Sunday, August 20, 2017

போர் இனிது ?



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

அர்ஜுனன் உடன் இருப்பதே உத்தரனை வீரனாக நிறுத்துகிறது.  தன் அம்புகளை மட்டுமல்லாமல் உத்ரனின் அம்புகளையும் அவன் கைகள் மூலமாகவே பயன்படுத்துகிறான் அர்ஜுனன். தவறும் உத்தரனின் குறிகள் சரியானவையாக மாற்றப்பட்டு துரியோதனனை, துச்சாதனனை ஒருவாறு தாக்குகின்றன.  உத்தரன் மீது சரியாக குறிவைக்கப்பட்ட அம்புகள் தவறானவையாக மாற்றி அமைக்கப்படுகின்றன.

போர் இனிது என்று தோன்றும் விதமாக ரசிக்கும்படி வந்து, அதன் பின்னர் வரும் விளைவின் காட்சிகள், மலையொன்றின் மீது வேகமாக ஏறி பின்னர் அதன் மறுசரிவில் மெல்ல இறங்குவது போல் உணரச் செய்கிறது.  போராசையை உண்டாக்கி, அதை உடனே அதை குறைக்கவும் செய்கிறது. 

ஆகா பிரம்மாண்டமான போர் காட்சிகள், பிரமாதமான சண்டை என்று காட்டி, அத்துடன் வென்றனர் - மகிழ்ந்தனர் - இனிது என்று சினிமா பார்த்துப் பழகி, இங்கு வீரம் ரசனைக்குத் தரப்பட்டு உடனே யதார்த்தமும் தரப்பட்டது ஓர் உவகை ஏற்படுத்துகிறது.  ஒரு வீரசாகச திரைப்படத்தை பார்த்து அதன் கதாநாயகனாவே வாழ்ந்து, படம் முடிந்த பிறகும் அதன் கதாநாயகனாவே கருதிக் கொண்டு திரும்புவது போல் அல்லாமல், அங்கு அவ்வாறு வாழச் செய்து பின்னர் அங்கேயே நம்மையே நமக்குத் திருப்பித் தந்துவிட்டது போல் ஓர் எண்ணம்.

முக்தன் கற்பனையில் சுபாஷிணியுடன் வாழ்கிறான், குழந்தைகள் பெற்றுகொள்கிறான், சாவது பற்றி அவன் எண்ணவே இல்லை.  மாறாக, கஜன் சுபாஷிணியை விழைந்து பின்னர் மனதை விலக்கி கொள்ள முயல்கிறான், இறந்து விடுவோம் என்று நம்பவும் அது இயல்பானது கொள்ளவும் செய்கிறான், ஆனால் மரணம் அவனை விலக்கி விடுகிறது.  பலவற்றுக்கு மத்தியில் மெலிதாக தோன்றும் ஒரு எண்ணம் - முதியவீரன் ஒருவனைப் பார்த்து அவன் எண்ணுவது - "எங்காவது ஓரமாக தங்கிவிட்டு மீண்டிருப்பார்." "அடுத்த போரில் இந்த முகத்தை தானும் சூடிக்கொள்ளமுடியும் என எண்ணியபோது அவனுக்கு புன்னகை எழுந்தது." - கிட்டத்தட்ட அதுவேபோல் ஆகிறது. ஒருவரையும் கொல்லாமல் விழுப்புண் கொண்டு மீள்கிறான்.  வாழ்வையும் மரணத்தையும் நாமல்ல - வாழ்வும் மரணமுமே நம்மை தேர்ந்தெடுக்கின்றன என்று ஆகிறது.  பாண்டவர்களின் கதை என்று மட்டுமல்லாமல், அவர்களை மையத் தொடராக கொண்டு, இவ்வாறான ஏராளமான பாத்திரங்கள் -அவர்களது வாழ்வு கூறப்படுவது, பலசமயம் அவர்கள் கண்கொண்டே காட்சிகள் விரிக்கப்படுவது, கதை நடக்கும் அந்த இடத்தில் நம்மைக் கொண்டு நிறுத்துகிறது.  மையப்பாத்திரம் என்றால் அவர் அவர் மட்டும்தான், இவ்வாறான பல துணைப் பாத்திரங்கள் பல எனும்போது அப்பலவற்றுள் அல்லது அது போன்றே எங்கோ அரூபமாக அதில் நானும் ஒருவன் - அதே இடத்தில் அதே கதை வெளியில்.  மக்களின் கதையாகவும் இருப்பதே வெண்முரசை மனதிற்கு நெருக்கமாக அமைக்கிறது.  "ஒரு பேரரசன் இருந்த ஊரில் நம் போன்ற சாமானியர்கள் பலர் இருந்தனர்" என்றல்லாமல் "நம் போன்ற சாமானியர்கள் பலர் இருந்த ஊரில் ஒரு பேரரசன் இருந்தான்" என்று உணரச்செய்தே மக்களை ஈர்த்துக் கொள்கிறது வெண்முரசு.


அன்புடன்
விக்ரம்
கோவை