பீஷ்மரின் கதாபாத்திரத்தை
நானெல்லாம் ரொம்பநாள் விட்டிருந்தேன். இப்போது மீண்டும் வாசிக்கும்போது அப்படி விட்டுவிட்டுத்
தெரிந்தாலும் நல்ல ஓர்மையோடு சிறப்பாக இருப்பதைக் கண்டேன்.
பீஷ்மர் உண்மையில்
மகாபாரதத்தில் தொடக்கத்திலே வந்தபின்னாடி கடைசியில் போரில்தான் வருகிறார். மற்ற இடங்களிலே
எல்லாம் அவருடைய பணி பூஜ்யம்தான். அந்த விஷயத்தை கதைசொல்லிகள் அப்படியே விட்டுவிடுவார்கள்.
ஆனால் வெண்முரசிலே அது அவருடைய துறவுமனநிலையின் காரணமாக வந்தது என்று சொல்லியிருப்பது
சிறப்பாக இருக்கிறது.
அவர் மானசீகமாக
ஒதுங்கிவிட்டவர். அது பாண்டவர்களையும் கௌரவர்களையும் சின்னப்பிள்ளைகளாக அவர் பார்க்கும்போதே
தெரிகிறது. அவர் ரிஷி மாதிரிதான். ஆனால் ரிஷியும் கிடையாது. ரிஷி ஆவதற்காக முயற்சி
செய்துகொண்டேதான் இருக்கிறார். ஆனால் ஆக முடியவில்லை. அவருடைய மனதில் ஒன்று பிடிமானமாக
இருக்கிறது. அறுக்கப்படாமல் இருக்கிறது
அது என்னது என்பது
அவர் கிளம்பிப்போகும் இடத்திலே தெரிகிறது. அவர் மனதில் இருப்பது அம்பையின் சாபம். அது
பலித்துவிடக்கூடாது என்பதிலே மட்டும்தான் அவர் குறியாக இருக்கிறார். அது பலித்தால்
அவர்தானே அந்த அழிவுக்குப் பொறுப்பு? ஆகவே அதைத் தாண்டிப்போக விரும்புகிறார். அந்த
ஒருகாரணத்தாலேதான் அவர் அஸ்தினபுரியுடன் தொடர்புடனிருக்கிறார். அவருடைய பற்று என்பது
அதுதான்
அவர் சபையில்கூட
விடுபட்ட நிலையில் இருக்கிறார். கனிந்திருக்கிறார். ஆனால் பயப்பட்டுக்கொண்டும் இருக்கிறார்.
ஏதோ நடந்துவிடும் என்று நினைக்கிறார்/ உண்மையிலேயே நடக்கவும் நடக்கிறது
அது அறுபடும்வரை
அவருக்கு முக்தி இல்லை. அவர் ரிஷியும் ஆகப்போவதில்லை.
ஜெயராமன்