Thursday, August 25, 2016

பிரம்மமும் ஒரு சொல்



குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர் “பிரம்மம்வேறு காளிவேறு அல்ல. எது பிரம்மம்மோ அதுவே லீலையில் காளி,  “ என்கிறார்.

பிரம்மமும் ஒரு சொல், காளியும் ஒரு சொல். இந்த சொற்கள் இரண்டும் ஒன்று என்றால் புரிந்துக்கொள்ள முடிகின்றதா? பிரம்மம் என்ற சொல் சொல்லாக மட்டும் கூழங்கள்போல் இருக்கிறது. காளி என்ற சொல் கொஞ்சம் கொஞ்சமும் விரிந்து செல்வது புரிகிறது. இடப்புறத்தின் மேல் ஒரு கையில் கொலைவாள் ஏந்தியும், கீழ்கையில் வெட்டிய தலையையும் கொண்டு நிற்கிறது. வலப்புறம் மேல் கையில் அபயம் காட்டுகிறது,கீழ்கையில் அருளல் காட்டுகிறது. நகைப்பற்கள் ஒளிவிடும் எண்ணில்லா வெண்தலை மாலைசூடி உள்ளது. அடர் கறுமுகத்தில் இரத்தம் வழிவதுபோல ஒளிசெந்நாக்கு நீட்டுகிறது. வளையாபெருமுலையில் அமுதம் நிரம்பி ததும்புகிறது. எண்ணிறந்த கைகளையே ஆடையாக கட்டிக்கொண்டு நிற்கிறது. அசையா சிவனை பாதையென ஆக்கி அவன் இதயத்தில் மலர்பாதம் பூக்க அதிரநடக்கிறாள், அலைபுரளும் நதியே சடையென குழல்கற்றைநெளிய விண்மீன் விரிந்த பெரும்வானத்தையே கிரீடமெனசூடி எவருக்குமே தலைவியென முதல்வியென முன்னுக்கும் முன்பிறந்தவள் என்று முகம்நிமிர்ந்து நிற்கிறாள் ஆனாலும் அவள் விழிகளை காண்கையில் அவள் குழந்தை. காளியின் இந்த லீலை பிரம்மத்தின் லீலை என்று எப்படி நம்புவது?. 

பிரம்மம் பிறிதில்லாதது, அது பிறிதென ஏன் தன்னை காட்டுகின்றது. ஏன் லீலையாகிறது என்ற வினா சகஸ்ரருக்கு வருகிறது. பன்னிரெண்டவாது ஸ்வேதகேது வரை அது ஒரு சொல்லாக மட்டும் நம்பும்படி இருக்கிறது. சொல்லின்வழியாகவே அதை அவர்கள் நம்பிக்கையில் உணர்ந்துக்கொள்கிறார்கள். அது ஒரு முழு உண்மை இல்லை நம்பிக்கை மட்டும், நம்பிக்கை கற்பனையாககும் வாப்பு உண்டு. உணர்ந்து அறிந்து உண்மையின் வழியாக அந்த சொல்லை உண்மையென்று ஆக்க சகஸ்ரர் எழுகின்றார் அங்கிருந்து சாந்தீபனி உருவாகின்றது.

ஞானிக்கும் விஞ்ஞானிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஞானி இருக்கு என்று மட்டும் சொல்கிறான். விஞ்ஞானி இருப்பது இதுதான் என்று காட்டுகின்றான். பன்னிரெண்டாவது ஸ்வேதகேது ஞானியாக மட்டும் இருக்கும் இடத்தில் சகஸ்ரர் விஞ்ஞானியாகின்றார். 

பிறிதில்லா ஒன்று பிறிதென ஆகும், பிறிதென ஆகிய அனைத்தும் பிறதில்லா ஒன்றாய் இருந்தவைதான் என்பதை ஸ்வேதகேது நம்புகிறார். அந்த நம்பிக்கையை காட்ட அவர் காட்டும் சொற்கள் அனைத்தும் நம்பிக்கையும் கற்பனையும் மட்டும்தான் அதை அவரால் தாண்ட முடியவில்லை. அவர் நம்பிக்கையை உடைக்கவோ இல்லை என்று மறுக்கவோ சகஸ்ரர் முயற்சிக்கவில்லை அவரின் நம்பிக்கையின் எல்லையை கடந்து அப்பால்  என்ன என்று பார்க்க அவர் புறப்படுகின்றார். அங்கே குருவும் சீடனும் பிரிந்து போதாமையின் எல்லையை கடந்துப்பார்க்க முயற்சி செய்கிறார்கள். 

ஸ்வேதகேதுவிடம் இருந்து புறப்பட்ட சகஸ்ரர் தன்னையே ஒரு காடாக்கி தன்னையே தனக்குள் தேடி ஆத்மாவை கண்டு அடைகின்றார். தான் தேடுவது ஆத்மா என்பதுகூட அவருக்கு தெரியவில்லை. பிறிதில்லா ஒன்று பிறிதென எங்கு கிளைக்கிறது, அல்லது பிறிதென கிளைத்த அனைத்தும் பிறதில்லா ஒன்றில் எங்கு இணைகிறது என்று தேடுகின்றார்.

உடல்காட்டுக்குள் தன்விழைவுகளின் வழியாக ஒடித்திரிந்து அலைக்கழித்த புலன்என்னும் விலங்கும், மனமென்னும் குரங்கும் சகஸ்ரரின் அறிவுவிசையால் ஆட்படும்போது அவருக்கு வழிக்காட்டியாக மலையுச்சிக்கு அழைத்துச்செல்கின்றது. அங்கு ஏதோ இருக்கும் என்ற நம்பிக்கையில் செல்கின்றார். அங்கு வானும் பூமியும் இணையும் இடத்தை கண்டு அடைந்து அதில் நீலஒளி தரிசனம் பெருகின்றார். அங்கு புலன்களும் மனமும் நாதஓசையில் லயித்து இருக்க, அங்கிருந்து துணிவு ஒன்றையே துணையாக கொண்டு இன்னும் அடியாழத்திற்கு செல்கின்றார் சகஸ்ரர்.  அங்கு அவருக்காக காத்திருக்கிறது பெரும் சதுப்புநில சேற்றுக்குழிகள் அதில் அமிந்துவிடாமல் துணிவால் அறிவால் பொறுமையால் வைராக்கியத்தால் கடந்து சகஸ்ராரத்தில் அமர்ந்து நோக்குகின்றார், சகஸ்ராரத்தின் ஒளி அவரை ஒளிக்கொள்ளசெய்கிறது, அங்கிருந்து அவர் ஆன்மாவை காண்கிறார். அதன் ஒளிதான் எங்கும் பரவி இருக்கிறது. தன்னிலும் மண்ணிலும் மரத்திலும் விண்ணிலும் அணுவாக அண்டமாக மாறி ஒளிகின்றது என்பதை அறிகின்றார்.   ஆடுவதும் அதுவே ஆடாமல் கன்னியாக நிற்கு களிப்பதும் ஆதுவே என்பதை விஞ்ஞானபூர்ணமாக உணர்ந்துக்கொள்கிறார். அது யாருக்காகவும் ஆடவில்லை. ஆடலில் உள்ள இன்பத்திற்கா மட்டும் ஆடுகிறது என்பதை தெளிகின்றார். இதைத்தான் ஸ்வேதகேது சொற்களாக சொல்லிக்கொண்டு இருந்தார். அதை சகஸ்ரர்  அன்னைசிவகாமசுந்தரி சமேத ஆனந்தநடராஜர் தரிசனம் என்ற விஞ்ஞானமாக்கி உள்ளார். தரிசனம் கண்டபின்பு சொற்கள் இல்லாமலே பொருள் விளங்கிவிடுகிறது. பொருள் இனி சொல்லாக மாறலாம் அது சொல்மட்டும் இல்லை பொருளும்கூட. ஸ்வேதகேது நின்ற இடத்தில் இருந்து சகஸ்ரர் தொடர்ந்து அடைந்த தூரம் உண்மை. 

சொல்லும் சொல்லில் இருந்து வரும் பொருளும், பொருளும் பொருளில் இருந்து வரும் சொல்லும் ஒன்றை ஒன்று விளக்கி தரிசனப்படுத்துகின்றது. அது ஞானமா விஞ்ஞானமா என்பதை அவர் அவர் உழைப்பின் அளவில் உய்த்து உணர முடியும்.

இதுவரை கண்ட குருகுலங்கள் நம்பிக்கையை முன்னெடுக்க, சாந்தீபனி நம்பிக்கையின் அப்பால் உள்ள உண்மையை முன்னெடுக்கிறது அதனால்தான் அதனால் மனிதர்கள் ஓர்நிறை என்ற உண்மையை வெளியிட முடிந்தது. குலக்கல்வியை அது முடிவுக்கு கொண்டுவந்து  நீ மனிதனா வா வேதம்பயில் என்கிறது.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்