இம்முறை ஊட்டி காவிய
முகாமில் கவிஞர் இசையின் ‘ஆட்டுதி
அமுதே’ என்னும் கவிதை வாசிக்கப்பெற்றது. அப்போது அதை கவிதையாக்குவது எது என்ற கேள்விக்கு
“அதை அப்படி ஆட்டு என் செல்லமே” – என்ற கடைசி வரியே எனப் பதிலிறுத்தார் ஜெ. அந்த
வரி மட்டுமில்லைஎன்றால் அது ஒரு நிகழ்வு மட்டுமே!! வெண்முரசில் இத்தகைய அனுபவம் பல
முறை வந்திருக்கிறது. ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய விவரணை வந்து கொண்டேயிருக்கும்.
சட்டென்று ஒரு வரி, அந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் வேறோர் தளத்துக்கு எடுத்துச்
சென்று விடும்.
நீர்க்கோலம் 77 – ல் அப்படி ஒரு நிகழ்வு வந்துள்ளது. தன்னைச் சூழ்ந்து
எரியும் காட்டுத்தீயை கனவில் உணர்ந்து எழும் நளனைச் சூழ்ந்து நெருக்குகிறது. அதைச்
சொல்லி வரும் வெண்முரசு அந்த தீயை ‘செந்நிறமும் பொன்னிறமும்
நீலநிறமும் கொண்ட மூவனல்.’ என்கிறது. இந்தச்
சொற்றொடர் இந்த நிகழ்வை முற்றிலும் வேறு தளத்துக்குக் கொண்டு செல்கிறது. மூவனல்
என்பவை மாதரிஸ்வான், ஆபாம்
நபாத் மற்றும் வாக். சொல்வளர்காட்டில் தருமர் இம்மூவனலைப் பற்றி பேசுகிறார். ஆரணிக்கட்டையில்
எழுகிறான் மாதரிஸ்வான் – செந்நிறமானவன். பெய்யும் நெய்யிலும், சோமத்திலும்
எழுகிறான் நீருள் உறையும் ஆபாம் நபாத் – பொன்னிறமானவன். வேதமோதும் நாவில்
எழுகிறான் வாக் – நீல நிறமானவன்.
இம்மூவரும் இணைந்து செய்வதே வேள்வி. இங்கே மூவனலும் இணைந்து உருவாக்கும்
வேள்வியில் தன்னையே ஆகுதியாக்குகிறான் நளன். தருமன் கந்தமாதன மலையில் செய்தது போல.