Friday, April 24, 2015

விதியின் கோடாரி




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

படுத்துக்கிடக்கும்போது மனிதன் ஒரு குழந்தை, அமர்ந்திருக்கும்போது மனிதன் ஒரு சீவன், எழுந்துக்கொள்ளும்போதுதான் மனிதன் மனிதன். நான்.. நான்..நான் என்னும் மனிதன். வாய்சண்டை முத்தி கோபம் உச்சம் பெறும்போது “நான்” என்பதை நிருபிக்க மனிதன் துள்ளி எழுந்துவிடுகின்றான்.  

நோயில் கிடந்து எழுந்து வரும் துரியன் நான் என்றுதான் பேசுகின்றான். இது ஒரு கோணம் இருக்கட்டும். இதோ இங்கு குந்தி அவன் சூதன், அவனுக்கென்ன முறைமை?” என்றபடி எழுந்துகொண்டாள். என்று வரும் வார்த்தைகளை படிக்கும்போதுதான் எழுந்துக்கொள்ளுதல் என்பது தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அனைத்தையும் உதறி எழுதல் என்பதை அறிந்தேன். அந்த வார்த்தை அவளை எழ வைத்ததா? எழுந்துக்கொள்ளும்போது அந்த வார்த்தை வந்து விழுந்ததா? 

கர்ணன் உடன் மனதளவில் தாயாக படுத்துக்கிடந்தவள் அல்லது ஒரு நோயாளியாக படுத்துகிடந்தவள் எழுந்துவிட்டாள். தன்னை நிலை நிறுத்த எழுந்தே ஆகவேண்டிய நேரம் இது அதற்காக எழுந்துவிட்டாள். குந்தியின் நான் மட்டும் இருக்கும் இடம். கோபித்துக்கொண்டு மேலே சென்று வரமறுக்கும் மருமகள் இருவரையும் பணியாளனை அழைத்து கைகட்டி இழுத்துவர சொல்லும் “நான்” எழுந்து நிற்கும் இடம். அந்த நானின் வழியாகவே கர்ணனை தூக்கி எரியும் கணம். இயல்பாகவே அவளுக்குள் எழுந்துவந்த அந்த நான் அதை செய்வது அற்புதம்.

ஏன் கர்ணனை சூதன் என்றால்? நான் விளைந்து தான் எழுந்து நடக்கின்ற நேரம் என்பதால் அப்படி செய்தாளா? தாயால் அப்படி செய்யமுடியுமா? அப்படி என்றால் தாய்மை புண்படும் இடம் ஒன்று இருக்கின்றது என்பதாகின்றது. கர்ணனால் குந்தி புண்பட்ட இடம் என்ன?

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.-என்ற வள்ளுவர்.

ஈன்றாள் பாசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை-என்கிறார்.

சான்றோர்கள் பழிக்கும் வினையை கர்ணன் செய்தானா என்பதை பார்ப்பதற்கு முன்னால் கண்ணில்லாத காந்தாரி கூட அறியும் ஒரு பழியை அவன் சுமந்து இருக்கிறான். திரௌபதிமீது காமம் கொண்டு போருக்கு எழுந்தது?. துச்சளையால் அந்த போரில் அவன் பின்வாங்கிவிட்டான் என்றாலும், அந்த போருக்கு அவனே காரணம் என்றுதான் குந்தி நினைப்பாள். கர்ணன் இருப்பதால்தான் துரியனும் அந்த போரில் துணிந்து இறங்கினான். இன்று படை நடத்தும் சக்தியாக கர்ணனே அஸ்தினபுரியில் இருக்கிறான்.  கர்ணனன் பலம் காலத்தின் கோலமாய் குந்தியின் மார்ப்பை பிளக்கும் அம்பாகவே இருக்கிறது. திருதராஸ்டிரனுக்கு கட்டுப்படாத மகனாக துரியன் வளர்ந்து நிற்பதுபோல், கர்ணன் குந்தியால் கட்டுப்படுத்த வாய்ப்பு இல்லாத மகனாக வளர்ந்து நிற்கிறான். துரியன் வளர்ச்சி திருதாவை வீழ்த்தும் கொடுமை. கர்ணன் வளர்ச்சி குந்தியை வீழ்த்தும் கொடுமை.  வானத்தில் இருந்து ஒரு களத்தில் உருட்டும் இரண்டு தாயக்கட்டைகள் இரண்டு உள்ளங்களை ஒரே நேரத்தில் உடைக்கும் கொடுமை. 

நிறைய குழந்தைகளுக்கு தனது குழந்தை தந்தை என்பதை விரும்பும் அன்னைமனம், தனது மகன் காமுகன் என்பதை விரும்புவதில்லை. அப்படி ஒரு மகன் இருந்தால் அன்னையின் பெண்மை காயப்படுகின்றது. குந்தி காயம் பட்ட இடம் அது “அவன் சூதன் அவனுக்கு என்ன முறைமை” என்று தனது புண்பட்ட இடத்தை வெளிக்காட்டாமல் காட்டுகின்றாள். இந்த இடத்தில் குந்தியாகிவிட்டீர்கள் ஜெ.

துரியனைப்பார்த்து திருதராஸ்டிரன் “இழிமகனே!” என்ற இடமும், கர்ணனை குந்தி “அவன் சூதன்” என்ற இடமும் ஒரே காயத்தின் இரண்டு புள்ளிகள். கதைப்பாத்திரங்களின் தலையில், கதையாசிரியனின் எழுதுகோலைத் தாண்டி  விதியின் கோடாரிவிழும்நேரம்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.