Saturday, August 20, 2016

பெண்மை





இன்றைய பதிவில் பெண்மை குறித்த பல்வேறு கோணங்களை காணமுடிந்தது.
அழகிய பெண்களின் உடலழகு அவர்களின் உள்ளமென ஆவதும், அவர்கள்  தெய்வங்களால் கைபற்றப்பட்டவர்கள் என்பதும்,அழகே அவர்களின் தகுதியென்றானதும்,கவர்வதே அழகென்பதால் மேலும் மேலும் கவரவே அவர்கள் முயல்வதும், அதற்கேற்ப அவர்களின் அனைத்து செயல்களையுமே அவர்கள் மாற்றிக்கொள்வதுமாய் அழகிய பெண்களின் நிலைப்பாடு அவர்களின் கோணத்திலேயே காட்டப்படுகிறது


ஆனால் சுலஃபை கார்கியை கண்டபினரே அவள் இதுகாறும் செய்து வந்த அனைத்துமே அழகின்மையை சந்திக்க அஞ்சியே என்பதைஉணர்வது அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது
அவளின் அழகு, அழகின்மையை நோக்க நோக்க அதுவும் அவளை நோக்குவதும் அதன் பின்னர் அவளுக்கு அழகற்ற தோற்றம் இயல்பானதாக, அஞ்சத்தக்கதல்லாத, விருப்பத்துக்குரியதொன்றாய் மாறுவதுமான. அந்த transition  மிக அழகாய், ஆழமாய்  விளக்கப்பட்டிருக்கிறது.



”அழகற்ற பெண், அவளை கைப்பற்றும் தெய்வங்களின்றி விடுதலை பெற்றவள் ”என்பது எத்தனை சக்திவாய்ந்த வரிகள்?  அழகற்ற அவளை இளமையிலேயெ தெய்வங்கள் கைவிட்டாலும்,.முலையையும், தோள்களையும் கருவறையையும் ஆள தெய்வங்கள் இன்றி வேத மெய்மையே நிமிர்தலென்றாகிய கார்கி எத்தனை பேரழகுடன் நமக்கு காட்சியளிகிறாள்?
உடலெனவே பெண்களை அணுகும் ஆண்கள், அன்னையெனவும்  மனைவியென்றும் தளைக்கவே  விரும்புகிறார்கள் என்பதும் எனக்கு புதிய சிந்தனையாக தெரிகிறது. காதல் ஒருவனை கைப்பிடிப்பதும் அவன் காரியம் யாவிலும் கைகொடுப்பதும்  பெண்களே இந்த விலங்கை வலிய ஏற்றுக்கொள்வதுதானோ?


பெண் சுதந்திரம் குறித்த புதிய சிந்தனையாகவே எனக்கு இது தெரிகிறது
ஆண்களின் குருதியில் இந்த விழைவு பயிற்றுவிக்கப்பட்டிருக்கட்டும் , பெண்களின் குருதியிலும்  இந்த நிமிர்வு இனி  எழுதப்படட்டுமே?வென்றடக்குவன்  முன் தன்னை முழுதளிக்கமலிருக்கட்டும் இனி பெண்மை.


யாக்ஞவல்கியர் முதல் மனைவியிடன் சென்று ஒப்புதல் கேட்பது விழைவை அறிவிப்பது போல என்பதும் எத்தனை  strong and true?
 எல்லா பதிவுகளுமே காலம் கடந்து நம்மை சிந்திக்க வைப்பவையே எனினும் இந்த பெண்மைகான, அழகிற்கான சிறப்பு பதிவு காலம் கடந்த்தும் நினைவில் இருக்கும்


அழகிற்காகவும் நிமிர்வுக்காகவுமே அறியப்பட்ட பாஞ்சாலி அந்த அழகின் பொருட்டே சபையில் அவமானப்படுத்தப்பட்ட பின் , யாரும் தன்னை அன்னையெனவும் மனைவியெனவும்  தளைக்க முடியதென்பது,  அழகு மற்றும் அழகின்மையென்கிற பெண்மை எனும் நாணயத்தின் இரண்டு  பக்கங்களாகவே தெரிகிறது.

லோகமாதேவி