வெண்முரசு மகாபாரதக் கதையை மேலும் மேலுமென நுண்மையாக்கிக்கொண்டு செல்கிறது. சல்யனை துரியோதனன் தன் பக்கம் இழுத்துக்கொள்வது சிறு நிகழ்வாக ஒரு எளிய யுக்தியாக மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதை மிகவும் தர்க்கரீதியாக வெண்முரசு நிகழ்த்திக்காட்டுகிறது. சல்யர் வரும் வழியில் அறியாமல் துரியோதனன் விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டார். அந்த ஒரே காரணத்திற்காக மகாபாரதப்போரில் அவர் துரியோதனன் பக்கம் சேர்ந்துகொண்டார் என்பது எவ்வித தர்க்கத்தின்படியும் சரியாக இருக்காது. அவர் ஏற்கெனவே பாண்டவரின் சார்பானவராகவே தன்னைக் கருதிக்கொண்டிருப்பவர். அவர்கள் பக்கம் நின்று போரிடுவதாக முடிவெடுத்துவிட்டவர். அவரை இப்படி எளிய சூழ்ச்சியில் சாய்த்துவிடமுடியாது.
ஆனால் இப்போது அவர் துரியோதனன் பக்கம் சேர்ந்துகொள்கிறார். இதில் துரியோதனனின் யுக்தி (கணிகரின் பங்கு இதில் பெரிதாக இருக்கும் என நினைக்கிறேன்) மிகச் சிறப்பாக செயல் புரிகிறது. முதலில் அவரை தன் எல்லைக்குள் வர வைக்கிறான். தன் விருந்தோம்பலில் இருக்க வைக்கிறான். இனி அவனுடன் அவர் பேச மறுக்க முடியாது. தன்னை எதிர்ப்பவரை தன்னுடன் பேச வைப்பதிலேயே பாதி வெற்றி பெறப்படுகிறது. அது துரியோதனன் மேல் அவர் கொண்டிருக்கும் சினம் மற்றும் கசப்பை வெகுவாக குறைக்கிறது. அடுத்து அவரைப் பேச விடுகிறான். கிரிக்கெட் விளையாட்டில் பந்து, வீச்சாளரால் போடப்பட்டு பாய்ந்தோடி வருகையில் அதை எதிர்த்து அடித்து ஆடாமல் லேசாகத் தொட்டு சற்றே திசைமாற்றி அது வந்த விசையினாலேயே எல்லைக்கோட்டை கடக்கவிட்டு ஓட்டங்களை எடுப்பதுபோல துரியோதனன் அவருடைய உணர்ச்சிப்பெருக்கான உரையை மறுத்துப் பேசாமல் ஆமோதித்து சற்றே திசைமாற்றி தனக்கு சாதகமானதாக அவர் எண்ணத்தை மாற்றிவிடுகிறான். இதற்கான உரையாடல் மிக தர்க்கபூர்வமாக இருப்பதாகத் தோன்றுகிறது. இப்போது சல்யர் துரியோதனன் பக்கம் இருப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அவர் பேசுவதற்கு இனி ஏதுமில்லை.
சிலர் தான் ஒரு முடிவெடுத்துவிட்ட காரணத்தினாலேயே அதை மாற்றத் தேவையில்லை எனக் கருதுவார்கள். அவர்கள் தன்னை மாற்றிக்கொள்ள அவர்கள் அகங்காரம் இடம்கொடுக்காது. இனி அவர்கள் முடிவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் காதில் அது நுழையப்போவதில்லை. எதிர் தரப்பினர் பேசுகையில் அதற்கான மறுப்புரையை மட்டுமே அவர்கள் மனம் எண்ணிக்கொண்டிருக்கும். ஒரு சொல்கூட அவர்கள் காதுகளில் நுழையாது. களத்தில் ஓடாது நின்று விட்ட பந்தை ஒருவர் எப்படி அடித்து ஆடமுடியும்? இருப்பினும் சுருதகீர்த்தி அவரின் மனதை மாற்றுவதற்காக அற்புதமாக தன் வாதங்களை வைக்கிறான். மூன்று முக்கியமான் தர்க்கங்களை அவர் முன் வைக்கிறான்
அவனின் முதல் தர்க்கம், அவரின் குருதியுறவுக்காக அவர் பாண்டவர் தரப்பில் சேரவேன்டும் என்பது. எப்போதும் உறவுகளுக்கு உதவ வேண்டிய கடமை ஒருவருக்கு இருக்கிறது. அந்த உறவுடன் அவருக்கு நெருக்கம் இருந்ததா இல்லையா போன்றவையெதுவும் தேவையில்லை. அதற்கு வேறு எவ்வித விளக்கமும் தேவையில்லை. தன் உறவினரிடம் தனக்கு உதவும்படி கோர ஒருவருக்கு உரிமை இருக்கிறது. அதை மறுப்பதற்கு அவர் தகுந்த காரணம் கூற வேண்டும். அதை மிக அருமையான மொழியில் சுருதகீர்த்தி கூறுகிறான்.
“தங்களைப்போன்ற முதுதந்தை என்றும் குலஅறத்தையே முதன்மையாக கருத வேண்டும்.
அதை மைந்தர்களாக நாங்கள் எதிர்பார்க்கிறோம். மூதாதையே, ஒவ்வொரு விலங்கும் உண்ணும் ஒவ்வொரு துளி உணவும் மூன்று பகுதிகளாக பகுக்கப்பட்டு அதன் உடலில் குருதியாகின்றன என்கின்ற நூல்கள். ஒரு பகுதி உண்டு உயிர்வாழ்தலுக்காக. ஒரு பகுதி உறவுகளைப் பேண. மத்ரரே, பிறிதொரு பகுதி தன் கொடிவழிகளைப் படைத்து பேணி விட்டுச்செல்ல. எம் குலத்தின் முதுதந்தையாகிய நீங்கள் உங்கள் பெயர் கொண்ட மைந்தரைப் பேணும் கடமை படைத்தவர். இந்த அவையில் உங்கள் கொடிவழியினரில் ஒருவனாக நின்று எனக்கென படைக்கலம் ஏந்துங்கள், என் உயிர்காத்து களம் நில்லுங்கள் என்று கோரும் உரிமை எனக்குண்டு. என் தம்பியர் சதானீகனுக்கும் சுருதவர்மனுக்கும் இருக்கும் அதே உரிமை. எதன்பொருட்டும் அக்கடமையை நீங்கள் தவிர்க்க இயலாது.”
இரண்டாவது தர்க்கமாக அவன் சொல்வது அவர் நாட்டு மக்களுக்கு மன்னனென்ற முறையில் அவர் ஆற்றவேண்டிய கடமை. துரியோதனுடன் கூட்டு சேர்வது எவ்வகையிலும் சல்யரின் நாட்டு மக்களுக்கு நன்மை தராது என்று சிறப்பாக எடுத்துரைக்கிறான்
.
“இன்று எளிய சொல்லாடல்களுக்கு மயங்கி அஸ்தினபுரியுடனோ அவர்களின் கைகளென அங்கு திகழும் சௌவீர நாடுகளுடனோ பால்ஹிகக்குடிகளுடனோ உறவு கொண்டீர்கள் என்றால் மத்ரநாட்டை வைத்து ஆடி இழக்கும் பழி உங்களைச் சூழும். மத்ர நாட்டை காப்பாற்ற வேண்டுமென்ற எந்தப் பொறுப்பும் இவர்களுக்கில்லை. அப்பொறுப்பு இருப்பது எந்தையரிடம். எங்கள் கொடிவழிகளிடம். ஏனெனில் நீங்கள் எங்கள் குருதி. உங்கள் வீழ்ச்சி எங்கள் வீழ்ச்சியே. நீங்கள் அழிந்தால் தீராப்பழி கொள்ள வேண்டியவர்கள் நாங்கள் மட்டுமே. மூதாதையே, நாளை இடையளவு நீரில் நின்று நீத்தாரை எண்ணி கையள்ளி நீரளிக்கையில் உங்கள் பெயரையும் உங்கள் தந்தை பெயரையும் சொல்ல வேண்டிய கடன் கொண்டவர்கள் நாங்களே. மத்ர நாட்டின் பொருட்டு பிறிதெவருடனும் நீங்கள் இணைய முடியாது. மத்ர நாட்டின்பொருட்டு நீங்கள் வந்து நின்று படைக்கலம் எடுத்து தோளிணை கொண்டு களம் நிற்க வேண்டியது இந்திரப்பிரஸ்தத்துடன் மட்டுமே.”

மூன்றாவதாக அவன் துரியோதனனின் தர்க்கததிற்கான எதிர் வாதத்தை வைக்கிறான். துரியோதனன், வேதங்களைக் காக்கும்பொருட்டு ஒர் ஷத்திரியராக தன்னுடன் சல்யர் இணைய வேண்டும் என்று கூறியே தன்பால் அவரை இழுத்துள்ளான். சுருதகீர்த்தி அதற்கு மிக அருமையாக பதிலளிக்கிறான். வேதத்தை காப்பதற்கு தகுதிகொண்டவர் என்று ஏன் ஐம்பத்தாறு மன்னர்கள் மட்டும் கூறப்படுகிறார்கள் எனக் கேட்கிறான்.
“இவ்வாறு இதை பகுப்பதற்கு முன்னர் தொல்வேதம் புரந்த பண்டை மூதாதையர் பதினாறு ஷத்ரிய குலங்களாக இந்நிலத்தை பகுத்தனர்.
ஷோடச ஜனபதங்களின் தலைவர்களால் அன்று வேதம் காக்கப்பட்டது. முந்தை மூதாதை ஒருவன் பதினாறை ஐம்பத்தாறாக்குவான் என்றால் இந்த ஐம்பத்தாறை நூற்றெட்டாக்குவதற்கு ஒருவன் எழுவதில் என்ன பிழை? இது இங்கு என்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது, மத்ரரே. வேதஅனல் விளைய இங்கே ஷத்ரியக் குலங்களை அழித்தாகவேண்டும் என எழுந்த பரசுராமரின் குருமரபு இன்றும் உள்ளது. அனல் அளித்து அது தொல்குடியினரை ஷத்ரியர்கள் என அமர்த்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் வாள்முனைகளால் வேதம் நாம் அறியா நிலங்களிலும் தழைக்கிறது.”
ஒருவகையில் வேதம் அவர்கள் கையில் சிறையிடப்பட்டு இருக்கிறது. அதன் வளர்ச்சி முடக்கப்பட்டிருக்கிறது. மேற்கத்திய மதங்களின் வேதங்கள் அந்தந்த வேத நூல்களால் எல்லையிடப்பட்டவை. அதைத் தாண்டி ஒரு வரி தத்துவம் கூட எழ முடியாது. ஆனால் இந்திய மதங்களின் வேதங்கள் 'வெளி' யில் இருந்து எடுத்து எழுதப்பட்டவையாகக் கூறப்படுகிறது. அதாவது வேதங்கள் பிரபஞ்சத்தில் எப்போதும் இருந்து வருகின்றன. தன் கூரிய சிந்தையின் மூலம் கண்டெடுப்பவற்றை ரிஷிகள் மொழிவழிப்படுத்தியிருக்கிறார்கள். கண்டெடுக்கப்படவேண்டியவை மேலும் இருக்கலாம். ஆகையால் புதிய வேத உண்மைகள் கண்டெடுக்கப்படுவதற்கும் அது வேத விற்பன்னர்களால் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுவதற்கும், முந்தைய வேதங்களோடு தொகுத்துக்கொள்வதற்குமான வாய்ப்பு இருக்க வேண்டும். அதை தடுப்பதாக இப்போதைய ஷத்திரியக் கூட்டமைப்பு உள்ளது. அந்தக் கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ளபடாத சல்யர், அனைவரும் சேர்வதற்காகப் போராடுவதற்கு பதிலாக அந்தக் கூட்டமைப்பை உறுதிப்படுத்த நினைப்பவர்களுடன் கூட்டு சேர்வது முரணானது என்று சுருதகீர்த்தி கூறுகிறான். கிருஷ்ணனை வேதத்திற்கு எதிரானவர் என சொல்லி அவருக்கு எதிரானவர்களை தன் பக்கம் ஆள்சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணரை வேதத்தை அழிக்க வந்தவரல்ல அதை பெருக்குபவர் எனக் கூறுகிறான்.

“பரசு ஆழியானது என்று கொள்க!” என்றான் சுருதகீர்த்தி. “அதை ஏந்தியவர் வேதத்தை அழிக்கவில்லை, அதை கூர் தீட்டுகிறார். அறுவடை செய்கிறவனை வேளாண்மை அறியாதவன் பயிரை அறுத்து அழிப்பவன் என்று எண்ணக்கூடும். அவன் விதை கொள்கிறான். நூறு மடங்கு நிலங்களுக்கு அப்பயிரை கொண்டு செல்கிறான். இளைய யாதவர் வேத எதிரி அல்ல. வேதத்தை விதைகளென விரிக்க வந்த மெய்வேதத்தின் தலைவன். முனிவர்களில் வியாசன். அறிஞர்களில் கபிலன். அரசே,
மன்னர்களில் அவர் பிருது. தாங்களோ நானோ அவர் அறிந்த வேதத்தை அறிந்ததில்லை. அவர் சென்ற தொலைவு செல்லும் சிறகுகள் நமக்கில்லை.”
வேதத்தின் பொருட்டு என்று கூறப்படும் இப்பூசல் அதற்கானதல்ல. வேதத்தை தனக்கு சொந்தமானதாகக் கருதிக்கொள்பவருக்கும் அதை உலகினர் அனைவருக்கும் உரியது என சொல்பவருக்கும் இடையிலான பூசல். ஆகவே அந்த ஐம்பத்தாறூ ஷத்திரியர்களால் கூட்டமைப்பில் இல்லாத சல்யர் இயல்பாக எதிர் தரப்பில் அல்லவா இருக்க வேன்டும் என சுருதகீர்த்தி கூறுகிறான்.
“ஆனால் இங்கு நிகழும் இப்பூசல் வேதத்திற்கானதல்ல, வேதம் காக்கும் உரிமைக்கானது. அவ்வேறுபாட்டை தாங்கள் அறிந்தாகவேண்டும். வேதமே அழிந்தாலும் வேதம் காக்கும் உரிமையை பிறருக்கு விட்டுத்தரமாட்டோம் என்று எண்ணுகிறார்கள் இந்த ஐம்பத்தாறு ஷத்ரியர்கள். வேதம் எவருக்கும் தனியுரிமை அல்ல. அது மெய்யறிவு என்றால் மானுடத்துக்குரியது என்கிறார் இளைய யாதவர். மூதாதையே,
அது பாரதவர்ஷத்தினருக்கு மட்டும் உரியதல்ல.
காப்பிரிகளுக்கும் பீதர்களுக்கும் யவனர்களுக்கும் சோனகர்களுக்கும் உரியது என்கிறார்.
வேதம் வளரவேண்டுமென்று எண்ணுபவர்கள் சென்றடைய வேண்டிய இடம் இளைய யாதவரின் தரப்பு மட்டுமே.”
ஆனால் இவையெதுவும் சல்யர் தன் காதில் நுழையாமல் போய்விடுகிறது. இதில் முதியவர்களை கையாள்வதில் சுருதகீர்த்தியின் அனுபவமின்மை தெரிகிறது. தன் வாதத்தைவிட அவர் தன் வயதைத்தான் கணக்கில்கொள்வார் என்பதை அவன் அறியவில்லை. நீ சிறியவன், எனக்கு தெரியாததையா நீ சொல்லிவிடப் போகிறாய் என்ற எண்ணமே அவருக்கு இருக்கும். இதே வாதங்களை சிறு சொல் தொடர்களாக வைத்து அவரை ஐயமெனக்கேட்டு, தெளிவுற்றதைப்போல் நடித்து, தன் பேதமையை பொறுக்கச்சொல்லி, தான் இப்படி நினைப்பது சரியா எனக்கேட்டு, அவர் வாயிலாகவே இந்த கருத்துக்களை வரவைக்கவேண்டும். இதைத்தான் அஸ்வத்தாமனும் துரியோதனனும் செய்தனர். சல்யர் சுருதகீர்த்தியின் வார்த்தைகளை மறுத்துரைப்பதற்கான சாத்தியத்தை மட்டுமே எதிர் நோக்கியிருக்கிறார். அதற்காக தன் சிந்தையை துழாவியும் அவரால் ஒரு காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. துரியோதனன் அதற்கான அடியை எடுத்துக்கொடுக்கிறான். அவன் சுருதகீர்த்தியிடம் ஒரு ஐயமென கேட்கிறான்:
“மைந்தா, இளைய யாதவன் முன்வைக்கும் அந்த வேதத்தில் அசுரவேதம் அடக்கமா?
இதற்கு ஆம் என்று சுருதகீர்த்தி சொல்வான் என்று துரியோதனனுக்கு தெரியும். இதன் மூலம் அசுரகுலத்தை விட நாம் யாவரும் உயர்ந்த்வர்களல்ல என தெரியப்படும்.
இது சல்யரை மீண்டும் தன் பக்கம் இழுக்கும் என்பதை துரியோதனன் அறிந்திருக்கிறான். சமூகத்தில் முதன் நிலையில் இருப்பவர்கள் தனக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களை தாழ்த்தி வைத்திருப்பார்கள் ஆனால் அப்படி தாழ்த்தப்பட்டிருக்கும் இடை நிலையில் இருப்பவர்கள் தன்னைவிட குறைவான நிலையில் இருப்பவர்களை இதைவிட மிகவும் கீழாக நடத்துவார்கள். அவர்களைவிட எப்போதும் தான் மேலானவன் என்று தெரியும்படி நடந்துகொள்வார்கள். சல்யர் தன்னை அவமதிக்கும் ஷத்திரியர்களை பொறுத்துக்கொள்கிறார். ஆனால் தனக்கு இணையாக அசுரர்கள் வைக்கப்படுவார்கள் என்பது அவரைக் கொதிப்படைய வைக்கிறது. இந்த ஒற்றை வாதத்தைப் மட்டும் பிடித்துக்கொண்டு சுருதகீர்த்தி கூறியதனைத்தையும் அலட்சியப்படுத்துகிறார். சுருதகீர்த்தி கிருஷ்ணனை தன் இறையெனக் கொள்ளலாம். ஆனால் கிருஷ்ணன் பிறந்து வளர்ந்ததை கண்ட ஒரு மூத்தவர் மற்றும் அவனைவிட உயர் குலத்தவன் என்ற எண்ணத்தின் காரணமாக கிருஷ்ணனை புகழ்தல் மற்றும் கிருஷ்ணனை அவருக்கும் மேலான நிலையில் வைப்பது அவரை சினமடைய வைக்கிறது. அவர் கிருஷ்ணனை வசைபாடத் தொடங்குகிறார்.
அவரின் இந்த மூடத்தனம் சுருதகீர்த்தியின் பொறுமையை இழக்கவைக்கிறது. அவன் அனைத்து மரபுகளையும் விடுத்து இளமைக்கே உரிய கடும் கோபத்தோடு சீறி எழுந்து சல்யரைச் சாடுகிறான்.
“என்னடா எண்ணினாய்? உன் துணை இல்லையேல் மெய்மை வெல்லாதென்றா? அறிவிலியே,
மெய்மையின் பக்கம் நிற்க வேண்டுமென்று உன்னிடம் வேண்ட வந்தது எங்களுக்காக அல்ல. உனக்காக.
உன்னைக் கொன்று வீழ்த்தும் பழி எங்கள் கைகளுக்கு வரக்கூடாதென்பதற்காக. நீயோ, உன் குடியோ, இதோ இங்கிருக்கும் என் தந்தையோ,
அவரைச் சார்ந்த அரசகுடியோ, இந்நிலத்தில் வாழும் ஷத்ரியர்கள் அனைவருமோ,
ஏன், இம்மண்ணில் இன்று வாழும் மானுடக்குடிகள் அனைவருமோ எதிர்த்து நின்றாலும் வெல்வது பீலி சூடியவனின் நாவில் எழுந்த சொல் மட்டுமே.
அதிலெனக்கு எந்த ஐயமும் இல்லை.”
இப்போது அவன் தூது வந்தது துரியோதனனுக்கும் சேர்த்து என ஆகிறது. அவன் அங்கிருக்கும் அஸ்வத்தாமன் மற்றும் துரியோதனுக்கும் சேர்த்து பாண்டவர் தரப்பின் முடிவை கூறுகிறான்.
திரும்பி அவர்கள் அனைவரையும் நோக்கி அவன் சொன்னான் “அறிக,
வெல்லும் சொல் ஒன்றே! இவ்வாறு புவி பிளந்து குருதி பெருக்கித்தான் அது மண்ணிலெழும் எனில் அதுவே நிகழ்க! அது இங்கு வாழும். இப்புவியில் மானுடன் நாவில் இறுதிச்சொல் திகழும் வரை அது வளரும்.”
நீண்ட மூச்சுடன் நிலைமீண்டு சல்யரை நோக்கி கைசுட்டி “நீ நல்வாய்ப்பை உன் ஆணவத்தாலும் சிறுமையாலும் இழந்தாய். இனி நீ கால்பணிந்து கோரினாலும் உன் உறவு பாண்டவக் குடிக்கில்லை, நன்று!”
என்று தலைவணங்கி வெளியே சென்றான்.
வெண்முரசின் இன்றைய பகுதி கிருஷ்ணனின் வேதமுடிவு தத்துவத்தின் மையத்தை சிறப்பாக சித்தரிக்கிறது. இந்த வாதத்தின் நடுவே அதை நாம் அதை தவறவிடக்கூடாது.
இதை தியானம் செய்து மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது.
மானுட உயிர்கள் அனைத்திற்கும் வேதம் அருளப்பட்டுள்ளது. விலங்குகளுக்கும் புழுபூச்சிகளுக்கும்கூட அவற்றுக்கான வேதம் இருக்கக்கூடுமென்று சாந்தீபனி மரபு கொள்கிறது. வேதங்கள் வேறுபடுவது அவற்றை விளங்கிக்கொள்ளும் இடத்தில்தான்” என்றான்.“மெய்ப்பொருளை உணரும்போது வேதங்கள் ஒன்றாகின்றன. அனைத்து நதிகளும் கடலையே சென்றடைவதுபோல, அனைத்து இலைகளிலும் மரத்தின் சுவையே திகழ்வதுபோல. நுண்வடிவில் விதையில் உறைவது ஆயிரம் கிளைகொண்ட மரமென்றெழுவதுபோல. மூத்தவரே, ஆருணியாகிய உத்தாலகர் தன் மைந்தர் ஸ்வேதகேதுவுக்குச் சொன்ன மெய்மை இது. தோன்றுமிடத்தைக்கொண்டு நதிகளை புரிந்துகொள்ளலாம். விண்துழாவுகின்றனவா மண்ணில் கவ்வியுள்ளனவா என்றுவைத்து மரத்தையும் புரிந்துகொள்ளலாம். மூத்தவரே, கடலை புரிந்துகொள்வதற்கு புலன்கள் போதாது. நுண்மையைப் புரிந்துகொள்வது நுண்மையாலேயே இயலும். முழுமையை அறியாமல் வேதத்தை உணரவியலாது. அதுவே வேத முடிவு எனப்படுகிறது. அதுவே இரண்டின்மை. மெய்யறிதல்.” “மெய்மை நோக்கி செல்லுந்தோறும் அசுரவேதமும் நாகவேதமும் ஒன்றென்றாகின்றன. அவ்வொருமையில் நின்று அனைத்தையும் ஒன்றிணைக்கும் அறிதல் இளைய யாதவரின் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது. அதுவே துவாபர யுகமெனும் மரத்தில் விளைந்த கனி.

தண்டபாணி துரைவேல்