Monday, January 4, 2016

வீட்டரசியலில் காட்டப்படும் அவமரியாதை (வெய்யோன் 11 - 12)
       அரசியல் என்பது ஏதாவது தலைமையை அல்லது பதவியை பிடித்தல் சம்பந்தப்பட்டது. அப்படி ஒருவரை அல்லது ஒரு கொள்கையை தலைமைப்பீடத்தில் அமர்த்த விரும்பும் மற்றவர்களும் அந்த அரசியலில் ஈடுபடுவார்கள். இதற்காக பல்வேறு முறைகள் கடைபிடிக்கப்படும். ஒருவர் காலை ஒருவர் வாரிவிடுதல் இருக்கும்  போட்டி அரசியல்வாதிகளை அவமதிப்பதும் இகழ்வதும் அடிக்கடி நடக்கும். என்றாலும் அதில்  அவமதிப்பது முக்கிய நோக்கம் அல்ல. இருவருக்கிடையே விரோதம் ஏதும் இல்லாமலேயே கூட வெவ்வேறு அரசியல் நிலைகளை எடுத்து அதன் காரணமாக போட்டியில் ஈடுபடுவார்கள். ஆனால் அந்தப் போட்டிக் களத்திற்கப்பால்  அவர்கள் நட்பை பேணுவதைகூட  சில சமயம் காண முடியும்.


    வீட்டிற்குள்ளும் அரசியல் போன்ற சூழல்கள் நிலவுவதுண்டு. வீடு என்பதை அலுவலகம், வகுப்பறை, குழுமம்  போன்ற நான்கு சுவர்களுக்குள் அடைந்துவிடும்,  வெளிஉலக மக்களை பாதிக்காத அனைத்து குழுக்களுக்கும் நாம் நீட்டிக்கொள்ளலாம்.  வீட்டின் நிர்வாகத் தலைமையக் கருத்தில் கொண்டு அரசியல்  நடப்பதுண்டு. உறவினர்களுக்கிடையே எழும் சொத்து பிரச்சினை காரணமாகவும் இதைப்போன்ற அரசியல் நடக்கும். ஆனால் இது எதுவும் இல்லாமல் வெறும் பொறாமை, கோபம்,  தவறான புரிதல், அவர் முகத்தை பார்க்கப் பிடிக்கவில்லை போன்ற அற்பமான  காரணங்கள் சிலவற்றை மனதில் வைத்து  அரசியல் நடைபெறுவதுண்டு.     இதில் குழு சேர்ந்துகொண்டு அரசியல் செய்வதும் அதிகம். ஒரு தனிப்பட்ட நபர் பொருட்டே ஒரு குழு அமையும். 


       இந்த அரசியலின்  நோக்கம் எதிர் நிற்பவரின் மனதை புண்படுத்துவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. நேரில் இதைப்பற்றி பேசி ஒரு தீர்வுகண்டு இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.  உள்ளூற ஒரு பகையை கற்பித்துக்கொண்டு  அதை சதா சிந்தித்து சிந்தித்து வளர்த்து அதில் இன்பத்தை கற்பனைசெய்துகொண்டு ஆர்வத்துடன் இவ்வரசியலில் ஈடுபடுவார்கள்.   ஒருவர் முகத்தின் எதிராக, அல்லது நேரிடையாக  அவமதிப்பது என்பது பெரும்பாலும் இருக்காது. செயல்கள்கூட மறைமுகமாக ஆனால் அதே நேரத்தில் அதில் சம்பந்தப்பட்டவர் ஐயமின்றி அறிந்துகொள்ளும் வண்ணம் அந்த அவமதிப்பு இருக்கும். அவரின் சரிவுகளை பூதாகரமாக்கி காட்டுதல், அவர் நேசிப்பவரை அபாண்டமாக  எக்காரணமுமின்றி தூற்றுதல்,  அலட்சியப்படுத்தும் உடல்மொழி, அதுவும் அவரை அற்பமெனக் காட்டும் அருவறுப்பதாய் காட்டும் முக பாவனை,  அவரின் செயல்களின் சிறு குற்றங்களை அனைவர் எதிரிலும் பெரிய குற்றம்  புரிந்தவர்போல் விவாதித்தல் என அவமதிப்பின் கீழ்மை அதிகரித்துக்கொண்டே போகும். அதிக பட்ச உளவியல் வன்முறை அவிழ்த்துவிடப்படும். ஆனால் அவர் இதை எங்கும் கொண்டு சென்று நியாயம் கேட்க முடியாது. இவர்களின் இச்செய்கைகளை மற்றவர்களிடம் நிரூபிக்கமுடியாது. அப்படியே சொன்னாலும் இன்னொருமுறை தம்மை தாமே அவமதித்துக்கொள்வதாக அது அமையும்.


    இப்படி அவமதிக்கப்படும் ஒருவர் என்ன  செய்ய வேண்டும்.   பதிலுக்கு அவர்களை அவமதிப்பு செய்யவேண்டுமா?  அதன் மூலம் இவருடைய அவமதிப்பின் வலி குறைந்து விடுவதில்லை. மாறாக  அவர்களை மேலும் தூண்டுகிறார். அவர்களின் செயலுக்கு புதிய காரணங்களை உருவாக்குவதாக மட்டுமே அது  அமையும். அவர்களின் தரம் தாழ்ந்த செய்கைக்காக தம் தரத்தை தாழ்த்திக்கொள்வது ஒரு தீர்வல்ல. ஒருவகையில் நாம் அடையும் தோல்வி அது.  அவ்ர்களை அலட்சியப்படுத்தி கடந்து சென்றுவிடலாம். ஆனால் அவர்கள் எப்போதும் நம் கண்ணெதிரே இருப்பவர்கள். அவர்களை தவிர்க்கமுடியாத சூழல் இருக்கலாம். அவமதிப்பதால் எனக்கு வலி இல்லை என நடிக்கத்தான் முடியும். அப்படி அவர்கள் அவமதிப்பை கண்டுகொள்ளாமல் விட்டாலும் இன்னும் தம் அவமதிப்பின் தீவிரத்தை அதிகமாக்குவார்கள். பின்னர் என்னதான் செய்வது? ஒருவேளை இதற்காக  ஒன்றுமே செய்யமுடியாதோ?


    வெண்முரசின் கர்ணன் என்ன செய்கிறான் எனப் பார்க்கலாம். அவன் அவர்களுக்கெதிராக ஒரு சொல்லையும் எடுப்பதில்லை, யாரிடமும் முறையிடுவதும் இல்லை.  அவர்களை அலட்சியப்படுத்தவும் இல்லை.  அவன் அவர்களின் மனங்கள் செல்லும் வழியை  புரிந்துகொள்கிறான்.  விருஷாலியைப் பற்றி அவன் கூறிவது:


“உண்மை. களத்தில் அன்றி பிற இடங்களில் அனைத்தும் இறங்கிச் செல்வதே என் வழக்கம். எப்போதும் என் தரப்பு நியாயங்களைவிட அவர்களின் உணர்வுகளே எனக்கு முதன்மையாக தெரிகின்றன” என்றான் கர்ணன். “மூத்தவள் மணிமுடி மறுக்கப்பட்டதால் அநீதி இழைக்கப்பட்டவள். ஒவ்வொரு அவையிலும் அவளே மூத்தவள் என்றும் ஆனால் சூதர்மகள் என்பதால் மணிமுடி கிடைக்கப்பெறாதவள் என்பதும் சொல்லப்படாத பெருஞ்சொல்லாக நின்றுகொண்டிருப்பதை அவள் உணர்கிறாள். அத்துயரை நானன்றி வேறு யார் அருகணைந்து அறியமுடியும்?” 
 இளைய்  மனைவியைப் பற்றி அவ்ன் கூறுவது


“இளையவள் பிறிதொருவகையில் அநீதி இழைக்கப்பட்டவள். தன்னை மணங்கொண்டு முடிசூட்டி அரியணையமர்த்தும் ஷத்ரிய இளவரசனுக்காக கனவுகளுடன் காத்திருந்தவள். நகர் புகுந்து அவளை கவர்ந்து வந்தோம். சூதன்மகனுக்கு மணமகளான தன் இழிவை இத்தனை நாளாகியும் அவளால் கடக்க முடியவில்லை."       


   அவர்கள் அவன் முன் ஆடைஇழந்து நிர்வாணமாக நிற்கிறார்கள். அவனுக்கு அவர்கள்  சின்னஞ்சிறு குறும்புக் குழந்தைகளாக மாறி விடுகின்றனர். அவர்கள் செய்யும் அவமதிப்புகள், சிறுவர் தன்மீது கற்களை விட்டெறிந்து விளையாடுவதைப்போல, தன்னை  கை நகங்களால் கிள்ளி விளையாடுவதைப்போல என எடுத்துக்கொண்டு சகித்துக்கொள்கிறான். அதனால் அவனுக்கு  வலியெதுவும்  இல்லை என்பதல்ல பொருள். அவ்வலியை எவ்வித கோபங்களும் இல்லாமல் தாங்கிக்கொள்கிறான் என்பதே உண்மை. அவன் அந்த அவமதிப்புகளை மன்னித்துவிடுகிறான். அதுமட்டுமல்லாமல் இனி அவர்கள் செய்யப்போகும் அவமதிப்புகளுக்காக முன்பே மன்னித்தவனாக அவன் உள்ளான். அது கர்ணனின் விண்ணைத்தாண்டி  எழும் பெரும் உள்ளத்தைக் காண்பிக்கிறது. கதிரவனின் பிம்பம் சேற்று நீரில் தெரிவதைப்போல் அவன் இருப்பு உள்ளது. என்னதான் சேறு கலங்கியதாய், கெட்ட வாடையுடன் இருந்தாலும் அது அக்கதிரவனை பாதிக்குமா என்ன?தண்டபாணி துரைவேல்