Thursday, April 16, 2015

சகதேவனா?




ஒரு சிறு நெருடல் இன்றைய பகுதியில், சுட்டி காட்டி தெளிவு பெறவே இந்த மடல்..

முதலில் சேதி நாட்டு இளவரசிகளை நகுலன் தரப்பில் பார்ப்பதாக துரியோதனன் கூறுகிறான்...  பின்பு சகதேவனுக்கு பெண்கொடுக்க விழைவதாக திருதராஷ்டிரர் ஆத்திரமடைகிறார்....இது பிழையா? அல்லது திருதராஷ்டிரர் மனநிலையை விளக்க ஆசிரியர் கையாண்ட உத்தியா?

அவரிடம் என்ன சொல்வதென்று துரியோதனனுக்கு தெரியவில்லை. “சகதேவனுக்கு மத்ரநாட்டு இளவரசியைப் பேசி முடித்திருக்கிறார்கள். நகுலனுக்கு சேதிநாட்டரசர் தமகோஷரின் மகளை பேசிக்கொண்டிருக்கிறார்கள்.” திருதராஷ்டிரர் “ம்” என்றார். “சிசுபாலர் இளைய யாதவனை வெறுக்கிறார். எனவே அவர் தன் தங்கையை பாண்டவர்களுக்கு அளிக்க விரும்பமாட்டார். சேதிநாட்டு இளவரசிகளை நம் இளையோர் அடைந்தால் நமக்கு நல்லது. தமகோஷருக்கும் பெண்களை நமக்களிப்பதில் தயக்கமில்லை”.

“சௌனகர் பலமுறை அளித்தும் தாங்கள் கைச்சாத்திட மறுத்தீர்கள் என்றார்…” திருதராஷ்டிரர் “சேதிநாட்டான் சகதேவனுக்கு பெண்கொடுக்க விழைவதாகத்தானே சொன்னாய்?” என்றார். “ஆம், ஆனால்…” என அவன் சொல்லிமுடிப்பதற்குள் திருதராஷ்டிரர் தன் பெருங்கரங்களால் பீடத்தை ஓங்கி அறைந்தார்.

அழகியநம்பி சம்பத்


அன்புள்ள சம்பத்

சிலசமயம் இப்படிப்பட்ட ‘;பிழை’கள் நடப்பதுண்டு. ஆனால் அது பிழை அல்ல. அதை எழுதும்போது நான் திருதராஷ்டிரர் ஆக இருந்திருக்கிறேன் என்பதே அதற்கான பொருள். அவர் அவன் சொன்னதை சரியாகக் கேட்கும் மனநிலையில் இல்லை.கேட்கவில்லை

எழுதும்போது நான் தேடுவதே இப்படி ஒன்றாகும் நிலையைத்தான்

ஜெ

குழுமவிவாதம்