அன்பின் ஜெமோவிற்கு வணக்கம்,
இன்று(30.06.19) தினமலரில் ஒரு செய்தி வாசிக்க நேர்ந்தது. ’குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு கங்காரு முறை சிகிச்சையில் மறுவாழ்வு’ என்ற தலைப்பில் ஒரு செய்தி.அதாவது குறைப்பிரசவத்தில் 590 கிராம் எடையுடன் நுரையீரல் வளர்ச்சியடையாத நிலையில் பிறந்த குழந்தையை மருத்துவர் ஆலோசனைப்படி தாய் தன் மார்போடணைத்து 100 நாள் வரை வளர்த்து இயல்பு நிலைக்குத் திருப்பியதாக செய்தி கூறுகிறது. இச்செய்தியைப் படித்ததும் எனக்கு வெண்முரசு நாவலின் வண்ணக்கடல் பகுதியில் ஹேகய குலத்து கிருதவீரியன் பார்கவ குலத்தில் ஒருவரையும் எஞ்ச விடாமல் கொன்றழித்தபோது சியவனனின் மனைவி ஆருஷி மட்டும் தப்பித்து ஓடியதும்,ஓடும்போது புதரில் விழுந்த அதிர்ச்சியால் குறைப்பிரசவமாகி ஆறு மாதமே ஆன சிசுவைத் தன் தொடையில் கட்டிக்கொண்டு நான்கு மாதம் வரை வளர்த்து ஊருவனை ஆளாக்கியதும் படித்தது நினைவிலெழுந்தது.
இது போல் வாழ்வியல் அனுபவமும்,இலக்கிய அனுபவமும் ஒரே புள்ளியில் சந்திக்கும்போது எற்படுகின்ற உள்ளக்கிளர்ச்சியை விவரிக்க எப்போதும் வார்த்தைகள் வசமாவதில்லை.
நன்றி என்றும் அன்புடன்,
இரா.விஜயன்.
புதுச்சேரி-10