சில கிராமப்புரங்களில் சிறுசிறு பாறைகள் அதிகம் கிடைக்கும். அவற்றை வைத்து அவர்கள் மதில் சுவர்கள், சிலசமயம் வீட்டு சுவர்கள்கூட அமைப்பார்கள். இது செங்கற்கள் அல்லது சதுரம் சதுரமாக வெட்டப்பட்ட கற்பாறைகளை வைத்து கட்டுவது போன்றதல்ல. பல வடிவங்களில், செதுக்கவோ உடைக்கவோ செய்யாமல் இயற்கையாக அமைந்த பாறைகளை வைத்து நடுவில் சிறுகற்களால் முட்டுக்கொடுக்கப்பட்டு கட்டபடும் சுவர் அது. புவியீர்ப்பு சக்தியால் மட்டுமே அது சுவரென நிற்கும். எந்தப் பாறை அடியில் இருக்கவேண்டும் எந்தப்பாறை எதன் மேல் அடுக்கப்படவேண்டும் என சற்று சிந்தித்து அந்தச் சுவர் கட்டப்படவேண்டும். கட்டப்பட்ட பிறகு அதுவாக எப்போதும் சரியாது நிலைத்து நிற்கும். அப்படியில்லாமல் சிமென்ட் அல்லது சுண்ணாம்பின் துணைகொண்டு பொருத்தமற்ற வகையில் கற்களை பிணைத்து கட்டப்பட்டிருந்தால் அது விரைவில் சரிந்து விழுந்துவிடும்.
கர்ணன் தன் அரசவையை புதிதாக மாற்றிக் கட்டுகிறான். அரசவை கட்டப்படுவது கற்கள் மற்றும் சுண்ணத்தால் அல்ல. அது பல்வேறு சமூக குழுத்தலைவர்களால் கட்டப்படுகிறது. அவரவருக்கான இடத்தை தேர்ந்தெடுத்து அவரவர்களை அமர வைத்துவிடும் திட்டம் முன்னர் கூறிய கற்பாறை சுவர் அமைப்பதைப்போல் அமைகிறது. இதுவரை வெண்முரசில் நகரங்கள் கட்டப்படுவதைப் பார்த்திருக்கிறோம். இப்போது ஒரு அரசவை கட்டப்படுவது விவரிக்கப்படுகிறது. அரசவையைக் கட்டினால் அது மறைமுகமாக சமூகத்தை கட்டுவதாக அமையும். ஒரு அரசு ஒரு சமூகக்குழுவை தன் ஆட்சிக்குள் கொண்டுவரவேண்டுமென்றால் அக்குழுவுக்கென அரசவையில் ஒரு இடம் கொடுத்தால் போதும். அந்த மொத்தக் குலக்குழுவும் அந்த அரசுக்குள் வந்துவிடும், மற்றும் அவ்வரசை தன் அரசென ஏற்கும். அப்படியல்லாமல், வெறும் படைவீரர்கள் துணைகொண்டு வன்முறையின் மூலமென்றால், அம்மக்களை கைதிகளாகத்தான் நாட்டில் வைத்திருக்கமுடியும். அவர்களை நாட்டின் குடிகளாக ஆக்க முடியாது.
அனைத்து குலத்தலைவர்களுக்கும் அனைத்து அரசு நடவடிக்கைகளையும் கற்பித்துவிட்டுத்தான் அவன் அவையை கூட்ட வேண்டுமென்பது நடக்காத காரியம். தான் என்று இருக்கும் எந்த குலத் தலைவரும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை என்றே இருப்பார். அவர்களுக்கு எதையும் ஆசிரியர் வைத்து கற்பிக்க முடியாது. அல்லது அப்படி கற்றவர்கள்தான் குலக்குழுத் தலைவராக வரமுடியும் எனக் கட்டளையிடவும் முடியாது. முதலில் அவர்களை அவைக்கு வரவழைக்கவேண்டும். பின்னர் ஒருவேளை அவர்களாகவே கற்றுக்கொள்வார்கள். அப்படியே கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பெரிதாக ஒரு நஷ்டமும் வந்துவிடாது. வெறும் ஆமோதிப்பவர்களாக, அல்லது வெற்று கூச்சலிடுபவர்களாக இருப்பார்கள். நம் நாட்டு பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை பிராந்திய குலக்குழுத்தலைவர்கள் என மாற்றிப்படித்தால் இங்கு சொல்லியிருப்பது எவ்வளவு சரியென உணர்ந்துகொள்ளலாம்.
ஆக கர்ணன் கட்டமைப்பது ஒருவகையில் நம் நாட்டு பாராளுமன்றம் அல்லது சட்டசபை போன்றதொரு அமைப்பை. இந்த விவரிப்பு வலிந்து திணிப்பதாக இல்லாமல் மிக இயல்பாக இப்படித்தான் நடந்திருக்கும் என படிப்பவர் உணரும் வண்ணம் மிகச் சிறப்பாக வெண்முரசில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அத்தியாயங்கள் பண்டைய இந்திய சமூகத்தின் கட்டமைப்பை தெளிவுற விவரிக்கும் வரலாற்றுக் கல்வியாக வாசகன் முன் விரிகிறது.
தண்டபாணி துரைவேல்