Tuesday, August 30, 2016

கீதாசிரியன்:வெண்முரசு நாவல் வரிசைகளில் ஒவ்வொரு நாவலிலும் ஏதேனுமொரு அத்தியாயம் நாவலின் தரிசனத்தைத் தெளிவாக விளக்கும் வகையில் அமைந்திருக்கும். சொல்வளர்காடின் 39 வது அத்தியாயம் அப்படிப்பட்ட ஒன்று எனலாம். ஒரு வார்த்தையில் சொல்வதானால் பொருளின்மை. இந்த அத்தியாயத்தில் இந்த லீலையின் பொருளின்மையை வாழ்ந்து உணர்ந்தவர்களின் கொந்தளிப்புகளை, அனைத்தையும் சொற்களாக்கி விரித்தெடுத்து புரிந்து கொண்டவர்கள் தாம் புரிந்து கொண்டவற்றை அறிதலாக மாறுகையில் வரும் மகத்தான தடுமாற்றத்தை காண்கிறோம். இதுவரையிலும் வந்த நாவலை பொருளின்மையை உணர்ந்தவர்கள் அதை எவ்வாறு கையாளுகிறார்கள், எவற்றை அறிகிறார்கள், அடைகிறார்கள் என வாசிப்பது மேலும் பல திறப்புகளை நல்கலாம். இந்நாவல் வெண்முரசில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ரத்தமும், சதையும் கொண்ட மனிதனாகக் காட்டுகிறது. கிருஷ்ணனைத் தான் சொல்கிறேன்.

கிருஷ்ணன் என்ற மானுடன் ஞானியாக பரிணமித்ததன் சித்திரம் இது. வெண்முரசில் இது வரையிலும் வந்த கிருஷ்ணனுக்கும் இவனுக்கும் தான் எத்தனை வேறுபாடுகள். நாம் கண்டு வந்த கிருஷ்ணன் தடுமாற்றமில்லாதவன், விருப்பாலும் வெறுப்பாலும் அலைகழிக்கப்படாதவன், துயர் அண்டாதவன், மகிழ்ச்சியும் தீண்டாதவன், செய்யும் செயல்களில் தன்னைக் கலக்காதவன், செய்பவற்றில் முழுமையாக இருப்பவன், செய்த கணமே அதிலிருந்து விலகி விடுபவன், இலக்கைத் தீர்மானித்தாலும் அதை நோக்கிய பயணம் மட்டுமே செய்பவன், இலக்கை அடைந்தாலும், இழந்தாலும் அதைப் பற்றிய எவ்வெண்ணத்தையும் வைத்துக் கொள்ளாதவன். எனவே தான் அவன் ஞானி. அனைவராலும் விரும்பப்படுகிறான். அவனது கூரிய ஆழியும் ‘நற்காட்சி’யாகவே(சு-தர்சனம்) இருக்கிறது. அவன் எப்போதுமே இப்படித்தானா? அவன் மானுடன் இல்லையா?

இக்கேள்விகளுக்கு ஒரு விரிவான பதிலைத் தருகிறது சொல்வளர்காடு. இங்கே நாம் பார்க்கும் கிருஷ்ணன் வினாக்களால் ஆனவன். அறிதலை வேண்டுபவன். அவன் சாந்தீபனி முனிவரைச் சந்திக்கும் தருணம் மிகவும் உணர்ச்சிகரமானது. உண்மையில் அதை ஜெ விவரித்த விதம் ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தரை முதன்முதலாகச் சந்தித்து வரவேற்ற நிகழ்வை ஒத்தது. தனது ஞானப் பயணத்தில் இந்த லீலை என்னும் பொருளின்மையை நேரில் சந்திக்கும் ஒரு இடம் இளைய யாதவனுக்கு வருகிறது. எந்த இளமைந்தர்களின் மரணத்துக்காக வெஞ்சினம் கொண்டானோ, எந்த அறம் பிழைத்தற்காக அதை மீறியவர்களைக் கொன்றானோ, அந்த ஒரு இளமைந்தன் ஒருவனே இவனைக் கண்டு அச்சம் கொள்கிறான். பெரும் பூதாகரமாக அவன் முன் எழுந்து வருகிறது அவ்வினா? அவன் ஆற்றியதன் பொருள் என்ன? அவன் சொன்ன அறம் யாருக்கானது?


தெறித்து விழுந்து ஆசிரியர் முன் வருகிறான். (சுவாமி விவேகானந்தரும் இப்படி ஒரு முறை ராமகிருஷ்ணரிடம் ஊடி, மறுத்து பிரிந்து சென்று, பின்னர் அவரன்றி தனக்கு வேறு யாரும் வழிகாட்டி இல்லை என்று திரும்பிய ஒரு சம்பவம் உண்டு!) அவர் மீண்டும் லீலையை, அதன் பொருளின்மையைக் கூறுகிறார். அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஆனால் அவரை மறுக்கவும் இயலவில்லை. அவர் கூறும் 'பசுங்குருதி மணம் கொண்ட கருக்குழவி' என்ற படிமம் அபாரமானது. அழிவும், ஆக்கமும் ஒன்றேயான ஒன்று. வலி விளைவால் சமன்படுத்தப்பட்ட ஒன்று. முக்கியமாக அவன் ஆற்றியவற்றுக்கு எப்பொருளும் இல்லை என்பதே அவனைக் கொந்தளிப்புடன் இருக்க வைக்கிறது. தன் தவறைக் குறை கூறுபவர்களிடம் அவன் கூச்சலிட்டு வஞ்சினம் உரைக்கிறான். ஆனால் அவன் உண்மையில் பெரு வஞ்சம் கொண்டது அவன் ஆசிரியரிடம் தான். அந்த கொந்தளிப்பே அவனை குருநிலையில் இருந்து வெளியேற்றுகிறது. அந்த கொந்தளிப்பே அவனை அமர விடாமல் செயல் ஆற்றச் சொல்கிறது. மெல்ல மெல்ல செயல் ஒன்றிலேயே அவன் தன் முழுமையை உணரத் துவங்குகிறான். பயன் கருதிச் செய்யும் செயல்கள் என்றாலும் பயனை விடச் செய்வதே முக்கியம் என சமாதானம் அடைகிறான். ஆயினும் அவனுள் கரந்த அந்த நஞ்சு தான் வெளிப்படத் தருணம் நோக்கிக் கொண்டிருந்தது.

அதைத் தான் மிகச் சரியான ஒரு தருணத்தில் அவர் முன் பெரு வினாவாக முன்வைக்கிறான். அவர் கொண்ட அனைத்து கல்வியும் அவர் அறிதலாக ஆகும் நேரம், அந்த இருண்மையை அவரால் தாள இயலவில்லை. அவருள்ளும் ஒரு நாகம் எழுகிறது. இந்த இருளைத் தாண்டி, அந்த இருள் யானையின் மத்தகம் மீது ஏறுபவனே உண்மையான யோகி என்ற அவரின் சொற்கள் அவரை குறுக்கத் துவங்குகின்றன. தான் அறிந்த அனைத்தும் பொருளற்றுப் போவதை, பொருளின்மை ஒன்றே எஞ்சுவதை, அதை ஏற்கத் தான் இன்னும் தயாராகவில்லை என்ற உண்மை தரும் துயரை அவர் அறிகிறார். தான் இறந்து பிறக்க வேண்டிய தருணம் அது என உணர்கிறார். அவருள் எழுந்த நாகம் தன் மாணவன் மீது நஞ்சுமிழ்கிறது. மீண்டும் பிறந்து, கடந்து செல்கிறார்.

ஆயினும் தன் செயலின் கீழ்மையுணர்ந்த இளைய யாதவன் அங்கிருந்து தப்பி ஓடுவது போல துவாரகை செல்கிறான். அமரும் சமயங்களிலெல்லாம் தன் கீழ்மை தன்னைச் சுட மேலும் மேலும் செயல்கள் செய்து கொண்டே இருக்கிறான். தான் ஆற்றுகின்றவற்றின் பொருளின்மைகள் அவனைத் துரத்துகின்றன. ஆனால் தன்னுள் இருந்தே ஒரு விடையைக் கண்டறிந்து அதை வெல்கிறான். அதனால் தான் அவன் கீதாசிரியன்!!


சாரதா