Wednesday, August 23, 2017

ஆடலை நோக்குவதை பயில்க



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, 

"இந்நகரின் அனைவரும் சூழ இருந்தாலும் முற்றிலும் தனிமையிலிருப்பதாக தோன்றுகையில் நடனம் நிகழத் தொடங்குகிறது" உத்திரைக்கு நடனம் பயிற்றுவிக்கத் தொடங்கும் போது பிருகன்நளை அவளிடம் கூறுகிறார். "விற்பயிற்சி என்பது முற்றிலும் வேறு. சினமின்றியும் போர்முனையின் உச்சநிலை இன்றியும் அம்பும் அகமும் ஒன்றென்றாவது அது. அதை பயில்க" என்று உத்திரனுக்கு போர் முடித்து திரும்புகையில் கூறுகிறார்.  "முதலில் ஆடலை நோக்குவதை பயில்க" என்று உத்திரைக்கு சொல்லும் பிருகன்நளை உத்திரனுக்கு முதலில் ஆட்டத்துடன் (களம்) துவங்குமாறு செய்கிறார்.  தோழியர் குழாத்துடன் இருக்கும் உத்திரையை தனிமைப்படுத்தியும், ஆண்களுடன் சேராமல் தனிமையில் இருக்கும் உத்திரனை போரென்று கூட்டத்தில் தள்ளியும் துவக்கப்படுகிறது.  அதிர்ச்சி அளித்து களத்தில் கொண்டு நிறுத்தி, போரின் அனுபவத்தை நேரில் காட்டி, பின்னர் பயிலும் விதம் கூறுகிறார்.  கீசகனால் அச்சுறுத்தி வளர்க்கப்பட்ட உத்திரனுக்கு அவ்வாறான ஓர் அணுகுமுறையே தேவையானதாகிறது.  அச்சமே கல்வியாக தரப்பட பிறகு அதன் எல்லை வரை இழுத்துச்சென்று அக்கல்வி கலைக்கப்பட்டு பின்னரே அவனுக்கு உண்மையில் கல்வி தொடங்குகிறது.  உத்திரைக்கு பெண்ணாகவும் உத்திரனுக்கு ஆணாகவும் நடந்து கொள்கிறார் பிருகன்நளை.  குங்கனின் கணக்குகள் துல்லியமானவை.  அவ்வகையில் மாற்றுருவில் வாழும் பாண்டவர் விராட நாட்டிற்கு பெரும் நன்மைகள் செய்கின்றனர்.  பகைவன் கீசகனை ஒழித்தது, உத்திரனை களம் காணச் செய்தது என.

புஷ்கரனும் உத்திரனும் ஒரே தன்மையினர் என்றாலும் புஷ்கரன் தவறான கரங்களில் சிக்கி தவறான திசைக்கு செல்கிறான், உத்திரன் சரியான கரங்களில் சிக்கி சரியான திசை செல்கிறான் - புஷ்கரன் கலி தெய்வத்தின் கரங்களில் உத்திரன் இந்திரனின் மகன் கரங்களில் என்பது போல.  புஷ்கரன் போன்று கொடுங்கோலன் ஆகும் சாத்தியத்தில் இருந்து அவ்வகையில் உத்திரன் தப்புவான் என்று எண்ணுகிறேன்.


அன்புடன்
விக்ரம்
கோவை