Saturday, July 2, 2016

மகாபாரதத்தின் பெண்கள்




பெருமதிப்பிற்குரிய ஜெ.,

தங்களது சிறுகதைகள், குறுநாவல்கள் மற்றும் பிற நாவல்கள் வழி வெண்முரசை வந்தடைந்து, இதுவரை ஓர் அத்தியாயமும் தவற விடாது வாசிக்கும் பற்பல வாசகர்களில் நானும் அடக்கம். மிகு உள விரைவைத் தரும் அத்தியாயங்களின் வழி, சூதாட்டக்களத்தின் இறுதியைப் படபடப்புடன் எதிர்நோக்கி இருக்கும் இத்தருணத்தில், நீண்ட நாட்களாக்க் கேட்க விழைந்த ஒன்றைக் கேட்டு விட சட்டென்று எண்ணம் தோன்றியது.

ஒரு வாசகர் சொன்னபடி, வெண்முரசின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அதற்கென ஒரு வடிவை, பண்பை, முழுமையைக் கொண்டிருக்கும். கெளரவர் முழுக்க தீயவர், பாண்டவர் மிக நல்லவர்கள் என்ற பொதுப் பிம்பமெல்லாம் சிதறிப் போனது வெண்முரசு வழி. துரியோதனன் மீது பரிவு பொங்கியும், பீமன் மீது காழ்ப்பு கொண்டும் கடந்த அத்தியாயங்கள் பல. 

நான் அவதானித்தவரை, வெண்முரசின் ஆடவர் அனைவருமே...சகுனி, துரியோதனன் உட்பட, மிகு பருந்தன்மை கொண்டோராகவும், சில தவிர்க்கவியலாச் சூழலின் காரணமாகவே...முக்கியமாக சிறுமை அடைதல்/ பெரும் நேசம் காரணமாகவே சூழ்ச்சி, சிறுமதியை அடைவதாகவும் அமைகிறது.

மாறாக சத்யவதி முதலாக, குந்தி, காந்தாரியர், திரெளபதி, கர்ணனின் துணைவியர் என கிட்டத்தட்ட அனைவருமே பெரும் சுயநலம் கொண்டோராகவும், சூழ்ச்சி, சிறுமதி நிறைந்தோராகவும் உள்ளனர். பானுமதி போன்ற ஒருசிலர் விலக்கு. 

'பிரயாகை'யில் இருந்தே தோன்றிக் கொண்இருக்கும் வினா இது. எதனால் அப்படி? இன்றும், வெளி வாழ்வின் மகிழ்வு, ஒன்றே போன்ற வாழ்வின் இறுக்கத்தில் உள்ள பெண்கள் பிறரை விட மிகு சூழ்ச்சி உள்ளோராகவும், சட்டென யாரையும் காயப்படுத்தி விடுவோராகவும் இருப்பது கண்டிருக்கிறேன். சகலத்தையும் மனதில் போட்டுப் புழுங்கியே போய்ச்சேர்ந்த பெண்களும் உண்டென்றாலும், வெண்முரசின் பெண்களின் சிற்றுள்ளம் என்பது அரண்மனை வாழ்வு, அரசியலுக்காக மணம் ஏற்றல் போன்ற காரணிகளால்தானோ என்று தோன்றுகிறது. குந்தி, சத்யவதி எல்லாம் சுதந்திரமாகத் திரிந்தாலும், அரண்மனையின் பதவி விழைவு சூழ்ச்சியில் தள்ளுகிறதோ?! இல்லை என் புரிதல் பிழையா?

நேரத்துக்கு மிக்க நன்றி. 
ஒரு வாசகி.

அன்புள்ள ஜி

வெண்முரசின் பெண்கள் அனைவரும் அப்படி ஒரு டைப்புக்குள் வருகிறார்கள் என தோன்றவில்லை. மகாபாரதத்தின் போக்கை தீர்மானித்த அரசியரே முக்கியமான கதாபாத்திரங்கள். அவர்கள் மண்ணாசை கொண்டவர்களும் நிமிர்வுள்ளவர்களுமாக இருக்கிறார்கள் அவ்வளவுதான்

ஜெ