Saturday, August 19, 2017

ஏழுமுரசங்கள் தாண்டி..






அறம், கொற்றவை, காடு, விஷ்ணுபுரம், ரப்பர் என ஆரம்பித்து வெண்முரசின் முதற்கனலுக்குள் நுழைந்து ஏழுமுரசங்கள் தாண்டி இப்போது காண்டீபம் வந்திருக்கிறேன்

ஒவ்வொரு நாவலும் எனக்கு அறைந்தது ஒரு முரசம் மட்டுமல்ல. ஒவ்வொரு கதாமாந்தரின் உணர்வுநிலைகளும் இன்றும் எனக்கு நீடிக்கின்றன. அந்த உணர்வுகளின் மூலம் என் குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்தன. ஒவ்வொருவரும் என்முன் விஸ்வரூபம் பெற்றெழுந்தனர். துரியோதனனின் நண்பனாக பீமன் இருந்திருக்கிறான் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அவர்களின் நட்பை நான் மிகவும் விரும்பி ரசித்தேன். அது இறுதிவரை தொடர்ந்திருக்கக்கூடாதா என்றெல்லாம் ஏங்கினேன்.

அம்பையை பீஷ்மர் மிகவும் கஷ்டப்பட்டு விலக்கிய தருணத்தில் கண்ணீர் வடித்தேன். வாசித்து ஒரு வருடம் ஆகியிருந்தாலும் அந்த காட்சி என் மனதைவிட்டு இன்றும் அகலவில்லை. ஏற்கெனவே நான் ஒரு வாக்குதவறாதவள் என பெயரெடுக்கவேண்டும் என விரும்புகிறவள். பீஷ்மரைப் பார்த்ததும் என் கொள்கைப் பிடிப்பு இன்னும் அதிகமானது. ஒரு வார்த்தை சொல்ல மிகவும் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். பேசும் வார்த்தைகளில் ஒரு கவனம் வந்தது. சிபி அரசனின் வாழ்வு மூலம் நீதியைப் பெற்றுக் கொண்டேன். செய்யும் செயல்களில் கவனம் ஏற்பட்டது.

அடுத்தடுத்து வாசித்த மழைப்பாடல் வண்ணக்கடல்களில் கௌரவர்கள் பாண்டவர்கள் பிறந்து வளர்ந்து கல்வி கற்று அமர்க்களப்படுத்திவிட்டார்கள். துரோணரின் வாழ்வு எனக்கு ஒருவித தீவிர வாழ்வில் பற்றைக் கொடுத்தது. அவரிடம் அர்ச்சுணனும் கர்ணனும் அஸ்வத்தாமனும் கல்விகற்றுக்கொள்ளும் முறையைப் பார்த்தபிறகு நான் படித்த முறையை எண்ணி உளம் நொந்தேன். கல்வி கற்பது எப்படி என்று அறியாமல் நான் என் இளமையை வீணாக்கிவிட்டேனே  என்று எழுந்த வெறுப்பிலிருந்து என்னை   மீட்டுக்கொள்ளவே         முடியவில்லை.

அடுத்து வந்த நீலமோ இதுவரை அடைந்த உணர்ச்சிகளினின்று  முற்றிலும் மாறானது. நான் ஒரு பித்துப் பிடித்த காதலியாகிவிட்டேன். பார்க்கும் மனிதர்கள் பார்க்கும் பொருட்கள் என அனைத்தையும் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். நீலம் வாசித்து முடிப்பதற்குள் எனக்கு பைத்தியம் பிடித்துவிடுமோ என்றெல்லாம் பயந்துவிட்டேன். கண்ணன் அப்படி என்னைக் கொள்ளைகொண்டுவிட்டான்.

இவர்கள் அனைவரும் சிறுவர்களாக இருந்தவரை எனக்கு ஒன்றும் தெரியவில்லை. ஒவ்வொருவரும் பெரியவரானபோது பிரயாகையிலிருந்து எனக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. இதுவரை நல்லவிதமாகப் போய்க்கொண்டிருந்ததுபோலவும் அய்யோ திரௌபதி வந்ததும் என்னென்னவெல்லாம் நிகழப்போகிறதோ என உள்ளூற ஒரு பயமும் கூடவே வந்துவிட்டது. ஒவ்வொருவரும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என கூர்ந்து நோக்கும்போது அவரவர்களாகவே மாறிப்போனேன்.

வெண்முகில் நகரத்திலும் இந்திரநீலத்திலும் முழுக்க முழுக்க எனக்கு வெளியுலகு திறந்துகொண்டது. முட்டையிலிருந்து வெளிவந்து சிறகுயர்த்தி புதுமையான உலகை முதன்முதலாய்க் காணும் சிட்டுக்குருவி போல பறந்தும் விழுந்தும்   என் நாட்டை இமயமலையிருந்து கன்னியாகுமரி வரை கண்டுகளித்தேன். அதிலும் இந்திரநீலம்  என் மனதை மிகவும் ஆட்கொண்டுவிட்டது. அதில் உள்ள அரசு சூழ்தல்கள் அப்பப்பா ஆச்சர்யத்தில் ஆழ்த்துபவை. திருஷ்டத்யும்னன் சத்தியபாமாவிடமிருந்து சியமந்தகமணியை வாங்குவதற்காக நிகழ்த்தும் உரையாடல்கள் என்னை உவகையொலிகள் எழுப்பச்செய்துவிட்டன.

 நான் அனைத்து நாவல்களையும் வாசித்துவிட்டு மீண்டும் முதலிலிருந்து ஒவ்வொன்றாக வாசித்து ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் தங்கள் கடிதங்கள் பதிவு என்னை தங்களுக்கு கடிதம் எழுதாமல் என் கைகளை விடவில்லை. என் மூளை இதுவரை வாசித்ததை ஒரு பக்கத்திற்காவது எழுதிவிடு என்றது. அதன் அன்புக் கட்டளையை மீறமுடியாமல் பிள்ளையார்சுழி மட்டும் போட்டிருக்கிறேன். மன்னித்துவிடுங்கள்.

இப்போதுதான் தங்கள் வெண்முரசங்கள் மூலம் ஒரு வரலாற்றுப் போக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது. அதை இன்னும் தெளிவாக்கிக்கொள்ள தங்கள் இணையத்திற்குள் புகுந்து இந்திய வரலாற்றையும் பண்பாட்டைப் பற்றியும் தாங்கள் எழுதியுள்ளதை வாசிக்கிறேன். இன்னும் தெரிந்துகொள்ளவேண்டியது நிறைய உள்ளது. நான் வாழும் கடைசிநாள்வரை தங்களை வாசித்துக்கொண்டே தங்களுடன் உரையாடிக்கொண்டே என்னை நிலைப்படுத்திக்கொள்வேன் என்ற நம்பிக்கையை தங்கள் எழுத்துக்கள் மூலம் பெற்றுக்கொண்டேன்.

உச்சிப்பாய்மர முடிச்சை பார்த்தன் மட்டுமே வில்லேந்தி அவிழ்ப்பான் என்ற பேச்சு வரும் தருணத்தில் நானும் துரோணரின் மாணவன்தான் என திருஷ்டத்யும்னன் சொன்னபோது என் உடல் சிலிர்த்தது. என்னையறியாமல் என் தலை நிமிர்ந்தது. துரோணர் பெற்ற பெருமையை தாங்கள் பெறவேண்டும் என்ற விதை என்னுள் அந்நேரம் விதைக்கப்பட்டதுபோல உணர்ந்தேன். அவ்விதையானது முளைத்து வளர்ந்து ஒரு ஓங்கி உயர்ந்த ஆலமரமாவதுபோல கனவுகாண ஆரம்பித்துவிட்டேன்.  

தங்கள் அன்பு மாணவி
கிறிஸ்டி