Thursday, April 30, 2015

இணையும் உள்ளங்கள்







எப்பொழுதும் சரியாக 12:05 முன்பு நான் அன்றைய வெண்முரசு பகுதியை படித்து முடித்து விடுவேன். ஆனால் இன்றைய பகுதி என்னை ஏதோ செய்கிறது.



புரிசிரவரசை போல என் கண்களும் குளமாய் மிதக்கிறது. மறுபடியும் மறுபடியும் படித்து கொண்டு இருக்கிறேன்.



எல்லாருமே இத்தனை நல்லவர்களா!!! (கர்ணன் மட்டும் missing..).. பிறகு எப்படி இந்த மாபெரும் போர் உருவாயிற்று?  இவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு  சாக போகிறார்களே என்ற பதட்டம் உருவாகிறது.. எல்லாம் தெரிந்து ஒருவன் சிரித்து கொண்டே செல்கிறானே (கண்ணன்) அவன் மீது கோபம் கோபாமாய் வருகிறது. 



சிறு கோபத்தால் பிரிந்து போன நண்பர்களை நிறைய சேர்த்து வைத்து உள்ளேன். ஒருவரை ஒருவர் பார்க்கும் வரைக்கும் தான் அத்தனை கோபமும், ஆனால் பார்த்து கொண்டால் குழுங்கி குழுங்கி அழுக ஆரம்பித்து விடுவார்கள்..



தலைக்கு மேல் வேலை இருக்கிறுது. Auditor கண் முன்னர் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு நிறைய “Schedules” தர வேண்டி இருக்கிறது. ஆனால் ஒரு மணி நேரமாக மனம் வெண்முரசை சுற்றி சுற்றியே வந்து கொண்டு இருக்கிறது. தர்மனும், துரியனும், அர்ஜுனனும், பீமனும், பரிதாபமான  புரிசவரசும் , (பாழாய் போண !!!) கண்ணனும் மாறி மாறி  கண் முன்னே வந்து கொண்டே இருக்கிறார்கள்.



கண்டிப்பாக இன்று இரவு தூங்க  நெடு நேரம் ஆகும்..



ரகுராமன்

உறவுகளும் கிருஷ்ணனும்



ஜெ,

வெண்முரசில் துரியோதனனும் பாண்டவர்களும் சந்திக்கும் இடம் மிக நெகிழ்வானது. இதைப்போல மனிதமனங்கள் ஒரு உச்சியிலே ஒன்றுடன் ஒன்று தழுவிக்கொள்ளும் ஏராளமான இடங்கள் இதற்குள்ளாகவே வெண்முரசிலே வந்துவிட்டன. ஒவ்வொன்றும் பெரிய மன எழுச்சியைத்தான் உருவாக்குகின்றன. ஏன் என்றால் அதில் அந்தக் கதாபாத்திரங்களின் peak என்னஎன்று தெரியவருகிறது.

துரியோதனனின் பெருந்தன்மையைப்பார்க்கும்போது ஒன்றை நினைத்துக்கொண்டேன். அவனும் அவன் அப்பா போல மல்யுத்தக்காரன். மல்யுத்தம் செய்யக்கூடியவர்களுக்கு அந்த அணைத்துக்கொள்ளும் மனநிலை இருக்கிறது. மல்யுத்தமே அணைப்புதானே. திருதராஷ்டிரர் அன்பாக இருக்கும்போதும் நாம் தோள்கோர்க்கவேண்டும் என்றுதான் சொல்கிறார்

அதைப்போலவே துரியோதனனும் இருக்கிறான். அவனுடைய வஞ்சல் எல்லாமே கட்டிப்பிடித்தால் தீருவதுதான். மிக நைச்சியமாக அங்கே கிருஷ்ணன் அழைத்துச்செல்கிறான். கிருஷ்ணன் அந்த சகோதரர்களைச் சேர்த்து வைப்பதற்குச் செய்யும் முயற்சிகளும் அதற்கு அவனுடைய மனநிலையும் அழகாக ச் சொல்லப்பட்டுள்ளன.

கிருஷ்ணன் போரை நிகழ்த்திவைத்தான் என்று சொல்கிறார்கள். அவன் போர் நடக்காமலிருக்கவே எல்லாத்தையும் செய்தான். போர் நடக்கும் என்பது உறுதியானபிறகுதான் பாண்டவர் ஜெயிப்பதற்கு என்ன வேனுமோ அதைச்செய்ய ஆரம்பித்தான். இந்தச் சித்திரத்தை இன்றைய அத்தியாயம் வலுவாக்ச் சொல்லிவிடுகிறது

சரவணன்

ரத்தம் அறியும்



ஜெ

இன்று பாண்டவர்களும் கௌரவர்களும் சந்திக்கும் இடம் மிகமிக நுட்பமாகச் சொல்லப்பட்டிருந்தது. அவர்களை கிருஷ்ணன் நுட்பமாகக் கூட்டிச்சென்றுவிடுகிறான். சந்திக்கிறார்கள். என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஏதோ பேசுகிறார்கள். கண்களால் சந்திப்பதில்லை. அபப்டியே முடிந்திருக்கும்

ஆனால் கிருஷ்ணன் ஒன்று செய்கிறான்


கிருஷ்ணன் தன் இடக்கையால் துரியோதனனின் வலக்கையைப் பிடித்து “மீண்டும் கதை ஏந்தும் தோள்களுடன் காணவிழைகிறேன், மூத்தவரே” என்றான். “அதைத்தான் வரும்போது பார்த்தனிடமும் சொன்னேன்.” இயல்பாக அவன் தன் மறுகையால் யுதிஷ்டிரன் கையைப் பற்றினான். “நிகழ்ந்தது எதுவாக இருப்பினும் ஒரு நோய் என்றே அதைக்கொள்ளவேண்டும் என்றேன்.” அவன் துரியோதனன் கையை யுதிஷ்டிரன் கையுடன் பிணைத்து “உடன்பிறந்தவர் நோய் உசாவுவதைப்போல மருந்து ஏதுமில்லை” என்றான்.

அற்புதமான வேலை. இருவரையும் தொடவைத்துவிடுகிறான். அப்படியே உடைந்துவிடுகிறார்கள். பனி விலகிவிடுகிறது. மூளை மனசு எல்லாம் மாரி மாறிப் புரிந்துகொள்ளாது. உடம்புதான் புரிந்துகொள்ளும். ரத்தம்தான் புரிந்துகொள்ளும். அதைக் காணமுடிந்த இடம் அது. அதை அறிந்தவன் கிருஷ்ணன்

ஆர். மூர்த்தி

பிரம்மாண்டத்தின் இசை






விஸ்வரூபம் என்றால் பிரபஞ்சவடிவம் என்று சாதாரணமாகச் சொல்லலாம். அது பயமுறுத்துகிறது. ஏன் பயமுறுத்துகிறது என்ற கேள்விக்கு அது பயங்கரமானது என்ற பதிலைத்தான் சொல்லமுடியும்/ அதற்கு அப்பால் சென்று அது ஏன் அந்தப்பயத்தை அளிக்கிறது என்று கேட்பவர்கள் அதை பலவாறாக விளக்கியிருக்கிறார்கள்

அதில் முக்கியமான முடிவில்லாததன்மை என்பதுதான். முடிவில்லாதபடி போய்க்கொண்டே இருப்பது பரம்பொருளின் விஸ்வரூபம் என்பதுதான் எளியவனாகிய மனுஷனை பயப்படுத்துகிறது

அதேபோலப் பயப்படுத்துகிறது cycle அதாவது திரும்பத்திரும்ப வாழ்க்கையும் மரணமும் உருவாகுதலும் அழிதலும் இங்கே நடந்துகொண்டே இருப்பது

இந்த ரெண்டு விளக்கத்துக்கும் அப்பால் செல்லக்கூடிய விளக்கம் புல்லாங்குழல் இசையைப்பற்றிய பகுதியிலே வருகிறது. அதாவது ஒன்று திரும்ப வராலமலேயே சென்றுகொண்டே இருக்கக்கூடிய முடிவில்லாமை. முதல் பார்வையில் எல்லாம் திருபத்திரும்ப நடக்கிறது போல இருக்கிறது. ஆனால் அப்படி இல்லை. மனிதர்கள் பிறக்கிறார்கள், சாகிறார்கள். ஆனால் ஒரு மனிதர் திரும்ப வருவதில்லை. ஒரு கூழாங்கல் மாதிரி இன்னொன்று இல்லை. ஒரு நிகழ்ச்சி திரும்ப நடப்பதில்லை

இப்படியே போய்க்கொண்டிருக்கும் முடிவில்லாமையிலே மனுஷனின் ஞானத்துக்கோ அனுபவத்துக்கோ நூல்களுக்கோ முன்னோர் சொல்லிவைத்த ஒண்ணுக்குமோ ஒரு அர்த்தமும் இல்லை. உண்மையில் அர்த்தங்களெல்லாம் மனுஷனே உருவாக்கிக்கொண்ட இந்தச் சின்ன ரவுண்டுக்குள்தான். வெளியே பரம்பொருளின் விஸ்வரூபத்திலே அதெல்லாம் வெயிலில் வைத்த தண்ணித்துளி மாதிரி ஆவியாகியிரும்

அந்த சூன்யம்தான் பயமூட்டுகிறது. அங்கே மனுஷன் நிற்க முடியாது. அதைப்பார்த்ததுமே திரும்பவேனும் என்று அலற ஆரம்பிக்கிறான். அங்கே அவனுக்கு இடமே இல்லை. அவன் இருக்கிறதும் இல்லாமலிருக்கிறதும் சமானம்

அர்ஜுனன் கண்ட விஸ்வரூபத்தை புல்லாங்குழலில் பூரிசிரவஸும் பார்க்கிறான். அதன் பிறகு யாதவப்பையனாக பார்த்து சல்லித்தனமாக ப்பெசுவதாக நினைக்கிறான். அந்த மாயைதான் அவன் விளையாட்டே

சுவாமி

கண்ணில் இசை





அன்புள்ள ஜெ

கிருஷ்ணனின் இசையை காதால் கேட்காமல் கருத்தால் கேட்ட அனுபவத்தை அளித்த அத்தியாயம். பலமுறை வாசித்தேன். அதிலே ஒரு உச்சாடனத்தன்மை இருந்தது. என்னதான் சொன்னாலும் பாஷை என்பது காதுக்குரியதுதானே சொல்லிக்கேட்டால் வரும் இன்பம் நினைத்துப்பார்த்தால் வருவதில்லை. தமிழுக்கு இருக்கும் அற்புதமான சந்தத்தை உணரமுடிந்த வரிகள்

நீரில் விழுந்த குருதித்துளி. அசைவற்ற சுனைப்பரப்பில் பரவும் நெய்ப்படலம். கொடிவழியாக செல்லும் செவ்வெறும்பு நிரை. இளவெயிலில் ஆடும் சிலந்திவலை. மலைமடியில் விழுந்த முகில்பிசிறு. பாலையில் தன்னந்தனியாக ஓடும் வெண்புரவி. குட்டியானையின் குறுவால் சுழற்சி. பனிப்புகை படரும் மலைச்சரிவுகள். தேவதாரு. தனித்த பசுங்கோபுரமென எழுந்த தேவதாரு. அது சூடிய ஒளிமிக்க வானம். தனிமையென விரிந்த வானம். தித்திக்கும் வானம். மென்மையான குளிர்ந்த வானம்.

அருண்

உருக்கி இணைப்பது




அன்புள்ள ஜெயமோகன்

 காந்தாரியின் மஞ்சத்தில் இளவரசிகள் நடுவே குழல் வாசிக்கும் கண்ணனை திரும்ப திரும்ப வாசித்தவண்ணம் இருக்கிறேன். அவன் குழலொலி என்காதில் கேட்டவண்ணம் இருக்கிறது.  உங்களால் ஒரு குழலொலியை எழுதியே எங்கள் காதில் கேட்க வைக்க முடிகிறது.

எனக்கு இசை விவரணைகள் அதன் சொற்றொடர்கள் எதுவும் தெரியாது. நீங்களும்  இசை சம்பந்தமான கலைசொற்களை எதையும் பயன்படுத்தவில்லை. இறுதியில்தான் அந்தப்பண்ணின் பெயரை குறிப்பிடுகிறீர்கள். ஆனாலும் அந்தப்பண் காதில் ஒலிக்கிறது நீரில் விழுந்த குருதிச்சொட்டு என்று ஒரு உவமை  ஆன்மாவில் கரையும் குழலிசையை கண்முன் நிறுத்துகிறது. இப்பிறவியில் நீ அடைந்த இன்ப்ங்களை கூறு என்று என என் இறுதிக்காலத்தில் கேட்டால் இந்த குழலிசையை கூறுவேன் என நினக்கிறேன். இசையின் மூலமாக பரப்பிரம்மத்தை காட்டும் வரிகள்.

"ஒன்று பிறிதிலாது பன்னரும் பெருங்கோடிகளெனப் பெருகுவது இது. ஒன்றுபிறிதிலாத முடிவிலி. அந்த அச்சம் ஆயிரம் இறப்புக்கு நிகர். பல்லாயிரம் இன்மைக்கு நிகர். பலகோடி வெறுமைக்கு நிகர். ஒன்றுபிறிதிலா வெளியில் சென்று மறைந்த எதுவும் பொருளிலாதாகிறது. பொருளிலாத பெருக்கில் இருப்பென்ன இறப்பென்ன இயல்வதுதான் என்ன? இங்கே நின்றிருப்பது ஏதுமில்லையென்றால் அன்றிருந்ததும் இன்றுள்ளதும் வந்துறுவதும் என்ன?"

   அவ்வறைக்கு வெளியே நடக்கும் அத்தனை அரசியல் திட்டங்களையும் அர்த்தமிழக்கச்செய்யும் இசைப்பெருவெளி. 

  பின்னர் அவன் பேசுவதும் இசை தான்.

   “நழுவிச்செல்வதெல்லாமே ஊழால்தான்” என்று சொன்ன கிருஷ்ணன் துச்சளையிடம் “அந்த ஒரு சொல் இல்லையேல் எப்படி வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது?” என்றான்"

     ஒரு இசை ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒவ்வொரு உணர்வை உருவாக்குவதைப்போல் இந்த வாக்கியம் துச்சளைக்கு மட்டுமல்லாமல், பூரிசிரவஸ்ஸுக்கும், பானுமதிக்கும் காந்தாரிக்கும் ஏன் அங்கிருக்கும் அத்தனை இளவரசிகளுக்கும் என தனித்தனியே பொருள் பொதிந்து அடைகிறது. கண்ணன் பேசுவதெல்லாம் கீதையாகிறது.

  சட்டென்று இக்கடிதத்தை அழித்துவிடலாம் எனத்தோன்றுகிறது. என் உள்ளத்தை என் உணர்வை மிகவும் குறைத்துக்காட்டுகிறது இக்கடிதம். இருந்தாலும் என் சிற்றறிவைக்கொண்டு என் உணர்வை வெளிக்காட்ட இவ்வளவுதான் முடியும் எனும்போது என்னால் வேறு என்ன செய்ய முடியும்.

   த.துரைவேல்

Wednesday, April 29, 2015

பெண்களின் மனப்புண்



ஜெ

இந்த இளவரசிகள் விஜயை, தேவிகை இரண்டுபேரும் பூரிசிரவஸிடம் நடந்துகொள்ளுவதைப் பார்த்தால் அவர்கள்மீது பரிதாபம்தான் வருகிறது. அவனை அவர்கள் புண்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் புண்பட்டிருக்கிறார்கள். அவன் இளவரசியைக் கல்யாணம் செய்ய ஆசைப்பட்டு தங்களைக் கைவிட்டுவிட்டதாகத்தான் நினைக்கிறார்கள். ஆனால் இப்போது என்ன ஆயிற்று, நாங்கள் உனக்கு ஆணையிடும் இடத்தில் வந்து உட்காந்துவிட்டோம் இல்லையா என்று நினைக்கிறார்கள். உண்மையில் அப்படி நினைக்கவில்லை. சும்மா அப்படிச் சொல்லிக்கொண்டு அவனைப்புண்படுத்துகிறார்கள்

பூரிசிரவஸ் புண்படுகிறான். ஆனால் அதைவிடப்பெரிய விஷயங்கள் தொடர்ச்சியாக நடக்கும்போது அதையெல்லாம் சின்ன

விஷயமாக நினைத்து அடுத்தகட்டத்துக்குப் போய்விடுகிறான். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று நினைக்க ஆரம்பித்து கடந்துவிடுகிறான். பெண்கள்தான் பாவம் அதிலே இருந்து அவர்களால் ஒருநாளைக்கும் வெளியேவரவே முடியாது

சீனிவாசன்
 

உறவும் பிரிவும்



அன்புள்ள ஜெ

இன்று துரியோதனனும் தருமனும் சந்திக்கும் காட்சி கண்களிலே நீர் வரவழைத்தது. அது வாழ்க்கையில் அன்றாடம் நாம் காணும் காட்சிதான். அந்த மாதிரியான காட்சிகள் நம் வாழ்க்கையில் நமக்கு எப்போதுமே காணக்கிடைக்கும் சாதாரணமான மனிதனின் சில்லறைத்தனங்களை எல்லாம் கடந்துசெல்லுவதற்கு உறுதுணையாக அமைகின்றன இல்லையா? அதனால்தான் அந்தக் கண்னீர் .அது நமக்கு வாழ்க்கையைப்பற்றிய நம்பிக்கையை மீட்டுத்தருகிறது. நம்மை ஒரு மீண்டும் தெய்வத்திலும் அறநெறிகளிலும் நம்பிக்கைக்கொண்டவர்களாக ஆக்குகிறது. ஒரு குளியல் போல

அந்தமாற்றம் துரியோதனனுக்கு வந்தது குற்றவுணர்ச்சியால்தான். கூடவே பானுமதியின் நல்லெண்ணமும் அதிலே உள்ளது. அதை ப்புரிந்துகொள்ளமுடிகிறது. உண்மையிலே இப்படி முடிந்தால்தான் அடுத்து நடப்பவற்றை விளக்க முடியும். ஏனென்றால் அதன்பிறகு பல ஆண்டுகள் இரண்டுதரப்பும் ஒழுங்காக நாடாண்டிருக்கிறார்கள். சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள்

இனிமேல்தான் சவாலே. இந்த இடத்தில் இருந்து மீண்டும் எப்படி அந்தக்குரோதம் வரைக்கும் போனார்கள் ? அப்படி என்ன ஆயிற்று?அதை எப்படி சொ ல்வீர்கள்? உங்களுக்கு நீஙக்ளே பெரிய சவாலைவிட்டுக்கொண்டிருக்கிறீகள்

சாரங்கன்

கர்ணனின் உள்ளம்



ஜெ,

வெண்முரசில் இந்த அத்தியாயத்தில் சகோதரர்களின் இணைவைப்பார்க்கும்போது ஒரு விஷயத்தைக் கவனித்தேன். கர்ணன் அங்கே இல்லை. சகுனியும் கணிகரும் இருக்கக் கூடாதென்று கிருஷ்ணன் நினைத்ததைப்புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏன் கர்ணனும் இருக்கக்கூடாது என்று நினைத்தான். துரியோதனனும் தருமனும் இணைவதை கர்ணன் விரும்பமாட்டானா? அப்படியென்றால் அவனுக்குத்தான் மிகப்பெரிய காழ்ப்பு உள்ளுக்குள் இருக்கிறதா?

அல்லது கர்ணன் அருகே இருந்தால் துரியோதனன் மனம் விட்டுப்பேசமாட்டான் என்று நினைத்தானா? எனக்கு அந்த இடத்தை எத்தனை நினைத்தாலும் புரியவில்லை. கர்ணனுக்கு தருமன் எவரென்று தெரியும் என்றுதான் வெண்முரசிலே வருகிறது. ஆனால் சகோதரனிடம் வஞ்சமும் கொண்டிருக்கிறானா? இந்த ரகசியம் என்ன?

இந்தமாதிரியான இடைவெளிகள் நிறைய வெண்முரசிலே உள்ளன. அதை வேண்டுமென்றே நீங்கள் விட்டுப்போகிறீர்கள். அதைவைத்து அவனைப்பற்றி யோசிக்கவைக்கிறீர்கள். கர்ணனுக்கு வாரணவதம் எரிப்பு நிகழ்ச்சி மனவருத்தம் அளித்தது. ஆனால் துரியோதனின் குற்றவுணர்ச்சியிலே அவன் கலந்துகொள்ளவும் இல்லை

சிவராமன்

பீஷ்மரின் துறவு






பீஷ்மரின் கதாபாத்திரத்தை நானெல்லாம் ரொம்பநாள் விட்டிருந்தேன். இப்போது மீண்டும் வாசிக்கும்போது அப்படி விட்டுவிட்டுத் தெரிந்தாலும் நல்ல ஓர்மையோடு சிறப்பாக இருப்பதைக் கண்டேன்.

பீஷ்மர் உண்மையில் மகாபாரதத்தில் தொடக்கத்திலே வந்தபின்னாடி கடைசியில் போரில்தான் வருகிறார். மற்ற இடங்களிலே எல்லாம் அவருடைய பணி பூஜ்யம்தான். அந்த விஷயத்தை கதைசொல்லிகள் அப்படியே விட்டுவிடுவார்கள். ஆனால் வெண்முரசிலே அது அவருடைய துறவுமனநிலையின் காரணமாக வந்தது என்று சொல்லியிருப்பது சிறப்பாக இருக்கிறது.

அவர் மானசீகமாக ஒதுங்கிவிட்டவர். அது பாண்டவர்களையும் கௌரவர்களையும் சின்னப்பிள்ளைகளாக அவர் பார்க்கும்போதே தெரிகிறது. அவர் ரிஷி மாதிரிதான். ஆனால் ரிஷியும் கிடையாது. ரிஷி ஆவதற்காக முயற்சி செய்துகொண்டேதான் இருக்கிறார். ஆனால் ஆக முடியவில்லை. அவருடைய மனதில் ஒன்று பிடிமானமாக இருக்கிறது. அறுக்கப்படாமல் இருக்கிறது

அது என்னது என்பது அவர் கிளம்பிப்போகும் இடத்திலே தெரிகிறது. அவர் மனதில் இருப்பது அம்பையின் சாபம். அது பலித்துவிடக்கூடாது என்பதிலே மட்டும்தான் அவர் குறியாக இருக்கிறார். அது பலித்தால் அவர்தானே அந்த அழிவுக்குப் பொறுப்பு? ஆகவே அதைத் தாண்டிப்போக விரும்புகிறார். அந்த ஒருகாரணத்தாலேதான் அவர் அஸ்தினபுரியுடன் தொடர்புடனிருக்கிறார். அவருடைய பற்று என்பது அதுதான்

அவர் சபையில்கூட விடுபட்ட நிலையில் இருக்கிறார். கனிந்திருக்கிறார். ஆனால் பயப்பட்டுக்கொண்டும் இருக்கிறார். ஏதோ நடந்துவிடும் என்று நினைக்கிறார்/ உண்மையிலேயே நடக்கவும் நடக்கிறது

அது அறுபடும்வரை அவருக்கு முக்தி இல்லை. அவர் ரிஷியும் ஆகப்போவதில்லை.

ஜெயராமன்

அரங்கமுற்றம்



ஜெ,

தருமனும் பாண்டவர்களும் அந்த முற்றத்திலே காத்திருக்கும் காட்சி அழகாக இருந்தது. அதில் பெரிதாக ஒன்றும் இல்லைதான். ஆனால் இயல்பான காட்சி அது. அதிலே உள்ள தயக்கம். realism எல்லாம் நேர்த்தியானவை. கிருஷ்ணன் வராமல் போகமுடியாது என்று தருமன் நினைப்பது. மந்திரி என்ன ஆகிறது என்று கேட்பது. பூரிசிரவஸ் தவிப்பது எல்லாமே அழகாக வந்திருந்தன

அதோடு கிருஷ்ணன் தேரை அவனே ஓட்டிவருவதும் சவுக்கை அந்த குசும்பு வீரன் கையிலே கொடுப்பதும் நைசாக பாண்டவர்களை துரியோதனன் பக்கம் ஓட்டிச்செல்வதும் நுணுக்கமான சித்திரிபாக இருந்தன

இந்த முற்றம் வெண்முரசிலே எத்தனை தடவை வந்துவிட்டது. இங்கே பீஷ்மர் தேரிலே வந்து இறங்கினார். பாண்டு கிளம்பிப்போனார். எப்படிப்பட்ட சித்திரிப்புகள் இருந்தன ./ அதெல்லாம் திரும்பத்திரும்ப ஞாபகத்துக்கு வருகின்றன. அதையெல்லாம் எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை சும்மா முற்றம் என்ரு சொல்லும்போதே ஒட்டுமொத்த ஞாபகமும் வந்துவிடுகிறது

அந்தமுற்றமே ஒரு குருஷேத்ரம் போல இருகிறது என்று நினைத்தேன். அங்கேதான் எல்லாமே நடக்கிறது. ஒருநாடக அரங்கம்மாதிரி இருக்கிறது. அங்கே நடப்பவற்றை மட்டும் வைத்தே வெண்முரசை சுருக்கமாக நாடகமாக எழுதிவிடலாம்

ரவீந்திரன் எம்

தூய சிரிப்பு


திரு. ஜெ,

"யுதிஷ்டிரன் துடித்த உடலுடன் முன்னால் பாய்ந்து துரியோதனனை அள்ளி தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டான். “என்ன இது? எதையாவது நான் சொன்னேனா?” என்றான். துரியோதனன் விழிகளில் கண்ணீர் நிறைந்திருந்தது. “தந்தையின் கையால் அடிவாங்கியபின்னர்தான் நான் நிறைவுடன் துயிலத் தொடங்கினேன் மூத்தவரே. நான்…”

அது நிகழாது என்று அறிந்திருந்தும், இந்த அனைத்துச் சகோதரர்களும் இப்படியே அன்புடன் மட்டுமே இருந்து மகிழ மாட்டார்களா என்ற ஏக்கத்தை எம்முள் விதைத்துச் செல்லும் வித்தை ஜெயமோகன் கை எழுதுகோலுக்கு மட்டுமே ஏற்றதாகக் தோன்றுகிறது.

"அவர்கள் மிகையாகவே ஒலியெழுப்பி சிரித்தனர். சிரிப்பதற்கான சிரிப்பு. உவகை என்பதற்கு அப்பால் வேறு பொருளே இல்லாதது."

ஆழ்ந்த வரிகள்.  சிரிப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைக் காட்டுகின்ற சிரிப்பு. உவகையன்றி வேறு எந்த உள்நோக்கமும் இன்றி சிரிக்கும் சிரிப்பு எல்லோருக்கும் எப்பொழும் வாய்க்கிறதா என்பது பெரும் கேள்விக் குறியே !

கணபதி கண்ணன்

Tuesday, April 28, 2015

கண்ணீரின் கணங்கள்





அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இன்றைய வெண்முரசு தொண்டையை கனக்கச் செய்து கண்ணீர் வர வைத்து விட்டது. பேருந்தில் இதைப் படித்து முடித்து உதடு துடிக்க ஜன்னல் வழி விரிந்திருந்த பொருளற்ற உலகைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சகோதரர்கள் இப்படியே என்றும் இருந்திருந்தால் இந்தக் காவியமே எழுந்திருக்காதல்லவா?

அன்புடன்,
கணேஷ்



அன்புள்ள ஜெ

இன்றைய பதிப்பு அருமை அருமை அருமை.

வண்ணப்பெருவாயில் – 6


கண்கள் குளமாகிப் போயிற்று.

மனித நேயம் இப்படியே இருந்திருக்கக் கூடாதா என்றே எனக்குத் தோன்றிற்று!!!

எவ்வளவு அழிவுகள் தவிர்க்கப் பட்டிருக்கக் கூடும். க்ருஷ்ணா!!

அன்புடன்
மாலா
 
 
அன்புள்ள ஜெ

ரத்தம் பிரிந்து சண்டையிடவும் துடிக்கிறது. ஒன்றுசேரவும் அதேபோலத் துடிக்கிறது

அதுதான் இன்றைய அத்தியாயத்திலே நான் வாசித்தது. என்ன சொல்ல. emotional

மனோ

திரிபு



ஜெ

இன்றைய அத்தியாயத்தில் கணிகரைப்பற்றிச் சொல்லும்போது அவர் பெரிய ரிஷியாகவோ கவிஞராகவோ இருந்திருக்கவேண்டியவர். அவருடைய உடல்குறை மனசிலே உருவாக்கிய வன்மத்தால் அப்படியே  திரிந்து ராஜதந்திரி ஆகி தீமையையே எண்ணிக்கொண்டிருக்கிறார் என்று பூரிசிரவஸ் நினைக்கும் இடம் அற்புதமானது. அவரது கதாபாத்திரத்தை டிஃபைன் செய்யக்கூடிய இடம் அது

பாஞ்சாலியை வேங்கையுடன் ஒப்பிட்டு அவர் சொல்லும் உவமையும் கவித்துவமானது

ராஜ்மோகன்

பூஜ்யபலி






இன்றைய அத்தியாயத்தில் அஸ்தினபுரியின் அதிகாரத்துக்கே சவாலாக நிற்கும் அந்த வேலைக்காரன் அற்புதமான கதாபாத்திரம். அவனுடைய மனநிலையை மிகச்சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவனைப்போன்றவர்கள்தான் திருடர்களாக ஆகிறார்க்ள். இல்லாவிட்டால் கலைஞர்களாக ஆகிறார்கள். இல்லாவிட்டால்சார்வாகனைப்போன்ற ஞானிகளாக ஆகிவிடுகிறார்கள்.

அவன் அதிகாரத்துக்கு எதிரானவன். எல்லாரையும் அள்ளிப்போட்டு ஒரு மனுஷக்கூம்பாரமாக ஆக்கி கோபுரம் கட்டுவதற்கு எதிரானவன். நான் வேறு மனுஷன் என்று சொல்கிறான். தனிமையாக நிற்க நினைக்கிறான்

அவனைத்தான் தெய்வங்கள் தேடிக்கொண்டிருக்கின்றன என்று எழுதியிருப்பதும் அவனை கிருஷ்ணன் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொள்வதும் அற்புதம். அவன் அந்தத் திருட்டுத்தனத்தை மட்டும் செய்திருந்தால் கிருஷ்ணன் அவனை விட்டிருப்பா. அவன் அதற்குப்பின் க்ளூ விட்டு சவால் விட்டதனால்தான் கிருஷ்ணனுக்கு அவனைப்பிடித்திருந்தது என்று தோன்றியது.

அவனைக்கொல்லமுடியாது. கொன்றால் அவன் சாமியாக ஆகிவிடுவான். அவன் கண் சாமியின் கண் என்பது ஒரு அற்புதமான இடம். அவனைப்போன்றவர்கள்தான் ‘பூஜ்யபலிகள்’

சுவாமி