துரியன், துச்சாதன், துச்சாலன், அவர்களின் தங்கை, கர்ணன் என இவர்களுக்குள் இருக்கும் ஒரு பிணைப்பு பற்றி இதுவரை இல்லாத உணர்வு 72ல் அழகாக வந்து இருந்தது. நட்பு ஒரு கட்டம் தாண்டிய பின் தனக்கு தெரியாமல் வளரும் ஒரு possessiveness கர்ணனின் சினத்திலும், மதுவர்க்க இரவிற்கு பின் வருபவனிடம் காட்டும் செயற்கை தன்மையும் மிக இயற்கை. இந்த முதல் இரவிற்கு பின் வரும் நெருடலான முதல் காலையின் வெட்கங்கள் இவை. முகத்தை பார்க்க ஒரு தயக்கமான கணங்கள். அதை துரியன் புரிந்து கொண்ட விதமும் மிக இயல்பு. உச்சம் என்பது பானுமதியை "இவள்" என அழைத்து கொள் என்று மூத்தவன் சொல்லும் பகுதி. தருமனின் ஆளுமை திரொளபதி இரவிற்கு பின் வந்ததையும் இவனின் நெகிழ்ந்த விரிவு வந்ததையும் நினைத்து கொண்டேன்.
மகராஜன் அருணாச்சலம் யோசிப்பது போல் பூரிசிரவஸ் அரசானாக போவதில்லை என்றும் விரும்பியதை இழந்தவர் கூட்டம் என்பதாகவும் வருவது பற்றியும் யோசித்து கொண்டேன்.... இருந்து விட்டு போகட்டுமே. முடிவு எடுத்தல், அதனை முழுதும் ஏற்று அதனில் நின்றல் என இல்லாதவன் பூரிசிரவஸ் என்றாலும் துரியோதனன் பக்கம் தன்னை இறுக்கி நின்று கொண்டது வெறும் அரசியல் பலன்களை எண்ணி இல்லை. கர்ணன் திரும்ப திரும்ப அவனிடம் வருவது அவன் அரசன் ஆனதின் நன்றி கடன் மற்றும் கொடுத்த வார்த்தை மட்டும் இல்லை. பீமனும் அர்ஜுனனும் தருமன் மேல் கொண்டதை காட்டிலும் இவர்களின் நெருக்கம் இயல்பாக இயற்கையாக உள்ளது. பாசக்கார அண்ணன் அய்யா இந்த பெரும் புயம் கொண்ட துரியோதனன். எதிலும் முழுதுமாக இருப்பவன் போல. சினத்தில், முட்டாள்தன முடிவுகளில், இறுக்கி அணைத்து செல்வதில், மன விரிவில்...
இந்த சந்தடி சாக்கில், இந்த தறி ஓட்டத்தில் அவ்வப்போது சமயம் கிடைக்கும் போது ஊடு நூல் போல கிருஷ்ணனை வளர்த்தபடி செல்வதற்கு தனி ஷொட்டு. துச்சலை, காந்தாரி, பானுமதி, என இளம் பெண்களுக்கு அல்லது முதிய ஆட்களுக்கு தான் அவனை மிகவும் பிடிக்கும் போல. கண்ணுக்கு தெரியாத திரவத்தால் வளரும் சிலந்தி வலை போல அவன் எல்லோரிலும் பரவி, யாரும் தவிர்க்க இயலா வகையில் - அவனுக்கு மட்டும் தெரிந்த புள்ளிகள் இட்டபடி கோலமாய் போட்டபடி செல்வது ஒரு மாய புதிர் கவிதை.
லிங்கராஜ்