வெண்முரசில் அங்கதம் வெளிப்படும் இடங்கள் நிறையவே உள்ளன. குறிப்பாக பிரயாகையில் பீமன் வரும் இடங்கள். மேலும் நிறைய இடங்களில் மிக இயல்பாக நகைச்சுவை வந்து செல்லும். இன்றைய அத்தியாயம் அவற்றில் ஒன்று. அவை நடைபெறும் விதத்தை வெண்முரசு முதன்முதல் அவை அமரும் பிற குடித்தலைவர்கள் பார்வையில் இவ்வாறு சொல்கிறது. "குடிப்பேரவை அமைந்த சில நாட்களுக்குள்ளேயே குடித்தலைவர்கள் அனைவரும் அரசவை எப்படி செயல்படும் என்று அறிந்துவிட்டனர். அவர்களின் குடியவைகள் எப்படி நிகழுமோ அதைப் போலத்தான். அதாவது அங்கு ஒன்றுமே நிகழவில்லை. ஹரிதர் முன்னரே எடுத்த முடிவுகளை வினாக்களாக மாற்றி அவைமுன் வைத்தார். அவையின் முன்நிரையில் அமர்ந்திருந்த சிலர் அவற்றை எவ்வகையிலும் புரிந்துகொள்ளாமல் சில வினாக்களை கேட்க மிகச் சிறந்த வினாக்கள் என்று அவற்றைப் பாராட்டி சுற்றிவளைத்துச்செல்லும் விளக்கமொன்றை அளித்தார். அவற்றுக்குமேல் சொல்லெடுக்க இயலாது அனைவரும் அமர்ந்திருக்கையில் அந்த அவை அவற்றை ஏற்றுக் கொண்டதாக ஹரிதர் அறிவித்தார். "... ஒவ்வொரு வரியும் நிதர்சனம்...!!!
மேலும் இன்றைய பகுதி முழுவதிலுமே அங்கதச் சுவை ஓங்கி இருந்தது. இறுதியாக பீஷ்மரைப் பற்றிய கர்ணனின் எண்ணம் மிக அருமையாக வெளிப்பட்டுள்ளது.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்