அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
நீர்க்கோலத்தில் பாண்டவர்களின் அகத்தை விட அவர்களது திறம், ஸ்டைல் என புறம் அதிகம் கூறப்படுகிறது. மாறாக, துணைப் பாத்திரங்களில் புறத்தை விட அகம் முக்கியத்துவம் பெறுகிறது. பாண்டவர்கள் துணைப் பாத்திரங்களின் புறத்தை தமக்கே உரிய மிடுக்குடன் நடிக்கின்றனர். துணைப் பாத்திரங்கள் பாண்டவர்களின் அகத்தை தமக்கே உரிய எளிமையுடன் பிரதிபலிக்கின்றன. கிடைமட்டத்தில் சமகாலத்தில் இவ்வாறென்றால், மேலும் கீழும் போல பாண்டவர்கள் - நள, தமயந்தி (ரிதுபர்ணன் - விராடர் என பலரும்) என்று நிகழ்காலமும் கடந்த காலமும் ஒன்றை ஒன்று எதிரொளிக்கின்றன.
மாமலர் என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வரும் பாத்திரம் தேவயானி தான். நீர்க்கோலத்தைப் பொறுத்தவரை அவ்வாறு அமைவது நளன், தமயந்தி தான். பாண்டவர்களின் கதையில் நளன், தமயந்தி என்பதை விட நளன்-தமயந்தி கதையைச் சுற்றி பாண்டவர்கள் என்றுதான் கொள்ளத் தோன்றுகிறது. மனம் அங்கு தான் மையம் கொள்கிறது.
அன்புடன்
விக்ரம்
கோவை