இனிய ஜெயம்
பாலபாகவதம் கடந்து வெண்முரசில் நீலனின் வருகை முதன் முதலாக நிகழ்வது ,நீலன் தனது நிலத்தை மீட்க படை உதவி கோரி அஸ்தினபுரியை அணுகும் நிலையில் தான் . விதுரரை உடைத்தெறிந்து அஸ்தினபுரியின் படையை தன்னுடன் அழைத்து செல்கிறான் . ஒரு குறிப்பிட்ட தருணத்தில் விதுரன் நீலனின் புன்னகையை ,அதன் அர்த்த விரிவை தரிசிக்கிறான் .
அந்த நில மீட்பு போரில் ஒரு காட்சி , எதிர் நிலையினர் தலைகளை துணித்து எறிந்து கொண்டிருக்கிறான் நீலன் .சமானமாக இடக்கையில் ஏதோ இன்சுவை தீனி . ஆம் அவனுக்கு போர்க்களத்தில் கொலைத்தொழில் செய்பவனாக அவனைக் கொண்டு நிறுத்தும் இந்த வாழ்வும் அவனுக்கு மதுரம் ,
அங்கே துவங்கிய நீலன் இன்று இங்கே இந்த குருஷேத்திர போரின் தலைவாயிலில் வந்து நிற்கிறான் . ஒரு முனையில் மிகுந்த மர்மம் கொண்ட ஆளுமை .மறு முனையில் அனைத்து தர்க்கங்களை இணைத்த முழுமை தர்க்கத்தை அறிந்தவன் எனும் முழுமை நிலை . அன்று காண்டவ வனத்தில் தப்பி செல்லும் நாக குழந்தையை கொல் என அர்ஜுனனனுக்கு ஆணையிடுகிறான் .அர்ஜுனன் என் அறம் அதை தடுக்கிறது என பதில் சொல்ல ,எனில் அவ்வாறே ஆகுக என பதில்சொல்லவிட்டு புன்னகைக்கிறான் நீலன் . அர்ஜுனன் அன்றைய அறத்திலிருந்து இன்று வந்து நிற்கும் அறம் எதுவோ ,அதில்தான் காண்டவனத்தின் அழிவின் போது நீலன் நின்றிருக்கிறான் . எனில் அங்கிருந்து இன்று இந்த குருஷேத்திரத்தின் முன்பு வந்து நின்றிருக்கும் நீலன் ''உள்ளே ''எத்தனை தொலைவு வளர்ந்திருப்பான் ? அதில் நிற்கும் அவனால் சாத்யகியின் பிள்ளைகளை அல்ல ,தனது சொந்த பெயர்மைந்தர் அங்கே நின்றிருந்தாலும் அவன் அவ்வாறே அவர்களை கையாண்டிருப்பான் .
பிறருக்கு எப்படியோ , நீலனைக் கண்டதும் நான் மிக மிக இலகுவாக உள்ளே என்னை உணர்கிறேன் . திரௌபதி என்ன சொல்லப்போகிறாள் என ஒவ்வொருவரும் பதற ,அந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வது , அப்படி எதிர்கொள்வதில் உள்ள பின்புலம் என்ன என நீலன் சொல்ல ,
தர்மன் புரியாமல் புன்னகைக்கிறான் .பீமன் வழமை போல நீலன் சொல்வதை கசந்த புன்னகையாக மாற்றுகிறான் .இந்த இரண்டுக்கும் வெளியில் நின்று , [முற்றிலும் தனக்கே தனக்கென ஒரு குழந்தை ஒரு விளையாட்டை உருவாக்கி ,அதில் இனைய வரும் பிற குழந்தைகள் ,இந்த புதிய விளையாட்டின் விதிமுறைகள் புரியாமல் திகைக்கும்போது, இந்த குழந்தை ஒரு சிரிப்பு சிரிக்குமே அது போல] குழந்தையின் சிரிப்பை சிரிக்கிறான் .
ஆம் இனி நீலன் இங்கு நிகழும் அனைத்திலிருந்தும் விடை பெரும் வரை நான் நீலன் பின்னேதான் நிற்ப்பேன் . அகிலம் மதுரம் .இந்த குருஷேத்ரம் அதன் கசப்புகள் எல்லாம் நீலனின் இந்த மதுர அகிலம் என்பதில் துளியினும் துளி .
கடலூர் சீனு