Wednesday, April 15, 2015

மயங்கும் மாதங்கம்



அன்புள்ள ஜெ,

வெண்முரசில் வந்துள்ள முதலிரவு வர்ணனைகளை மட்டுமே தனியாகப் படிக்கலாம். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வித வர்ணனைகள். எண்ணங்கள். திருதராஷ்டிரன், விதுரன், பாண்டு, பாண்டவர்கள் என விதம் விதமான இரவுகள். இதுவரை வந்தவற்றில் மிகப் பிடித்த ஒன்றாக பீமனுடையதைச் சொல்வேன். அவையெல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விட்டது துரியனின் இரவு. 

உண்மையில் இதுவரை வந்த இரவுகளில் தன் பெண்ணை முழுமையாக அறிந்தவன் துரியன் மட்டுமே. ஏனென்றால் துரியன் மட்டுமே தன் மீது பெருங்காதல் கொண்ட பெண்ணை அடைகிறான். அக்காதலாலேயே தானும் பெருங்காதலாகின்றான். (பாண்டவர்களில் பீமனுக்கு மட்டுமே இடும்பி என்ற ஓர் காதலி வாய்த்திருக்கிறாள். அவர்களின் முதலிரவு இவ்வளவு  விரிவாக வரவில்லை).

இந்த இரு அத்தியாயங்களிலும் மொழி குயவன் கை மண்ணாக உங்களிடம் ஒப்புக்கொடுத்திருக்கிறது. பானுமதியைப் பற்றி பேசும்போதெல்லாம் துள்ளிச் செல்லும் மொழி, துரியன் பலராமரைப் பற்றிப் பேசும் போது தட்டையாகி விடுகிறது. மீண்டும் பகுளம் பற்றிய இடங்களில் வெதுவெதுப்பான வெந்நீர் தொட்டியில் அமிழும் போது உடல் வலிகள் நீங்கிச் செல்ல உடல் கொள்ளும் எடையிழக்கும் உணர்வை நல்குகிறது. பகுளத்தை வைத்து உறவின் உச்சத்தை விவரித்தமை அதியற்புதம். இருவரும் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் அந்த தருணம், பானுமதியின் கொஞ்சல் மொழிகள், என்னமோ போங்க ஜெ, துரியோதனன் கொடுத்து வைத்தவன். மறுநாள் தருமன் கேட்டால் தேசமே வேண்டாம் என்று சத்தியமாகச் சொல்லியிருப்பான். 

மீண்டும் மீண்டும் துரியன் வசீகரிக்கிறான். எவ்வளவு தெளிவாக சொல்கிறான், "அவள் விழையாத எதையும் நான் செய்ய முடியாது" என்று. நண்பர்கள் கொள்ளும் செல்லச் சண்டைகள் சுவையானவை. இறுதியில் அதிரதன் செய்யும் நகைச்சுவை அபாரம்.... மீண்டும் ஓர் இனிய காலையை நல்கியதற்கு நன்றி. இரு நாட்களாக ஒரு பாடல் மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. "மயங்குகிறாள் ஒரு மாது". ஆச்சரியம் தான், ரஹ்மானின் தீவிர ரசிகனான எனக்கு முதலிரவு என்றவுடன் இப்பாடல் தான் மனதில்ஓடுகிறது என்பது!!!

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்