அன்புள்ள திரு.ஜெ
வணக்கம்.
தூரத்து உறவுக்கார
அண்ணன் ஒருவர் அவர் தம்பியின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க வந்திருந்தார். பக்கத்து
தெருவில் இருக்கும் அவர்களின் பங்காளி வழி மைத்துனருக்கு முதலில் பத்திரிக்கை வைத்துவிட்டு
நம்வீட்டிற்கு வந்தார். அப்பாவிடம் பேசிக்கொண்டு இருந்தவர் கண்கலங்கினார்.
“எனக்கு என்ன மாப்பிள
வாங்கி வந்த? திராட்சைப்பழம் சாப்பிடனும்போல இருக்கு” என்று மச்சான் கேட்டதும், எனக்கு
நெஞ்சு வெடித்துவிட்டது அண்ணாச்சி” என்று சொல்லியப்படி கண்கலங்கினார்.
அப்பா ஒரு மௌனத்தை உருவாக்கி, அந்த மௌனத்தை அவர்களே கலைத்தார்கள். நான் உறைந்துப்போனேன். அண்ணன் தழுதழுத்தார்.
இந்த
சம்பவம் நடந்த
சில ஆண்டுகளுக்கு முன்னால் அந்த தெருவில் உள்ள அம்மன்கோயில் செடல்
உற்சவத்திற்கு சென்று
இருந்தேன்.வீ்ட்டில் இருந்து தருமகர்த்த வருகின்றார் என்ற பரபரப்பு எழ
திரும்பிப்பார்த்தேன். வெண்குடைக்குகீழ்
தருமகர்த்த நடந்துவருகின்றார். சாமி ஊர்வலத்தில் சாமிக்கு பிடிக்கும்
வெண்குடையை கண்டு
பழக்கப்பட்ட எனக்கு ஒரு மனிதன் தலைக்குமேல் சாமிக்குடை என்றதும் எனக்கு,
நான் எங்கு இருக்கிறேன்? காலம் காலைப்பிடித்து இழுத்து சரித்திரக்காலத்தில்
நிற்கவைத்துவிட்டது.
அந்த தர்மகர்த்தாதான்
இந்த முதியவர். முதுமையையின் இயலாமை, குடும்பத்தின் புறக்கணிப்பு. வறுமையினல் பிடி.
அந்த நேரத்தில் அம்மன்கோயில் வாசலில் சின்னகீற்றுக்கொட்டகைப்போட்டு தனிமையில் இருந்தார்.
வாங்கிச்சென்ற பூ,பழத்தோடு பத்திரிக்கையை வீட்டில் வைத்துவிட்டு மச்சானைப்பற்றி கேட்டபோதுதான்
இவருக்கு அவர் தனிமையில் இருப்பது தெரியும். பார்க்காமல் வந்தால் மரியாதையாக இருக்காது
என்பதால் வெறும் கையோடு சென்று பார்த்தபோதுதான் “எனக்கு என்ன மாப்பிள வாங்கி வந்த?
திராட்சபழம் சாப்பிடனும்போல இருக்கு“ என்று அவர் சொன்னது. திராட்சைப்பழம் வாங்கவேண்டும்
என்றால் பஸ் பிடித்து சிதம்பரம் போகவேண்டும்.
அந்த அண்ணன் அன்று
அறிந்த ராஜாவையும், இன்று கண்ட முதியவரையும் கண்டு திகைக்து திகைத்து நெஞ்சு விம்மினார்.
//“அமைச்சரே,
மானுடனைப்போல இரக்கத்திற்குரிய உயிர் இப்புவியில் இல்லை”
என்றார் விப்ரர் கசப்பான புன்னகையுடன்//
காலம்தான்
மனிதனுக்கு
தலைக்குமேல் குடையும் கொடுக்கிறது. காலம்தான் அடுத்தவன் காலுக்குகீழே
தலைவைக்கும் கஷ்டத்தையும்
கொடுக்கிறது. இதை விதி என்று சொல்லலாம், தெய்வத்தின் விளையாட்டு என்று
சொல்லலாம், அறிவும்,
அறியாமையும் என்று சொல்லலாம். இன்னும் அவர் அவர் சூழலுக்கு தகுந்தவாறு
என்னவேண்டும்
என்றாலும் சொல்லலாம். தலைக்குமேல் குடைப்பிடித்துவருகின்றான் என்று தெய்வம்
எழுந்தும்
நிற்பதில்லை, காலில் வந்து விழுந்துவிட்டான்
என்று கையில் இருக்கும் கத்தியை அவன் தலையில் போடுவதும் இல்லை. மனிதன்
அத்தனையும் செய்கின்றான் ஆனால் தன்னை தெய்வம் என்றும் நம்பிக்கொள்கின்றான்
அல்லது மற்றவர்கள் மூலம் நம்பவைக்கப்படுகின்றான். இறைவன் ஆரம்ப
புள்ளிக்கும் இந்த
முடிவுப்புள்ளிக்கும் இடையில் உள்ள ஒரு கவிதையை எழுதிவி்ட்டேன் படித்தால்
படியுங்கள் படிக்கவிட்டால்போங்கள் என்ற
காலக்கவிதையை வாழ்க்கை என்று வீசிவிட்டு அப்படியே
அசையாமல் இல்லாதவேன்போல் இருக்கிறான்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணி்க்கவேல்.