Tuesday, January 5, 2016

கருணையின் கதிர்

இனிய ஜெயம்,



சத்ரியன் என்பவன் தன் இயல்பால், குருதியாற்றலால் ''எடுத்துக் கொள்ளப்'' பிறந்தவன். ராதேயன் நேர் மாறு, அவன் கொடுப்பதற்காக மட்டுமே வந்தவன். அந்த இயல்புடன் சத்ரியனாக நடிக்கவும் வழி அறியாதவன்.

உங்களைத்தான் நம்பி இருக்கிறான் இந்த மைந்தன் என்று ராதை வசம் சொல்கிறான். இப்படி சொல்லும் கணமே கர்ணனின் இடமும் தோல்வியும் உறுதி ஆகி விடுகிறது.
என் மகன் என்றால் என்ற ஒரே சொல்லில் அதிரதனும் அவனது மனைவியும் கர்ணனை சுருங்க வைக்கிறார்கள். வருடம் முன்னூற்று அறுபத்து ஐந்து நாளும் அதையே கர்ணன் நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டும் எனில் இது என்ன பிழைப்பு.?
தண்டனை அளிக்கப்பட கள்வனுக்கும், அவன் குடும்பத்துக்கும் இரங்குபவன், அவனது மனைவிகளுக்கோ அவர்களின் குருதி நாடாள்வதைக்காட்டிலும் எந்த நோக்கமும் இல்லை. இந்த சிறுமையில் இருக்கும் நியாயத்தையும், தான் அவர்களுக்கு இழைத்த அநீதியின் விளைவு என்றே காண்கிறான் கர்ணன்.
எத்தனை கணக்குகள், எத்தனை காழ்ப்புகள், அனைத்தும் ''தன்னை'' அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை. 

''என்னை விழைவோர் யாரும் இல்லையா?'' கர்ணனின் எளிய வினா. குடல் உள்ளே  சென்ற கூரிய வைரத்துணுக்கு எதை அளிக்குமோ அதற்க்கு ஒப்பான ஒரு வாழ்வு.
''நான் விழைவதை அதற்கும் மேலானதை கொடுப்பேன், ஆனால் என்னிடமிருந்து எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டேன்'' மீசையை வருடிய படியே சொல்கிறான் ராதேயன்.
சுப்ரியை தனது தாதியைக் கொண்டு, வெறும் தாதியைக் கொண்டு அங்க நாட்டின் களஞ்சியத்தை ''எடுத்துக்'' கொள்கிறாள். 
கர்ணன் “பிறரது வெற்றிகள் எனக்கொரு பொருட்டாக அல்லாமல் ஆகிவிட்டிருக்கின்றன செவிலியே. பார்ப்போம்” என்றபின் வெளியே நடந்தான்.

இனிய ஜெயம்,

இது என்ன மனநிலை என்றே விளங்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துயரத்துடன் தொடங்குகிறது. மிகுந்த மன பாரத்துடன்தான் இன்றைய உதயத்தை வரவேற்றேன்.  கோடி கோடி மந்திரங்கள் கொண்டு சூரியனைத் துதித்தோம்.  துதி கேட்டு மண் தொட்ட அவனது மைந்தனை ?......
கடலூர் சீனு..