அன்புள்ள ஜெ
மகாபாரதம் விராடபர்வத்திலிருந்து
வெண்முரசு மாறியிருப்பதைப்பற்றி ஒரு வாசகர் எழுதியிருந்தார். அவருக்குக் கதை சப்பென்று
போய்விட்டது என்று எழுதியிருந்தார். இந்தக் ‘கதைவாசிப்பு’ மிகவும் பெரிய தடை. சிலருக்கு
மகாபாரதக்கதை முன்னரே தெரியும் என நினைப்பு. எந்தக்கதையிலும் திருப்பம் முடிவு என்று
மட்டுமே வாசிக்கும்போது வருவது இந்தச்சிக்கல். மகாபாரதக்கதை அனேகாமக இந்தியாவில் அனைவருக்குமே
தெரிந்ததுதான். ஆகவே அதில் எதிர்பாராதது நடக்கவேண்டும் என்று நினைக்ககூடாது. நாம் நினைத்ததுபோலவே
கதை எழுதப்பட்டிருந்தால் அதை வாசித்து மகிழ்வது அல்ல வெண்முரசின் நோக்கம்.
எனக்கும்
இதே சிக்கல் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் மழைப்பாடலுடன் அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.
மழைப்பாடலில் பாலைநிலத்துக்கும் மேய்ச்சல் நிலத்துக்குமான போராக மகாபாரதமே விளக்கப்படும்.
இருநிலங்களின் விரிவான சித்திரிப்பு இருகுலங்களின் வரலாறு இருவகை வாழ்க்கை என்று அது
பிரம்மாண்டமாக விரியும். அந்தச் செய்திகளோ கதைகளொ சித்திரங்களோ எதுவுமே மகாபாரதத்தில்
இல்லை. மகாபாரதத்தில் அப்படி அவற்றை வாசிப்பதற்காக சில குறிப்புகள் மட்டுமே உள்ளன.
அந்தப்பிரம்மாண்டமான விரிவுபடுத்தலை வாசித்தபிறகுதான் வென்முரசு எதற்காக எழுதப்படுகிறது
என்பதை நான் அறிந்துகொண்டேன். அதைத்தான் நான் தேடி கவனமாக வாசிக்கிரேன். மூலமகாபாரதத்தில்
விராடபுரியின் கதை மிகச்சுருக்கமாகவே இருக்கும். அங்கிருந்த அரசியல், அவர்களுக்கு இடையே
இருந்த உறவுச்சிக்கல்கள் எதுவுமே இருக்காது. விராடர் அவர் மனைவி ஆகியோரின் குணச்சித்திரம்
மிகமிகச்சுருக்கமாக ஓரிரு வரிகூட இருக்காது. அதெல்லாம் விரிவாக வெண்முரசிலே உள்ளது.
ஆனால் போர் மகாபாரதத்தில் விரிவாக உள்ளது. அதுவும் மிகையாக.
அர்ஜுனன் மட்டுமே சென்று
பீஷ்மர் கர்னன் போன்றவர்களை ஓட ஓட துரத்தினார்கள் அவன் வெளிப்பட்டபோது அவர்கள் அஞ்சினார்கள்
என்றால் மகாபாரதப்போரே முடிந்துவிட்டதே. இனி எதுவுமே தேவையில்லையே? ஆகவேதான் கர்ணன்
குடியால் தளர்ந்திருந்தான், அஸ்தினபுரியின் அசல்படை வரவில்லை என்றெல்லாம் அதை சாதாரணமாக
ஆக்கி அதை உத்தரனின் மாற்றமாகக் காட்டுகிறீர்கள். நிகழ்ச்சியை சிரிய கதாபாத்திரங்களின்
வழியாகக் காட்டுவது ஒரு சிறந்த புனைவு உத்தி என்று வென்முரசு பலமுறை காட்டியிருக்கிறது.
நளதமயந்திகதை மகாபாரதத்திலே ஒரு சிறிய துணைக்கதை. மகாபாரதத்தில் உண்மையிலே எல்லா கதைகளுமே
மிகச்சின்னக் கதைகள். பேசும்போது நீதிகளை விரிவாக சொல்வதனால்தான் கதைகள் பெரிதாக தெரிகின்றன.
வெண்முரசு வாசித்தபின் மூலத்தை வாசித்தால் அது சுருக்கமாக நிறைய உபதேசங்களுடன் இருப்பதைத்தான்
காண்போம்
சண்முகம்