Tuesday, August 29, 2017

மீறிச்செல்வதே தவமெனப்படுவது



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

துள்ளும் சொற்கள் பலவும்
தொகுக்க முயல்கின்றேன்

அவனே அழைக்காமல்
அவன் பேர் சொல்லாதே
அவனே கொல்லாமல்
நீயொன்றும் சாகாதே

தெய்வமொன்றும் துணையில்லை என்னுங்கால்
செயல் ஒன்றே தெய்வமென்று கொள்ளல் வழி

திசை எதுவெனினும்
விசையின்றி வாழ்வதுமோர் வாழ்வாமோ?
வசையோ வந்தனையோ
பிறர்பால் வந்தணைதல் கூடுமோ?

வெற்றகந்தை எனினும் விரித்துச் செல்லல் நன்று
இப்பெரு மைதானத்தில் யாதொன்றும் பிழையில்லை
தீதகற்ற எதிரொரு தெய்வம் நிகழக்கூடும்
உதைத்து திசைதிருத்தி மெய்மையின் பால் செலுத்தவுங்கூடும்

யாதொன்றும் பிழையில்லை - உள்ளதொரு
வாழ்வில் விசையின்றி வாழ்தல் பிழை

விரிவெல்லை இல்லாததொரு பெருங்கடல்

- எனப் பலவும் தோன்றுகையில் -

"சுத்த அயோக்கியர்கள்.  கொடுஞ்செயல்களுக்கு வேதாந்தஞ் செய்து விழுங்கச் சொல்கிறார்கள்"
"ஆமாம் ஆமாம்.  அன்றேல் அசுத்த அயோக்கியர்கள் ஆவோம்.  கொடுஞ்செயல்களுக்கு சித்தாந்தஞ் செய்து புரட்சி-போராட்டம்-தலைவன் என்று செய்து விழுங்கிச் செல்வோம்.

வேதாந்தமேனும் வருந்தவும் திருத்தவும்
பெருந்தவம் கருணை என்று தெய்வம் பொருந்தவும் வழியுண்டு
தன்னை விட்டு வெகுதூரம் சென்ற பின்னும்
தன்னை நோக்கித் திரும்பவோர் வழிமுண்டு
ஓர்த்துள்ளம் உள்ளது உணர்வோர்ப்படும் நெறியொன்றுண்டு
வான்மீகி-விசுவாமித்திரன் என்று வழித்துணையும் உண்டு 
ஆனாதினால் அமைதி கொள் மதியே
ஆம் அவ்வாறே

புஷ்கரனுக்கு தன் தவறு தெரிந்தே இருக்கிறது ஆனால் நடுவே நிறுத்திவிட, மாற்றம் கொள்ள அவன் எண்ணவில்லை, எல்லை வரை செல்கிறான்.  தீமைதான், கொடிது தான் தெரிந்தும் ஏன் நிறுத்திக் கொள்ள விளைவதில்லை? அதன் உளவியல் என்ன? "இதுகாறும் செய்து வந்தோம் இனி நிறுத்தினால் நல்லவர் என்று ஒருபோதும் நம்மை எண்ணப் போவதும் இல்லை, மேலும் அச்சுறுத்தியே வந்தோம் அந்த அச்சம் அகன்றால் நம்மை பழிதீர்க்க கருதுவர்" என்பதா? இனி கிடைக்கப் போகாத நன்றின் தரப்பு என்ற இடத்திற்காக திசை மாற்றி ஏன் செல்ல வேண்டும் எல்லைவரை சென்றபின் எதிர்விசை ஒன்று வந்து முடிக்கட்டும் என்ற ஒரு எண்ணமா?.  தன்னைத்தானே மன்னிக்க இயலாத முடியாத அளவு நெடுந்தொலைவு சென்ற பின் மற்றவரிடம் அதை எவ்வாறு எதிர்பார்க்க இயலும் ?.  இனி விளைவது, வேண்டுவது ஒன்று உண்டு என்றால் கொடும் தண்டனை மட்டுமே.  அது வெறும் மரணம் என்று அல்லாமல், தராசு தட்டினை ஓரளவேனும் சமன் செய்யும் விதமாக, பெரியதாக இருக்க வேண்டும் - வதம் என்று இருக்க வேண்டும்.  இறைவனே வந்து தம்மை வதைத்து அழிக்க வேண்டும் என்பது அரக்கரின் ஆசை போலும்.  உச்ச தண்டனை வேண்டும் என்று ஏங்கும் அத்தகைய மனதிற்கு உண்மையிலேயே மிக உச்ச தண்டனை அப்படியே தண்டிக்காமல் சும்மா விட்டு விடுவதுதான் என்று எண்ணுகிறேன்.  ஏனென்றால் எல்லா அயோக்கியனுமே அடிப்படையில் நல்லவன் தான்.

“நன்றோ தீதோ எல்லைக்குள் நிற்பவர்கள் எந்த முழுமையையும் அடைவதில்லை. ஆடுகளங்களுக்கு அப்பாலுள்ளதே மெய்மை. மீறிச்செல்வதே தவமெனப்படுவது. முற்றிலும் கடப்பதே வீடுபேறு”



அன்புடன்
விக்ரம்
கோவை