ஒரு பாத்திரம் சிறிதாகவோ பெரிதாகவோ, உயர் மதிப்பு உலோகத்தால் ஆனதாகவோ அல்லது வெறும் சுட்டமண்ணால் ஆனதாகவோ என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதனுள் ஏதுமில்லாமால் வெற்றுப்பாத்திரமாக இருந்தால் சிறிதாய் தட்டப்பட்டாலே ஓசை மிகுதியாக எழுப்புவதாக, சிறிய அசைவுக்கே நிலையற்று உருண்டு புரள்வதாக இருக்கும். அது வெற்றாக இருப்பதாலேயே அதில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் போட பயன்படுத்துவார்கள். அதன் இயல்பான பயன்பாட்டுக்கு அல்லாமல், அதை கவிழ்த்துப்போட்டு ஒரு ஆசனமாகஅமர, ஏறி நின்று உயரத்தில் உள்ள பொருட்களை எடுக்க என வேறு விதங்களில் பயன்படுத்தப்படலாம். சிலசமயம் அதனுள் நச்சுயிர்கள் உள்புகுந்து பதுங்கியிருக்கும் வாய்ப்புக்கள் அதிகம். பொருள் நிரம்பிய மற்ற பாத்திரங்கள் வைப்பதற்கான இடத்தை இவை அடைத்துக்கொண்டிருக்கும்.
உயிர் நிரம்பி இருக்கும் மனித உடல் ஒரு பாத்திரம். ஆன்மா நிரம்பி இருக்கும் அவன் சித்தம் ஒரு பாத்திரம். தன் உள்ளமெனும் பாத்திரத்தில் தன்னியல்பும் தன்னம்பிக்கையும் ஊக்கமும் தாம் வாழ்வதற்கான நோக்கமும் நிறைத்து ஒருவன் இருக்கவேண்டும். இவை இல்லாத மனிதன் ஒரு வெற்றுப் பாத்திரம் போன்றவனாவான். அத்தகையவருக்கு ஒரு வெற்று பாத்திரத்திற்கு என்னென்ன இழிவுகள் ஏற்படுமோ அத்தனையும் ஏற்படும். இவர்களைப்போன்றவர்கள் எளிய குடும்பத்தில் இருப்பவர்களாக இருந்தால் சமூகம் இவர்களை அலட்சியப்படுத்தி புறக்கணித்துவிடும். ஆனால் சிலசமயம் இவர்கள் பெரிய பதவிகளில் இருப்பவர்களின் பிள்ளைகளாக பிறந்த ஒரே காரணத்தினால் சமூகத்தில் முன்னிறுத்தப்படுவார்கள். பெரிய கலைக்குடும்பத்தில், பெரும் அரசியல் பிரமுகரின், அல்லது பெரும் தொழிலதிபரின் பிள்ளைகளாக இவர்கள் பிறந்திருப்பார்களேயானல், சமூகம் இவர்களை புறக்கணிக்கவும் முடியாதுபோய்விடும். அவர்கள் வெகு நாட்கள் சமூகத்தில் ஒரு அவல நகைச்சுவையென வலம்வந்து கொண்டிருப்பார்கள். சமூகம் எள்ளி நகையாடினாலுல் அவர்கள் அந்த உயர் பதவியில் இருந்துகொண்டு இருப்பார்கள்.
இப்படி ஒரு வெற்றுப்பாத்திரமாக உத்தரன் வெண்முரசில் சித்தரிக்கப்படுகிறான். வீண்பெருமை அடித்துக்கொள்பவனாக, எடுப்பார் கைப்பிள்ளையாக, தன்னம்பிக்கை அற்றவனாக அவன் இருக்கிறான். அவனுக்கு ஏன் வெண்முரசில் இவ்வளவு அதிக இடம் கொடுக்கப்படுகிறது என்று சிந்தித்துப்பார்த்தேன். தற்போதைய காலத்தில் இத்தகைய வெற்றுப்பாத்திரங்கள், உயர்நிலையில் இருந்தவர்களின் குடும்பத்தில் பிறந்து விட்ட காரணத்தினாலேயே, சமூகத்தின் முக்கிய நபர்களாக வலம் வருவதைக் காண்கிறோம். தகுதியான நபர்களை வரவிடாமல் சமூகத்தில் முக்கிய நிலையில் அமர்ந்துகொண்டு மக்களுக்கு எவ்வித உதவியும் இல்லாமல் வெறும் தேவையற்ற தொல்லைகளைத் தருபவர்களாக இருக்கும் இவர்களின் இயல்பினை வெளிக்கொணர உத்தரன் பாத்திரப்படைப்பு பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்கிறேன்.
தண்டபாணி துரைவேல்