Tuesday, August 8, 2017

உள் மடிப்புகள்



அன்புள்ள ஜெ..

நலமா.. வெகுநாட்களாக நீர்க்கோலங்கள் பற்றி குறிப்புகள்  எழுதி.. இன்று ஒருக்கி .. இதோ.


1. வேதியியலில் சமீபத்தில் படித்த குறிப்பு. தண்ணீர் H மற்றும் OH  மூலக்கூறுகளின் இணைப்பு. எனினும்.. அது H  ஆகவும் OH ஆகவும் கணத்தினுள் பலமுறை தோன்றி மறையும். அதாவது கண நேரம் அமிலம் கண நேரம் காரம். இரண்டினுக்கு நடுவே அலைக்கழிப்பு அல்லது நிலைப்பாடு. வேறொரு நீர்க்கோலங்கள் (அதாவது மூலக்கூறின்?)

2. சிறு சந்தேகம் - தருமர் விராட நகரம் செல்லும் போது, கங்கன் என படித்ததாக ஞாபகம். நீங்கள் குங்கன் என பெயரிட்டதில் வேறு நுணுக்கம் இருக்கிறதா? நான் மூலத்தில் படிக்கவில்லை. சிறுவயதில் ராஜாஜியின் வியாசர் விருந்து, தற்போது, கும்பகோண பதிப்பான இராமானுசார்யரின் தொகுப்பு. குங்கன் என்பது நேபாளிய புத்த பிக்க்ஷுக்களின் பெயராக இருக்கலாம். அதுவும் ஒரு அழகே. 74வது அத்தியாயத்தில் நீங்கள் தருமன் என்று காட்டுகிறீர்கள். மற்றவர் 'குங்கர் ' என்று விளிக்கிறார்கள். ஒருவேளை அவர் தருமராக (தட்டச்சு செய்யும் பொது வந்த முதல் வார்த்தை - 'தாறுமாறாக' :) ) தோன்றி மறைந்தாரோ? - மகாபாரத்தில் கங்கன் , கிட்டத்தட்ட தான் யுதிஷ்டிரர் என்றே கூறி விடுகிறார். உங்கள் அணுகுமுறை இங்கே வித்தியாசமாக இருந்தது.

3. ஜீமுதன் என்கிற காலகேயன் வந்த போது, அந்த அத்தியாயம் மனக்கிளர்ச்சி அளித்தது. மகாபாரதத்தில் கூறிய மிக அரிய  நுணுக்கங்கள் - கிருதங்களும் பிரதிகிருதங்களும். ஹஸ்தக்கிருதத்திற்கு ஹஸ்தக்கிருதம். பாதக்கிருதம் பாதக்கிருதத்திற்கு. அர்த்தகிருதமென்றால் அதுவே. மற்போர் ஒருவனின் ஓர் அசைவை பிறிதொருவன் நிகர் செய்வது. ஓர் உரையாடல். மிகமிகத் தொன்மையானது. ஒருவனின் நிழலென பிறிதொருவன் ஆவது. இருவரும் கவ்விக்கொள்கிறார்கள். ஒருவனை ஒருவன் தூக்கிச்சுழற்ற முயன்று நின்று அதிர்கிறார்கள். சந்நிபாதத்தில் ஒரு மாத்திரைதான் வெற்றிதோல்வியை முடிவாக்குகிறது -  இது நீர்க்கோலங்கள் 
அற்புதமான வர்ணனை - மகாபாரதத்தில் இணைந்து, பின் வேறாக.. நீர்க்கோலங்கள் போன்றே 

4. நளன் தமயந்தி கதையில், நளன் பாம்பு தீண்டி உருமாறுவதாக படித்திருக்கிறேன். இங்கே தமயந்தி. ஒருவேளை அப்படியும் ஒரு கதை திரி (thread) இருக்கலாம். பின் உரு மாறியிருக்கும் நளனை அடையாளம் கண்டு கொள்கிறாள். ஒருவேளை உரு மாறினால்தான் மாற்றுருவை கண்டு கொள்ள முடியுமோ? இங்கே நஞ்சே காவலாக உயிர் காக்கிறது. '.. வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய் ..' என்கிற ஆழ்வார் பாடல்.. வெவேறு காலத்தில் அல்ல.. ஒரே காலத்தின் நீர்க்கோலங்கள் 

5. பாண்டவர்கள் விராட ரூபத்தில் ஒருங்கிணைந்து, தேசம் காக்கும் தெய்வமாய், தங்கள் சுயம் கரைந்து.. நிகழ்வுகளை கூர்ந்து நோக்கினால் பாண்டவர்களின் ரூபங்கள் தோன்றி மறையும். மற்றபடி மறைந்தே வாழ்ந்தனர் என்றே. மீண்டும் தோன்றி மறையும் நீர்க்கோலங்கள் 

6. mobius strip போல வளைந்த காகிதத்தினுள் சென்று மீண்டால் - தொகையற்ற (nonlinear) கதையிரண்டு. நாடகத் தருணத்தின் உச்சமாக கீசக வதம் - நுணுக்கமாக கூறி முடித்து விட்டீர்களோ? (அட்டைக்கு ஒரு யோசனை. mobius  strip இன்  ஒருபுறம் அஞ்ஞாத வாசம் - மறுபுறம் நள தமயந்தி கதை :) )

உள் மடிப்புகள், உளவியல் மடிப்புகள் என. இலக்கிய செறிவு என புதிய வார்த்தைகள் என பல பரிமாணங்களையும் தினமும் படிக்க தவறுவதில்லை.

சில சமயம் நீர்ப் பரப்பை - ஏரியோ, குளமோ, கிணறோ, கடலோ - இருக்கலாம். வீட்டின் மீன் தொட்டியாகவும் இருக்கலாம். கையில் எடுத்த ஒரு டம்பளர் நீராகவும் இருக்கலாம்) - அதனை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.  

'நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே' என்னும் வரி நினைவிற்கு வருகிறது.

என்றும் அன்புடன் 
முரளி 

அன்புள்ள முரளி

மலையாள பாடபேதம் ஒன்றில் குங்கன். பொதுவாக கதகளியிலும் குங்கனே. அங்கே தருமன் செய்வது சூதாடியின் தொழில் ஆகவே அப்பெயர் பொருந்தியது
கதாபாத்திரத்தின் நோக்கில் கதை செல்லும்போது அவன் பெயரே இருக்கும். அவனைப் பிறர் பார்க்கையில் அவர் சூடிக்கொண்ட பெயர் இருக்கும்

ஜெ