அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
துரியோதனன் திருதராஸ்டிரன்
கையால் அடிவாங்கியபின்பு நோயில் கிடக்கிறான், நோயில் இருந்து விடுபட விடுபட எழுந்து அமர்ந்து இருக்கிறான்,
நோய் தீர்ந்து பின்பு எழுந்து நடக்கிறான். கிடந்தும், இருந்தும், நடந்தும் என்ற வளர்ச்சி உருவாகின்றது.
ஒரு குழந்தை பிறந்து தவழந்து இருந்து நடந்து வளரும் காட்சி ஏற்படுகின்றது.
குழந்தைபோல்
கிடக்கும்போது நான் என்ற அகந்தை இல்லாமையால் அனைவரையும் தாயாக நினைக்க
தோன்றுகின்றது.தன்னை நோக்கி நீளும் கைகள் எல்லாம் தாயின் கையெனவே
எண்ணத்தோன்றுகின்றது நான் என்ற எண்ணம் எழுவதே இல்லை, நீ என்ற எண்ணம்
மட்டும்தான் இருக்கிறது.
எழுந்து அமர்ந்து இருக்கும்போது நான் நீ என்ற எண்ணம் சமமாக இருக்கிறது.
அந்த நான்கூட எந்த முட்களும் இல்லாத பூவெனவே இருக்கிறது. எழுந்து
நடக்கும்போது நான் என்ற எண்ணம்தான் இருக்கிறது. நீ என்பது எல்லாம் என்
கால்களுக்கு
கீழேதான் என்ற அகந்தை வந்துவிடுகின்றது.
மனிதன்
வளர்ச்சி
என்பதே இந்த நான் என்ற அகந்தையின் வடிவம்போலவே இருக்கின்றது. நான் எத்தனை
வலுவானதாக, உயரமானதாக இருக்கிறதோ அத்தனை பெரியமனிதன் என்று மயங்கவைக்கிறது.
துரியோதனன் மருத்துவர்களை மட்டும் இல்லை,
இளையவனே என்று அழைக்கும் பூரிசிரவஸையும் நான் என்ற கோட்டுக்கு வெளியே
தள்ளிவைத்தே நடத்துகின்றான். துரியோதனன் சட்டென்று பெரும் யானையாகிவிட்ட
தோற்றம். ஏன் இந்த நான் தீடீர் என்று துரியோதனனுக்குள் வந்தது?
திருதராஸ்டிரன் துரியோதனனை அடிக்கும்போது
நான் நீ என்ற கோடு விழுகின்றது. துரியோதனன் திருதராஸ்டிரனிடம்
அடிவாங்கும்வரை தான்வேறு,
தனது தந்தைவேறு என்று நினைத்து இருக்கமாட்டான், அடி வாங்கிப்பின்பு
நான்வேறு, தந்தைவேறு
என்ற எண்ணம் தானாக வந்து இருக்கும். திருதராஸ்டிரனின் அடி ஒரு அகத்தை
இரண்டாக பிரித்துவிட்டது.
குளவிக்கொட்டினால் புழு குளவியாகிவிடும். யானை அடி என்பது இங்கு இரண்டு
பொருள் கொள்வதை நினைத்துப்பார்க்கின்றேன். திருதராஸ்டிரனை
வைத்துப்பார்க்கும்போது யானை அடித்த அடி, துரியோதனை
வைத்துப்பார்க்கும்போது யானையின் பாதம்போல், நான் என்ற பெரும்
அடியால்(காலால்) துரியோதனன் நடக்கத்தொடங்குகின்றான். இந்த யானை அடியில்
பூரிசிரவஸின் காதல் புதைந்துப்போவதை நினைத்துப்பார்க்கையில் பொருள்
பெருகிபெருகி வரும் அத்தியாயம் இது.
துரியோதனன் நோயில்
கிடக்கும்போது தன்னை தேடிவரும் ஒவ்வொருவரையும் நோக்கி கிடக்கின்றான், ஒவ்வொருவர் வருகைக்கும்
ஏங்குகின்றான். தன்னை தேடிவரும் ஒவ்வொருவரையும் தான் என்றே உணர்கின்றான். அவர்களாலேயே அவன் வாழ்வதாய் நினைக்கின்றான். காலத்தின்கோலம்
அவன் அகம்தேடிய தந்தை திருதராஸ்டிரன் அங்குவரவில்லை. வந்து இருந்தால் துரியன் மனம்
நம்பி இருக்கும் தந்தையில் இருந்து தான் வேறு இல்லை என்று. விதுரன் மகன் நோயுற்று இருக்கிறான்
என்று வருந்தி அவன் இல்லாம் சென்றுப்பார்த்த அந்த தந்தை, தனது கையால் அடிப்பட்ட மகனை
காணமல் இருப்பது நீ, நான் என்ற கோடு வளர முழு காரணமாகிவிட்டது. அந்த பிரிவின் தொடக்கத்தில்
எழும் நான்தான் துரியோதனனை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச்செல்கின்றது.
ஒவ்வொரு அடியும்,
ஒவ்வொரு அவமானமும் மனதனின் அகந்தையை வளர்க்கின்றது. “நான்” என்ற தருக்கை முளைக்க வைக்கின்றது.
விடாமல் சிகரெட்பிடிக்கும்
எகிப்து நாட்டு அக்கவுண்ட் மேனேஜர் இடம் ஏன் இப்படி விடாமல் சிகரெட் பிடிக்கின்றாய்,
என்ன பயன் என்றேன்?
சின்ன வயதில் சிகரெட்
குடிப்பது வீட்டுக்கு தெரிந்து அப்பா அடித்துவிட்டார். அவர்மீது உள்ள கோபத்தில் ஒரு
பாக்கெட் சிகரெட்டை அன்றுபிடித்தேன். சிகரெட் பிடிக்கும்போதெல்லாம் அவர்மீது உள்ள கோபம்
தீறுவதாய் நினைத்தேன். அவர் எனது நல்லதுக்குதான் செய்தார் என்று எனக்கு இன்றும் தெரியவில்லை.
தவறு என்று நினைக்கின்றேன் விடமுடியவில்லை என்றான்.
மனிதனின் அறிவை
மயக்க மனம் கடைபிடிக்கும் எளிய வழி “நான்” என்னும் போதைதான். அந்த நான் என்னும்போதையை
துரியோதன் பருகிக்கொண்டது எளிதாக நடந்துவிட்டது. நான் என்னும் போதை மனிதனுக்கு ஒரு
வலிமையை தருவதாக இருக்கிறது, எதிரில் இருக்கும் மனிதர்களும் அதை வளர்க்கும் விதத்தில்
பணிந்துபோவதுதான் உலகின் நடமுறை யாதர்த்தம்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்