Saturday, August 12, 2017

வீரக்கலை


வணக்கம் சார்,

இது நான் உங்களுக்கு எழுதும் இரண்டாம் மின்னஞ்சல். மின்னஞ்சல் அனுப்புவதற்கு காரணம் சரியாக தெரியாத ஒரு தயக்கம். ஒரு காரணத்தை வைத்து முதல் மின்னஞ்சல் அனுப்பி விட்டேன்.

வெண்முரசு என்னில் பல திறப்புக்களை ஏற்படுத்தி உள்ளது, பெரும்பாலும் அதை உங்கள் வாசகர்கள் யாராவது வெண்முரசு விவாத இணையதளத்தில் எழுதி விடுவார்கள். அவர்களின் கடிதங்களே எனக்கு ஒரு கருத்தில் உள்ள பல திசைகளை திறந்து காட்டியுள்ளது. காலையில் வெண்முரசு படித்தவுடன் அடுத்தது விவாத தளத்திற்கு தான்  செல்லுவேன்.

நான் அடிப்படையில் வீரக்கலையில் ஆர்வம் உள்ளவன். இங்கு பிறிஸ்பேன்இல் ஒரு சிலம்ப பள்ளி நடத்தி வருகிறேன்.வெண்முரசு நாவலில் வரும் போர்க்கலை பயிற்சி முறைகள் மற்றும் போர்கள் பற்றிய குறிப்புகளை தனியாக தொகுத்து வருகிறேன், மற்ற நேரங்களில் அதை மட்டும் எடுத்து வாசிப்பேன்.

நீர்க்கோலம் 27 வந்த //நடனக்கலை என்பது நம் தன்னிலையை இங்கிருந்து விலக்கி பிறவெனச் சூழ்ந்துள்ளவையாக முற்றிலும் ஆக்கிக்கொள்ளுதலே. மேடையில் ஆடுவதல்ல அது. நடனத்தின் முழுமையென்பது தானன்றி எவருமே இல்லாத இடத்தில் ஆட்டன் அடையும் நிறைவு மட்டுமே.”// பயிற்சி களத்தில் தனி பயிற்சி செய்யும்போது ஏற்படும் மன ஒருங்கிணைவை உணர்ந்தது உண்டு. ஆனால்  அதை வார்த்தைகளாக படித்த போது அடைந்த ஆனந்தத்தையும் நிறைவையும் சொல்ல வார்த்தை இல்லை . இதே போல் பயிற்ச்சியில் பல தடவை என்  ஆசிரியர் கூறும் வார்த்தைகள் புரியாமல் குழம்புவேன். சண்டை பயிற்சியில் மூத்த மாணவர்களிடம் அடி வாங்கும் போது என் ஆசிரியர் "கண் கொண்டு பாருய்யா " என்று பல தடவை கூறியும் புரியாது. திரு திரு வென்று முழித்து விட்டு கண்ணு திறந்து தான் வச்சிருக்கேன் என்று மனதுக்குள் கூறிக்கொள்வேன் , ஆனால் அந்த வார்த்தையை என்  ஆசிரியர் கூறியதற்கான வேறு ஒரு அர்த்தம் சில மாதங்கள் கழித்து பயிற்சியின் நடுவே புரிந்தது.ஆனால் ஒரு தலை சிறந்த எழுத்தாளராக உங்களின் தெளிவான வாக்கியம் படித்தவுடன் அங்கேயே நிறுத்தி விட்டது என்னை. நன்றி சார்.நீங்கள் கூறியது நடன கலை பற்றியது என்றாலும் எல்லா கலையும் அடிப்படையில் ஒன்று தானே. தன் அசைவில் உளம் குவிக்க முடியாதவன் சண்டை கலையில் பிறர் அசைவை எப்படி கண்டுபிடித்து தடுக்க முடியும். 

நீர்கோளம் 27 படித்தவுடன் கடிதம் எழுத நினைத்து சிறிய தயக்கத்தால் தள்ளி போய் , உங்களின் வாசிப்பு என்பது போதையா? கட்டுரை படித்தவுடன் இதை எழுதுகிறேன் . அந்த கட்டுரையை சென்ற வாரம் படித்து கொஞ்சம் குழம்பி போய்விட்டேன் . அந்த கருத்துக்கள் உண்மை என்றும் பட்டது ஆனால் எங்கோ மனதின் ஒரு மூலையில் ஏற்று கொள்ளவும் முடியவில்லை. அந்த கட்டுரையை பற்றிய உங்களின் கருத்துக்கள் எனக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தி புன்னகைக்க வைத்தது . உண்மையில் உங்கள் எழுத்துக்களும் வெண்முரசும் கண்டடைய முடியாத ஒரு உச்சிக்கு சென்று கொண்டு இருக்கிறது.வாழ்த்தும் அளவிற்கு அறிவோ வயதோ இல்லை.வணங்குகிறேன்.

ரஜினிகாந்த் ஜெயராமன்