இன்றைய வண்ணப் பெருவாயில் மிக அற்புதம்.
பெரியாழ்வார் பாசுரம் நினைவிற்கு வர - தேடிக் கண்டுபிடித்து - இதோ
இடவணரை இடத்தோளோடு சாய்த்து
இருகை கூட புருவம் நெரிந்தேற
குடவயிறு பட வாய் கடை கூட
கோவிந்தன் குழல் கொண்டு ஊதின போது
மட மயில்களோடு மான்பினை போல
மங்கைமார்கள் மலர்கூந்தல் அவிழ
உடை அவிழ ஒரு கையால் துகில் பற்றி
ஒல்கியோடரிக்கன் ஓட நின்றனரே
உங்கள் எழுத்து படிக்கும் போது.. எங்கோ படித்தது போல ஒரு உணர்வு.
ஆங்காங்கே
மறைந்த சொற்றொடர் உள்மன (அந்தரங்க) இசை ஒலிக்கும் (கடலூர் சீனு கூறிய
தேனொளி - நானும் கண்டேன். களித்தேன். பதிவு செய்யவில்லை)
"நீரில்
விழுந்த குருதித்துளி. அசைவற்ற சுனைப்பரப்பில் பரவும் நெய்ப்படலம்.
கொடிவழியாக செல்லும் செவ்வெறும்பு நிரை. இளவெயிலில் ஆடும் சிலந்திவலை.
மலைமடியில் விழுந்த முகில்பிசிறு. பாலையில் தன்னந்தனியாக ஓடும் வெண்புரவி.
குட்டியானையின் குறுவால் சுழற்சி. பனிப்புகை படரும் மலைச்சரிவுகள்.
தேவதாரு. தனித்த பசுங்கோபுரமென எழுந்த தேவதாரு. அது சூடிய ஒளிமிக்க வானம்.
தனிமையென விரிந்த வானம். தித்திக்கும் வானம். மென்மையான குளிர்ந்த வானம்.
நெடுநேரமென காலம் சென்றபின்னர் மீண்டபோது அவன் திகைப்புடன் உணர்ந்தான்"
பிம்பங்களும்,
எண்ணங்களும் சேர்ந்தும் பிரிந்தும் ஆடும் நடனம், இசை வடிவில் தம்மை
உமதாக்கி உட்கலந்தோன். மொழி சுருக்கி ஒற்றை ஒலி நீண்டு ஒலிக்க அதில் இத்தனை
நுண்மை, இத்தனை விரிமை, இத்தனை பெருமை, இத்தனை தனிமை.. என்று எப்படி
கூடும் !!!.
எண்ணங்களில்
நேரம் ஒரு புள்ளி ஆகிவிடுகிறது. அதிலிருந்து எங்கு வேண்டுமானாலும் எப்படி
வேண்டுமாயினும் செல்லலாம் எனும் சாத்தியம் உளம் நிரப்பி மனம் எங்கும் ஒரு
பரபரப்பு.
ஒரு புள்ளியை பெரிதாக்க மனம் விழையும். ஒரு வேலை ஊழின் காணறியா கையொன்று உதவ காத்திருக்க வேண்டுமோ!
மிக்க நன்றி. அன்புடன்
முரளி