உண்ண கட்டாயப்படுத்தும் உலகம்  காம இச்சையை தவிர்த்து வாழும் ஒருவரை போற்றிப் பாராட்டுகிறது.  காம இச்சையின் காரணமாக தவறு செய்யும் ஒருவரை கடுமையான கண்கொண்டு பார்க்கிறது. அவரை கேவலைப்படுத்தி  தூற்றுகிறது. அவருக்கு இயல்பாக வரவேண்டிய தண்டனையை விட இன்னும் அதிகமான தண்டனை தரவேண்டும் என மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர். சமூக விதிக்கு புறம்பாக ஆனால்  மனமொத்து இருவர்  காமத்தில் ஈடுபட்டால், அதனால் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையென்றால் கூட இவ்வுலகம்  அவர்களை சும்மா விடுவதில்லை
  
இப்படியெல்லாம் இருந்தும் காம இச்சையின் காரணமாக தவறு செய்பவர்களைப்பற்றிய செய்திகளால் நம்  நாளிதழ்கள் நிரம்பியிருக்கின்றன. தொன்னூற்று ஒன்பது சதவீதம் இக்குற்றங்கள் ஆண்களால்   நிகழ்த்தப்படுகின்றன. உணவுப்பசியை தீர்க்கும் போது உணவின்பம் கிடைப்பது மட்டுமல்லாது  நம் உடலில் சத்து சேர்க்கிறது. ஆற்றல் சற்று பெருகுகிறது. ஆனால் காம இச்சையை தீர்க்கும்போது ஒருவர் உடலின்பத்தைத்தவிர அடைவது வேறு ஒன்றுமில்லை.  மற்றொன்று வீட்டில் உணவிருக்கும்போது  வெளியில் கிடைக்கும் உணவுக்காக அறமற்ற செய்கைகளில் ஒருவர் ஈடுபடுவது அரிதினும் அரிது. ஆனால் காம இச்சையில் பொருட்டு தவறு செய்பவர்களில் பலருக்கு அவர்களுக்கென காமத்திற்கான துணையென வீட்டில்  ஒருவர் இருப்பவர்கள். பின்னர் ஏன் இத்தகைய குற்றங்கள் நிகழ்கின்றன என எண்ணிப் பார்க்க வேண்டும்.   இன்று வெண்முரசில் பிரஹஸ்பதியின் காமவேட்கையின் தீவிரம் காண்பிக்கப்படுகிறது.  அவர் செய்வது பெருங்குற்றம் என நமக்கு தெரிகிறது. ஏன் அத்தகைய செயலைச்செய்கிறார். விளைவுகள சீர்தூக்கிப்பார்க்காமல் அவர்  ஈடுபடுவது,  அவர் கொள்ளும் சீற்றம், பொருமையின்மை,  எதுவும் அவர் அடைந்திருக்கும்  ஞானத்திற்கு பொருத்தமாக இல்லை. 
     
  காமம்கொண்ட உயிர்கள் அப்போது பிறிதொரு குணத்தைக்கொள்கின்றன. முன்னர் இருந்த தன் இயல்பிலிருந்து வேறுபடுகின்றன. செயல்களில் தீவிரம் கொள்கின்றன.
 சித்தத்தை சிதறடித்து ஞானத்தை திரிப்பதில் காமத்திற்கு நிகரென பிறிதொன்றுமில்லை. காமம் கொண்ட களிறு பாறையில் மத்தகத்தை முட்டி உடைத்துக் கொள்கிறது. காமம் கொண்ட குரங்கு முகிலில் பாய்ந்து ஏற எண்ணி மரஉச்சியில் இருந்து தாவுகிறது. காமம் கொண்ட மான் நீர்ப்பாவையை துணையென்றெண்ணி ஆழ்சுனையில் குதிக்கிறது. காமம் கொண்ட பறவை வேடனின் வலையை வயலென்று மயங்குகிறது. (வெய்யோன் - 13)

     ஆனால் பெண் விலங்குகள் இப்படி அதிகமான மாற்ற்ங்களை அடைவதில்லை. ஏன் ஆண் உயிர்கள் மட்டும் இப்படி தன் இயல்பில்  மாறுகின்றன. ஆண் உயிர்களில் சில தன் உயிரை பணயம் வைத்து இணை சேர்கின்றன.  அதற்காக நாள் முழுதும் பெண் உயிரின் பின்னால் கெஞ்சலோடு ஓடுகின்றன. பெண் உயிரின் மனம் கவர பெரிய தோகையை விரித்து ஆடுகின்றன.  அழகிய கூடுகளைக் கட்டுகின்றன். மற்ற ஆண் உயிர்களிடம் கடும் போர் செய்கின்றன. அதில் சிலசமயம் அவை மற்ற ஆண் உயிர்களைக்  கொல்கின்றன அல்லது அவை கொல்லப்படுகின்றன.   இந்த காம வெறியின் காரணமாக சிலசமயம் புணர்வுக்கு இணங்காத பெண்ணுயிரைக் கொல்லும் கொடுமையும் நடக்கிறது. 
  

 ஆணுடலில் இருந்து ஒரு உயிர்பாதியும் பெண்ணுடலில் உயிர்பாதியும் சேர்ந்தே ஒரு உயிர் விதையென தோன்றுகிறது. அவை இரண்டும் சேர்ந்த அந்த உயிர்விதையின்  வாழும் இச்சை அந்த இருபாதிஉயிர்களின் வாழ்வு இச்சையின் கூடுதல் அல்லவா. அந்த உயிர்ப் பாதிகளின் வாழ்வு இச்சையே அவற்றை தன்னுடலில் கொண்டிருக்கும் உயிர்களின் காமஇச்சையென ஆகிறது என நாம் கருதலாம்.  அப்படிப்பார்த்தால் பெண் உயிரின் காமம் அதன் பெண்உயிரணுவின் வாழ்வு இச்சை. அதேபோல் ஒரு ஆணுயிரின்  காமம் அத் தன் உடலில் கொண்டுள்ள விந்தணுவின் வாழ்வு இச்சை.  மனிதர்களில்  அவை இரண்டும் சேர்ந்த அந்த உயிர்விதையின்  வாழும் இச்சை அந்த இருபாதிஉயிர்களின் வாழ்வு இச்சையின் கூடுதல் அல்லவா. அந்த உயிர்ப் பாதிகளின் வாழ்வு இச்சையே அவற்றை தன்னுடலில் கொண்டிருக்கும் உயிர்களின் காமஇச்சையென ஆகிறது என நாம் கருதலாம்.  அப்படிப்பார்த்தால் பெண் உயிரின் காமம் அதன் பெண்உயிரணுவின் வாழ்வு இச்சை. அதேபோல் ஒரு ஆணுயிரின்  காமம் அத் தன் உடலில் கொண்டுள்ள விந்தணுவின் வாழ்வு இச்சை. 
  

 ஒரு புணர்வின்போது ஆணிலிருந்து வெளிப்படும் விந்தணுக்கள் எண்ணிக்கை  குறைந்தபட்சம் நான்கு கோடியாகும். ஆக ஒரு ஆண் கொள்ளும் காமம் என்பது நான்குகோடி விந்தணுக்களின் வாழ்வு இச்சையின் கூடுதல். ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அந்த நான்கு கோடி விந்தணுக்களும் அப்பெண்ணைப் பார்க்கின்றன. தான் சென்று இணைசேரும் பெண்கருவணுவின் தரத்தை அவள் உடல் வனப்பிலிருந்து யூகிக்கின்றன.  தான் உயிர் பெறும் அளவுக்கு அவள் வலுவும் ஆரோக்கியமும் உள்ளவளா எனக் காண்கின்றன. தான் சென்று இணையப்போகும் கருவணுவின் ஆரோக்கியத்தை அப்பெண் கொண்டிருக்கும் வடிவழகைக்கொண்டு மதிப்பிடுகின்றன.  அவள் வயிற்றில் தான் வளரும்போது ஊட்டமளிக்கவும் பிறந்தபின் தனக்கு  உணவளிக்கவும் தேவையான கொழுப்பை உடலில் கொண்டவளா பெரிய மார்பகங்கள் உள்ளவளா எனப் பார்வையிடுகின்றன.  கண்ணில் படும் பெண்களில் இந்தத் தகுதிகளில் மேம்பட்டு இருப்பவரை அந்த விந்தணு  உயிர்கள்  தேர்வு செய்கின்றன.  முட்டாள் ஆண்,  தான்தான் அந்தப் பெண்ணை தேர்தெடுத்ததாக எண்ணிக்கொள்கிறான்.  அவன் இப்போது அந்த நான்குகோடி விந்தணுக்களின் வாழ்வு இச்சையால் இயக்கப்படுகிறான். தான் உயிரென பிறப்பதற்கு கொள்ளும் அவற்றின் வேட்கை ஒன்று திரண்டு அந்த ஆணின் காம இச்சையென   ஆகிறது. அந்த விந்தணுக்களின் போட்டியுணர்வும் பெண்ணுடலில் இருக்கும் அந்தப் ஒற்றைக் கருவணுவை அடையகொள்ளும் தீவிர இச்சைகளும் ஒன்று சேர்ந்து அவன் சிந்தனையில் பிரதிபலிக்கின்றன. அதன் காரணமாக ஒரு ஆண் காம வேட்கையில் நிலைமறந்து செயல்படுகிறான் என்று சொல்லலாம் அல்லவா?   நிலையழிந்த அவன் அப்பெண்ணின் காலில் விழுந்து கெஞுகிறான், . அவள் சம்மதிக்காதபோது அவள் கழுத்தைப் நெருக்கி மிரட்டுகிறான்.  இப்படி எழும் தீவிரமான காம எண்ணத்தை தடுத்துக்கொள்ளும் திறனில்லாதவன்,  காம இச்சைகொண்டு தவறுகள் செய்கிறான். அவன் செய்யும் இவ்வழி குற்றங்களுக்கு இயற்கையும் பொறுப்பு ஏற்றாக வேண்டும்.   


 ஆனால் மனிதன் இயற்கையால் ஏற்படும் இந்தக் குணவிகாரத்தை தன் சிந்தனையை சிறுவயதுமுதல்  பயிற்றுவிப்பதன்மூலம் சரி செய்துகொள்ளலாம்.  காம இச்சையில் தான் முறை தவறியது  இயற்கையின் விளைவு எனச்சொல்லி தப்பித்துக்கொள்ள ஒருவனை சமூகம் அனுமதிப்பதில்லை.  அதைக் கட்டுப்படுத்தி வாழும் வாழ்க்கை மட்டுமே சமூகத்தால் ஒத்துக்கொள்ளப்படும். ஒருவன் தன்னுள் எழும் இக்காம உணர்வை அது முறையற்று இருக்கும்போது, அதற்கான எண்ணங்கள் தோன்றும்போதே அதை தவிர்த்துவிட வேண்டும். இல்லையென்றால் ஒருவனின் சிந்தனையை ஒரு பனிப்போர்வையைபோல மூடி மறைத்து  அவனை வழிதவற வைத்துவிடுவதை காண்கிறோம்.   காம இச்சை ஒருவனின் உள்ளிருந்து வெகுண்டெழுந்து அவனை அறத்திலிருந்து வீழ்த்திவிடாமல் காத்துக்கொளவது முழுக்க முழுக்க அவன்பொறுப்பு மட்டுமே ஆகும்.

தண்டபாணி துரைவேல்