அன்புநிறை ஜெ.மோ,
தங்கள் வெண்முரசு வாயிலாக தொன்மை அறிவின் தரிசனங்கள் கிடைக்கும் தருணங்கள் மகத்தானவை.
குறிப்பாக சொல்வளர்காடு சிலிர்க்க வைக்கிறது. உங்களை குருவாக வரித்துக் கொண்டே இந்தப் பயணம் முன் நகர்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் (ஜூன் 9) , ஒரு சிறு படிமத்தை எழுதியிருந்தேன்.
சொல்வளர்காடு – 21 ஆம் அத்தியாயத்தில் அது தொடர்பான குறியீட்டை மேம்பட்ட கருத்துச் செறிவோடு படிக்கையில் மனம் நிறைந்தது.
சிறு குழந்தை தன் ஓவிய முயற்சியை வீட்டுப் பெரியவர்களிடம் காட்டும் அதே உணர்வோடு, உங்கள் பார்வைக்கு என் முயற்சி:
ஊசிமுனை நூலதுவும்
உள்நுழைந்து ஊடாடும்
நாசிதனில் சுவாசமது
ஓடும்வரை ஓடும்
நூலதுவும் திரிந்தலைந்து
ஆடையென நெய்யும்
ஆடையதை தானெனவே
நம்பிடவே செய்யும்
கைபுனையும் கலையதனை
நூலின்திசை சமைக்கும்
கைவிசையை நூல்மறக்க
காற்றின்வழி பறக்கும்
நிலைமறந்த நூல்திரிந்து
சிக்கிநிலை அழியும்
சிக்கல்அது விடுபடவே
விதியின்கரம் அறுக்கும்
அறுத்தகரம் அறுந்ததிரி
வரைந்தகலை மிஞ்சும்
முடிந்தகதை மறந்தபடி
ஊசியது உறங்கும்
மிக்க அன்புடன்,
சுபஸ்ரீ