Friday, July 1, 2016

தன்னைத் தருக்கி எழும் ஆண்மையின் சிறுமை
திரௌபதி அவைக்களத்துக்கு இழுத்து வரப்பட்டு அவமானப் படுத்தப் படுவது ஒன்றும் சடுதியில் நிகழ்ந்த நிகழ்வு அல்ல. படிப்படியாக ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு அங்கிருக்கும் அனைவரின் ஒப்புதலின் படியே நடத்தப்பட்ட ஒன்று. அந்த அனைவரில் பிதாமகர் பீஷ்மர், ஆச்சாரியார் கிருபர், துரோணர், பேரமைச்சர் விதுரர், கௌரவ நூற்றுவர், கர்ணன், பாண்டவர் ஐவர், அஸ்தினபுரியின் ஒட்டுமொத்த குடியினர் என அனைவருமே அடக்கம். ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு நியாயங்கள்!!

ஆனால் அவையனைத்தும் அவர்கள் பிறந்ததில் இருந்தே எந்த ஒரு பெண்ணைப் பற்றி தன்னிலும் பெரிதாய், அணுக இயலாததாய், வென்று கடக்க இயலாததாய், கீழடக்க இயலாததாய் இருக்கும் செய்திகளை மட்டுமே கேட்டு, இயலாமை ஒன்றினால் மட்டுமே அதை ஏற்றுக் கொண்ட ஆண்மைகளின் கீழ்மை மட்டுமே. இக்கீழ்மைகளுக்கு தெய்வங்களும், தேவர்களும், அசுரர்களும், விழைவையே வடிவாகக் கொண்ட ஆண் நாகங்களும், மானுடர்களும் என எவருமே விலக்கில்லை. திரௌபதியை தருமன் பணயம் வைக்கும் முன் தென்மேற்கு மூலையில் இருந்து ஊறிப் பெருகி, நீரில் கரையும் வண்ணமாக கோடிட்டுப் பரவி அவை நிறைத்த தேவியரைக் கண்டவுடன் அத்தனை தேவர்களும் கைசேர்த்து ஒன்று கூடுகின்றனர், அத்தனை அசுரர்களும், அரக்கர்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து கரிய படலமாக மாறுகின்றனர், அத்தனை நாகங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு வடமாக மாறுகின்றன. அத்தனை தேவியரைக் கண்டபின் எந்த தேவனும், எந்த முனிவனும், எந்த நாகனும் தருமனிடம் ஒன்றுமே சொல்லவில்லை. அவனை சூதில் இருந்து விலக்க முயலவில்லை. இயல்பாக அனைவருமே தருமனின் பணயப் பொருளை ஏற்றுவிட்டிருந்தனர். அந்த அணுவிடை அணுக்கத்தைத் தான் மாமயிடன் அனைவருக்கும் தான் ஒருவனே நிகர் என்றும், அணுக்கத்தில் ஒரு அணுவிடை அதிக நெருக்கம் என்றும் சொல்கிறான். அத்தனை அறங்களும், அத்தனை வேதங்களும், அத்தனை நன்னூல்களும், அத்தனை வீரங்களும் சொல்லிழந்து, கீழ்மையின் தருக்கத்துக்கு வழிவிடுகின்றன. இயலாமை கொண்ட ஆண்மைகள் ஒன்று சேர்கையில் எழும் கீழ்மைகளுக்கு எல்லையில்லை.


ஆம், அவ்வாறு தருக்கி எழுந்த ஒரு ஆண்மைகள் தான் அன்னை சீதையை எரி புக வைத்தன. அவ்வாறு தருக்கிய ஆண்மைகள் தான் புலோமையை, ரேணுகையை, அகலிகையை, மாதவியை, கண்ணகியை அவமானப்படுத்தின, உயிரையே கூட எடுத்தன. அவ்வாறு தருக்கிய ஆண்மைகள் தான் திரௌபதியை ஆடையவிழ்த்து கீழடக்க எண்ணின. அவ்வாறு தருக்கிய, தருக்கும் ஆண்மைகள் தான் இன்று இணையத்தில் பெண்களை எத்தரத்திற்கும் கீழிறங்கி பேசி ‘like’குகள் அள்ளச் சொல்கின்றன. அவ்வாறு தருக்கிய ஆண்மைகள் தான் தன்னை முந்திய பெண் ஓட்டும் வாகனத்தை எப்பாடுபட்டேனும் முந்திச் செல்லச் சொல்கின்றன. அவ்வாறு தருக்கிய ஆண்மைகள் தான் மனைவியை அடித்து அடக்கச் சொல்கின்றன. அவ்வாறு தருக்கிய ஆண்மைகள் தான் மறுத்தவளின் முகத்தில் அமிலத்தை ஊற்றச் சொல்கின்றன. அவ்வாறு தருக்கிய ஆண்மைகள் தான் தன்னுடன் துய்த்தவளை ஊரறிய வலையேற்றி வேடிக்கை பார்க்கச் சொல்கின்றன, அவ்வாறு தருக்கிய ஆண்மைகள் தான் தலைநகரில் ஓடும் பேருந்தில் தறி கேட்டு ஆடத் தூண்டின.

ஆம், ஒவ்வொரு தருணத்திலும் தருக்கி எழவே அக்கீழ்மை முயல்கிறது. அவ்வாறு தருக்கி எழுந்த ஆண்மைகளுக்கு பிழையீடு செய்யவே எஞ்சிய ஆண்களின் வாழ்வு வகுத்தளிக்கப்பட்டிருக்கிறது!!! அன்று துவங்கி இன்றும், நாளையும் அதை மட்டுமே செய்தாக வேண்டியதே புடவி படைத்த பிரம்மம் மாமயிடனுக்குக் கொடுத்த ஆம் என்ற பதிலின் மறுபக்கம்!!! பலமுகம் கொண்ட வைரமாக மின்னுகின்றன பன்னிரு படைக்களத்தின் பகடையுருட்டும் அத்தியாயங்கள்!!! ஒரு எழுத்தாளராக எண்ணி எண்ணி இறும்பூது எய்தக்கூடிய பகுதிகளைப் படைத்து வருகிறார் ஜெ.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்