Tuesday, July 5, 2016

வெற்றியில் அடையும் வீழ்ச்சி (பன்னிரு படைக்களம் - 88)



    வெற்றி பெற்றவுடன் நாம் அதைக் கொண்டாட ஆரம்பித்துவிடுகிறோம். வெற்றி அடைதல் என்பது மிகவும் கடினப்பட்டு மலையில் ஏறி ஒரு சிகரத்தை அடைதலைப்போன்றது. சிகரத்தை அடைந்தவுடன் களிவெறியில் குதித்தாடினால் ஒருவேளை நாம் அங்கிருந்து பெரும் பள்ளத்தில் விழ நேர்ந்துவிடலாம். அந்த வெற்றிச் சிகரத்தில் சில சமயம் வெகு கவனமாக இருக்க வேண்டியிருக்கும்.  

  வெற்றி எனும் பானம் நமக்கு போதை தருவது. அதனால் நம் கர்வம் தூண்டப்பட்டு வெறி கொண்டு குதித்து ஆடுகையில் நம் கால்கள் எவரையாவது மிதித்து துயரத்துக்கு ஆளாக்கிவிடும்.  நம்  கை விரல் நகங்கள் மற்றவர் முகங்களில் கீறி காயப்படுத்திவிடும். யாரையாவது இடித்து கீழே தள்ளி வீழ்த்திவிடுவோம்.
  

வெற்றிக்கு மற்றவர்களுக்கு இருக்கும் பங்கினை தர மறந்துவிடுவோம். அவ்விடத்திற்கு வழிகாட்டி நம்மை தூக்கிவிட்ட கைகளை, தாங்கிச்சென்ற தோள்களை, அறிவுரைத்த மதிகளை, ஊக்கம் கொடுத்த உள்ளங்களை  அலட்சியப்படுத்தி ஆணவத்தில் கண் பார்வை குறைபட்டிருப்போம். 
   

ஒரு செயல் மூலம் அடையும் வெற்றிக்கு தன் செயல்திறன் மட்டுமே காரணம் என்று நினைப்பவன் முழு மூடன்.  அச்செயலின் வெற்றிக்கு பின்னால் பலநூறு காரணிகள் இருக்கின்றன. அதில் ஒரு சிறு துளி பங்கு மட்டுமே தன் செயல் திறன் ஆற்றியிருக்கிறது என்பதை தெரியாதவன் ஒரு அறிவிலி மட்டுமே. உண்மையில் ஒருவனுக்கு அறிவு இருக்குமனால் நான் ஊழெனும் பெருந்தெய்வத்தின் கை பயன்படுத்திய  ஒரு சிறு பொறி என தன்னை அறிவான்,
  

இரமணரின் உபதேச உந்தியாரில் முதல் பாடல் இதைத்தான் உணர்த்துகிறது,
   கன்மம் பயன்தரல் கர்த்தனதாணையால்
   கன்மம் கடவுளோ உந்தீபற
   கன்மம் ஜடமாகும் உந்தீபற

    சூதாட்டத்தில் துரியொதனன் தரப்பு வெற்றியடைந்ததும் கொள்ளும் போதையில் எவ்வளவு கீழாக நடந்துகொள்கிறார்கள் என்பதை பார்க்கிறோம்.    திரௌபதி சுயவரத்தின் பின்பான போரில் தருமன் இவர்களை வென்று நிற்கையில்  அவன் எப்படி நடந்துகொண்டான் என்பதை ஒரு நொடியாவது நினைக்க முடியாமல் அந்தப் போதை அவர்கள் கண்னை மறைத்து நிற்கிறது. அது எவ்வித சூதும் அற்று உயிரைப் பணயம் வைத்து நிகழ்த்தப்பட்ட  மோது போர். எல்லாம் இழந்து  தருமன் காலடியில் துரியோதனன் நின்றபோது  தருமன் சொல்லை மாற்றிச் சொல்லியிருந்தால்  அவன் இந்நாளில் ஒரு அரசெனென தருக்கி நின்றிருக்க முடியாது. அதற்கு முன்னர் வாரனாவதநெருப்பு என்ற  வஞ்சகப்போரில் தருமன் உயிர்பிழைத்து அடைந்த வெற்றியில்  அவன் ஒரு சொல் திருதராஷ்டிரனிடம் சொல்லியிருந்தால் துரியோதனின் எலும்புகள்கூட இந்நேரம் மக்கிப்போயிருக்கும்.  அரசுரிமை பற்றிய  வாதப் போரில் வென்று முழு அரசையும் கையில் வாங்கிய  தருமன் அஸ்தினாபுர நகருடனான பாதி நாட்டை விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று ஒரு சொல் சொல்லியிருந்தால், இன்று நூற்று நான்கு தம்பியர்களில் ஒருவனாக நின்று துரியோதனன் தருமனின் ஏவல் கேட்டு நின்றிருப்பான்.  தருமன் தருமனாய் நிற்பதற்கு ஒரு முக்கிய காரணம், இவ்வாறு அவன் தன் வெற்றிகளை எதிர்கொண்டதுதான். 

      துரியோதனன் எவ்விதத்திலும் தனக்கு பெருமை சேர்க்காத செயலை அவன் செய்ய அவன் சூதில் அடைந்த வெற்றி காரணம் என ஆகிறது. தான் அடைந்த வெற்றியினாலேயே அவன் காலகாலத்திற்கும் நிலைக்கப்போகும் இழிவை அடைகிறான். இல்லறவாசி ஒவ்வொருவனும் தான் செய்யும் செயலுக்கு முதலில் நியாயம் சொல்ல வேண்டியது, தன் முன்னோர், பெற்றோர், ஆசிரியர், சமூகம்,  மனைவி, பிள்ளைகள் போன்றவர்களுக்காகும். அவர்களின் மனதுக்கு ஒவ்வாத செயலைச் செய்யும் உரிமை அவனுக்கு கிடையாது,  துரியோதனன் வெற்றிக்களிப்பில் தன் பிதாமகன், பெற்றோர், ஆசிரியர், மனைவியர், மகள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியூட்டும், அருவருப்பளிக்கும், அவமானப்பட வைக்கும் செயலைச்செய்கிறான். 

     மிருகங்கள் தாவரங்கள் என உலகின் அனைத்து உயிர்களும் தங்களுக்கான அறங்களை பேணிவருகின்றன. அவையவற்றிக்கான அடிப்படை அறங்களை அவை மீறுவதில்லை. சமூகத்தில் வாழும் மனிதர்களுக்கென்று சில அடிப்படை அறங்கள் உள்ளன. மக்கள் அதைப் பேணுகிறார்களா என கண்காணிக்கவேண்டிய பொறுப்பில் அரசன் இருக்கிறான். துரியோதனன் செய்யும் இதே இழிசெய்கையை ஒரு குடிமகன் செய்து அதற்காக துரியோதனன் முன் நிறுத்தப்பட்டிருந்தால் அவனை தண்டிக்கும் மன்னன் இவன். ஆனால்  அத்தகைய அரசனென இருக்கும் துரியோதனன் தன் சூதாட்ட வெற்றியை காரணம் காட்டி இந்த அடாத செயலைச் செய்கிறான்.   

    அப்படியென்றால் அவன் சூதின் வெற்றியை எப்படி சந்தித்திருக்கலாம் தன் வஞ்சத்தையும் அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் எப்படி தீர்த்துக்கொண்டிருக்கலாம என நாம் யோசித்துப்பார்ப்போம்.    

    சற்றே மதி நுட்பத்தோடு அவன் செயல் பட்டிருக்கலாம். வென்ற நாட்டினை திரும்ப தருமனிடம் அளித்து நீ என் சகோதரன் ஆகவே உன் நாடு எனக்கு தேவை இல்லை என சொல்லியிருக்கலாம். அதே நேரத்தில் என்றும் அஸ்தினாபுரத்தின் நட்பு நாடாகவே இருக்கும் என்ற உறுதியை கோரிப்பெற்றிருக்கலாம். அடையாள நிமித்தம் தன் மூதாதையரின் நாடான அஸ்தினாபுரத்திற்கும் திறை என்ற பெயரில் ஒரு சிறுதொகையளிக்க வேண்டும் என அவன் கூறியிருக்கலாம்.  அதன் காரணமாக இந்திரப்பிரஸ்தம் என்றென்றும் அஸ்தினாபுரத்தின் ஆதிக்கத்தின் கீழ் நின்றிருக்கும்.
  

தருமன் மற்றும் அவன் தம்பியரின் அடிமைத்தனத்தை விடுவித்திருக்கலாம். விடுவித்து பீமனிடம் " உன் அண்ணனால் நீ அடிமையனாய், நான் உன்னை விடுவிக்கிறேன்" என்று கூறியிருந்தால்  பீமன் என்றென்றுக்கும் துரியோதனனுக்கு கடன்பட்டவனாகியிருப்பான். இதன்மூலம் அவன் பீமனை வென்றவனாகிவிடுவதால் பீமனிடம் இருந்த பழைய வஞ்சத்தை தீர்த்துக்கொண்டிருக்கலாம்.

    திரௌபதியிடம் பாண்டவர் ஐவரை அழைத்துச்சென்று 'உன் ஐந்து கணவர்கள் எனக்கு அடிமையாகி உன்னையும் எனக்கு அடிமைப்படுத்தினர், அவர்களையும் உன்னையும்  விடுவித்து உனக்கு நான் வாழ்வு தருகிறேன்' என  சிரித்தபடி கூறியிருந்தால் அதுவல்லவா சிறந்த பழிதீர்த்தலாக இருந்திருக்கும். 
  துரியோதனன் தன் வெற்றிபோதையில் இந்த அத்தனை சிறந்த வாய்ப்புகளை தொலைத்துவிடுகிறான்.  விதுரர் அல்லது சகுனி போன்ற மற்றவர் அவனுக்கு அறிவுறுத்த நேரம் கொடுக்காமல் பொறுமையின்றி முடிவுகளை அவசரத்தில் எடுக்கிறான். 

   சூதாட்டத்தில் அடைந்த வெற்றியை தனதெனக்கொண்டு அகங்காரத்தைப் பெருக்கி அறத்தை மறந்து பெரிய இழிவை அவன் அடைந்து நிற்கிறான். சூதாட்டத்தில் அவன் தோற்றிருந்தால்கூட இந்த இழிவில் நூற்றில் ஒரு பகுதியைக்கூட அடைந்திருக்கமாட்டான் என்றே தோன்றுகிறது.