Saturday, January 2, 2016

அறமா? மரபா? (வெய்யோன் - 9 )
      ஒரு விலங்கு பாய்ந்தோடும் கானகத்தில் மனிதன் நடப்பது கடினம்.  ஒரு விலங்கை அதற்கு புதிதான கானகத்தில் விட்டால்கூட அதற்கென ஒரு வழி கண்டுபிடித்து உள்ளே ஓடிவிடும். ஆனால் ஒரு மனிதன் திட்டமிட்டு அமைக்கப்பட்ட  புதிய நகரத்தின் எல்லையில் விட்டால்கூட  அடுத்த அடி எந்தத்திசையில் வைப்பது என அறியாது திகைத்து நிற்பான்.  அப்படியே வாழ்விலும் ஒரு மனிதன் எப்படி நடக்கவேண்டும் எனத் தெரியாதவனாகவே இருக்கிறான். அடுத்த அடி எப்படி வைப்பது என்பதற்கான குழப்பம் அவனுக்கு எப்போதும் உள்ளது. 

ஏனென்றால், அவன் வாழ இருக்கும் நகரம்  பல்வேறு உறவுகளால் பிணைக்கப்பட்ட,  பல படிநிலைகளில் இருக்கும்,  மக்கள் நிரம்பிய சமூகம். அதில் குறுக்கும் நெடுக்குமாக  சமூக விதிகள், மதநெறிகள், பண்பாடு, மரபுகள் போன்றவற்றால் அமைக்கப்பட்ட   பாதைகள் இருக்கின்றன.  அதில் ஒருவழிப்பாதைகள்,  சிலர்மட்டுமே செல்லக்கூடிய சிறப்பு பாதைகள், சிரமமான ஏற்றப் பாதைகள், குறுகலான பாதுகாப்பற்ற ஆனால் குறைந்த தொலைவு பாதைகள், அகலமும்  பாதுகாப்பும் கொண்டு ஆனால் நீளம் அதிகம்கொண்ட  பாதைகள், பிறர் அனுமதியோடு செல்ல வேண்டிய பாதைகள், அதிக விதிமுறைகளை பின்பற்றவேண்டிய பாதைகள், பாதுகாவலர் கண்காணிப்பில் செல்ல வேண்டிய பாதைகள் என அவன் அறிவைத் தடுமாறச் செய்பவையாக இருக்கின்றன.

 அதில் அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான பாதையை தேர்ந்தெடுத்து நடக்கவேண்டும். பெரும்பாலும் அறத்தின் வழி நடப்பவர்களுக்கு  சரியான பாதைகள் இருக்கும்படிதான் நகர சாலை அமைப்பு  அமைந்திருக்கும். வெகு அரிதாக அறத்தின் வழி நடப்பவனுக்கு செல்ல பாதை இல்லாமல் போய்விடுவதுண்டு.  அறமற்ற வழியில் செல்லத்துணிந்த ஒருவனுக்கு இந்த விதிமுறைகளைப்பற்றி கவலையில்லை.  அவனுக்கு எளிதாக இருக்கும் சாலைகளை பயன்படுத்திக்கொள்வதோடு, தேவைப்பட்டால், விதிகளை மீறி தடுப்புகளை தாண்டி சமூகத்தின் பார்வையில் படாமல் ஓளிந்து மறைந்து தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடுகிறார்கள்.
      ஆனால் அறத்தின் வழி நடக்கும் ஒருவனுக்கு சிலசமயம் பெரும் சிக்கலாக இவ்விதிமுறைகள் எதிர்  நிற்கின்றன.  எந்த விதிமுறைகள் சமூகத்தின் அமைதிக்கும் நல்வாழ்வுக்கும் கரணமாக இருக்கிறதோ அவையே ஒருவனின் அறத்தை சோதிப்பதாக அமைந்துவிடுகிறது. அப்போது அவன் என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் அவனுக்கு வருகிறது. அவன் அறத்தின்வழி நடப்பதை உணரும் சமூகம் அவனுக்காக விதிகளை மாற்றினால் சமூக ஒழுங்கு கெட்டுவிடுமோ என குழம்புகிறது. அதனால் அவனை சமூகம் எதிர்த்து  தடுக்க முயல்கிறது. ஒரு நல்லவனுக்காக திறக்கப்படும் பாதையில் செல்ல அறமற்ற செயல் செய்யும் பலர் காத்திருக்கின்றனர். ஆகவே நாம் சமூகத்தின் செயலை எளிதாக குறைத்து  கூறிவிடமுடியாது.  இத்தகைய அறச்சிக்கல்  நிகழ்வுகள் அதிகம் நடக்கும்போது மெல்ல சமூகம் தன் விதிமுறைகளை சற்று தளர்த்தி சற்று மாறுபடுத்தி வேறு புதிய வழிகளை ஏற்படுத்தி சரி செய்துகொள்ளும். ஆனால் இது உடனே நடகும் செயல் அல்ல. இதற்கு காலமாகும். அதற்குள் பலர் பலியாகிவிடுவர்.


     கர்ணன் ஒரு சூதப் பெண்ணை மணந்து அவளை அரசியாக்கிகொள்வதை அன்றைய இந்திய சமூகம் அங்கீகரிக்காது இருக்கிறது. நாம் இன்றைய கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் இது என்ன மடத்தனம் என்று தோன்றும். ஏன் அப்போதே துரியோதனன் அப்படி சொல்கிறான்:


  துரியோதனன் “என்ன பேச்சு இது? அப்படி ஒரு எதிர்ப்பு வருமென்றால் அதையும் வாளாலேயே எதிர்கொள்வோம். கர்ணா, உனக்கு அது விருப்பென்றால் அவ்வண்ணமே ஆகட்டும். நீ சூதர் மகளை மணந்து கொள். அவள் உன் பட்டத்தரசியாக முடிசூடி அங்க நாட்டு அரியணையில் அமரட்டும். எதிர்ச்சொல் எழும் எந்நாவும் கொய்து எரியப்படும் என்று என் படை கொண்டு நான் அறிவிக்கிறேன். பிறகென்ன?” என்றான்.


    அதைப்போல்தான் இப்போதும் சிலர் ஒரு சட்டத்தைப்போட்டு உடனே விதிகளை மாற்றிவிடலம் என நினக்கின்றனர். சமூகம் என்ற கட்டிடத்தில்  இருக்கும் ஒரு  தூண் போகவர தடையாய் இருக்கிறது என அறிய நேர்ந்தால் உடனே அந்தத்தூணை உடைத்தெறிதல் ஒரு தீர்வென நினக்கிறார்கள்.   ஆய்வு செய்யாமல் அதை நிகழ்த்தும்போது அதனால் சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கிறது.  கட்டிடம் பாதிக்காமல் தூணை அகற்ற முடியுமா அது இயலாவிட்டால் தூணை சற்று  நகர்த்திவைக்க முடியுமா, அதுவும் இயலாவிட்டால் தூணை அப்படியே விட்டுவிட்டு வேறு வழியில் செல்ல முடியுமா என ஆராயவேண்டியது சமூகத்தை முன்னெடுத்து செல்பவர்கள் கடமை. இங்கு சூதப் பெண் அரியணையில் அமரக்கூடாது என்ற தூண் தந்தை சொல் காப்பது மற்றும் பிறப்பினால் ஒருவர் தாழ்வல்ல என்று அறத்தின் வழியாக செல்லும் கர்ணனுக்கு    தடையாக இருக்கிறது. துரியோதனன் அத்தூணை உடைத்துவிடலாம் என்கிறான்.  ஆனால் பீஷ்மர் அத்தூணின் அவசியத்தை உணர்த்துகிறார். அதற்கு முன் சூதன்மகள் என்பதால் அவள் இகழ்ச்சிக்கு உரியவள் இல்லை என்ற பேரறத்தை நிலைநாட்டுகிறார்.


  “நீ அறிக, இப்புவியில் மானுடர் அனைவரும் நிகரே.
  “துரியோதனா, இங்கு கோட்டைக் காவல்மாடத்தில் வேலேந்தி காவல் நிற்பவனும் அரியணை அமர்ந்து பொற்கோப்பையில் யவனமது அருந்தும் நீயும் இணையான ஷத்ரியர்கள் என்றுணர்க! இந்நகரின் அழுக்குகளை சுமந்தகற்றும் இழிசினனோ இங்கு தருப்பை ஏந்தி பொற்குடத்தில் கங்கை நீருடன் நிற்கும் வேதியரோ மானுடர் என்ற வகையில் நிகரானவர்களே.


அதே நேரத்தில் சமூகத்தில் அனைவரும் நிகர் எனக் கொள்வது எப்படி சாத்தியமாகாது என்பதை விளக்குகிறார்.


முற்றிலும் நிகரானவர்கள் இணைந்து எந்த அமைப்பையும் உருவாக்க இயலாது. ஆகவேதான் ஒருவருக்கு மேல் பிறிதொருவர் என்று ஒர் இருபுற ஒப்புதலுக்கு மானுடர் வருகிறார்கள். அது இப்புவியில் அவர்கள் ஆடும் நாடகம் மட்டுமே. எந்த நாடகத்துக்கும் அதில் நடிப்பவர்களின் உளஒப்புதலே நெறிகளென அமைந்துள்ளது”   

இந்தக் காலத்திலும் நாம் அனைவரையும் நிகரெனக்கொள்வது அறமாக இருந்தாலும் இந்த ஏற்றத்தாழ்வான அடுக்குகள் இருக்கின்றன. ஒரு காவல் உயர் ஆய்வாளரும், கடைநிலை காவலரும் எப்படி வெவ்வேறு படிநிலைகளில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய சமூகத்தின் அனைத்து பணிகளிலும் இந்தப் படிநிலைகள் அமைக்கப்பட்டு அவை பின்பற்றப்படுவது வெகு கவனமாக கண்காணிக்கப்படுகிறது. ஒருவனின் வேலையை இன்னொருவர் மேற்பார்வையிடமுடியும் என்பதே ஒரு எற்றத்தாழ்வு கொண்ட அடுக்குமுறைதான். இது இல்லாத இன்றைய சமூக அங்கம் எதுவுமே இல்லை. இதை அனைவரும் உணர்ந்தே நாம் சமூகத்தின் வேவேறு பணிகளில் வெவ்வேறு படிநிலைகளில் பணிபுரிந்து வருகிறோம். குடும்பத்தில் கூட பல்வேறு படிநிலைகள் உள்ளன, ஒரு நாடோடி அல்லது  ஒரு துறவி(எந்த மடத்தையும் சாராத) மட்டுமே தான் இந்த படி நிலைகளில் இல்லை எனச்
சொல்ல முடியும்.
  

அவன் அந்த வேடத்தையும் இவர் இந்த வேடத்தையும் ஏற்று இங்கு இந்த மாபெரும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளோம். அந்நாடகமே உன்னை அரசனாக்கியிருக்கிறது. என்னைப் பிதாமகனாக்கியுள்ளது. அதை கலைப்போமென்றால் அதன் பின் நீயும் நானும் மேலே வானும் கீழே மண்ணுமற்ற யோகியாக வேண்டும், அல்லது மறுவேளை உணவை எதிர்பாராத நாடோடியாக வேண்டும். அப்படி அல்லவென்றால் இதன் நெறிகளை ஏற்றேயாக வேண்டும்.”


பின்னர்  சூதப் பெண் ஏன் அரசியாவதை தடுக்கும் விதி சமூகத்தில் இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறது அது அன்றைய சமூகத்திற்கு முக்கியமாக இருக்கிறது என்பதை விளக்குகிறார்.
 

“மன்னன் குருதியால் தேர்வானவனாக இருக்கவேண்டுமென முன்னோர் வகுத்தனர். ஏனென்றால் அது ஒன்றே தெய்வங்கள் வகுத்தது. பிற அனைத்தும் மானுடர் வகுத்தவை” என்றார்.“அவை அறிக! தெய்வத்தால் தேர்வானவன் அரசன் எனில் மட்டுமே குடிகள் அவனை கேள்விக்கு அப்பாற்பட்டவன் என ஏற்பார்கள். மைந்தா, கேள்விக்கு அப்பாற்பட்ட தலைமையே போரிடும் குலங்களை ஒருங்கமைக்கும். பேரரசுகளை தொகுக்கும். ஓர் அரசில் தானும் அரசனே என அரசன் அன்றி ஒரே ஒருவன் நினைப்பான் என்றால்கூட அவ்வரசு நிலைகொள்ளாததே. ஆகவேதான் சூத்திரனோ வைசியனோ அரசனாகக்கூடாதென்றனர் முன்னோர். அறிக, நான்குவேதமும் பிரம்மஞானமும் கற்ற பிராமணனும் அரசனாகக் கூடாது. அரசாள விழையும் வைசியனும் சூத்திரனும் கொல்லப்படவேண்டும். வைதிகன் ஊர்விலக்கும் குலமறுப்பும் செய்யப்பட்டாகவேண்டும்…”
 

  அடுத்து துரியோதனன் இதைப்போன்ற சமூகவிதி இல்லையென்றால் அவன்  அரசனாக இருந்திருக்க முடியாது என்ற உண்மையை  கூறுகிறார். ஆக சமூக அரவணைப்பில் சமூக விதியின் நலன்களை பெற்று வாழும்  ஒருவன் அவனுக்கு அவசியமில்லாத விதியை தூக்கி வீசமுடியுமென்ற கேள்வி நியாயமானது தானே?
     

 “குலநெறியே அரசனை உருவாக்குகிறது. அவன் மூத்த மைந்தனை அரசனாக்குகிறது. என்றும் அதை ஒட்டி ஒழுகியதனால்தான் நான் அரியணைப்போட்டியில் உன் தந்தையுடன் நின்றேன். உன்னை ஏற்றேன். நானறிவேன், என்குடியில் பிறந்த பேரறத்தான் தருமனே. அவனையே இங்குள்ள புழுவும் புள்ளும் அரசனாக விழையும். ஆனால் இது அஸ்தினபுரியில் எழும் வினா மட்டுமல்ல என்று எண்ணித் தெளிந்தேன். குலநெறியை மீறி நான் தருமனை ஆதரித்திருந்தேன் என்றால் பிதாமகனாக தவறான முன்செல்கையை காட்டியவனாக இருப்பேன். அது ஒன்றே என் உள்விழிமுன் தெரிந்தது.”


     சமூக விதிகளை  மாற்ற  போதுமான நோக்கம்இருக்க வேண்டும்  அதை செயல்படுத்த வலுவான அமைப்புகள் வேண்டும், பெரும்பாண்மை மக்கள் அதை ஏற்றுக்கொள்வதற்கான மனமாற்றம் நிகழவேண்டும். இவையில்லாமல் மக்கள் மீது திணிக்கப்படும் மாற்றங்கள் பெருங்குழப்பத்திற்கு வித்திடலாம். பீஷ்மர் கூறும் இது கீதையில் பின்னர் வரப்போகும் வரியல்லவா?
  

  “மைந்தா, இதுவே என் இறுதிச்சொல். குலநெறியின் கட்டு அவிழுமெனில் பாரதவர்ஷம் சிதறியழியும். இன்றே இது வேதிப்பொருள் கலந்த குடுவைபோல கொதித்துக்கொண்டிருக்கிறது. இது எப்படி முடியும் என என் உள்ளம் துயிலற்று ஏங்குகிறது. பெரும் குலப்பூசலின் விளிம்பில் நின்றிருக்கிறது இப்பெருநிலம். போரிடத் தெரியும் என்பதனாலேயே நான் போரை அறிவேன். போர் எழுந்தால் நெறிகள் அழியும். பெண்டிர் இல்லம் இழப்பர். வயல்கள் தரிசாகும். நீர்நிலைகள் அழுக்காகும். பசியொன்றே போரின் விளைவு என்று அறிக!” அவரது மூச்சு எழுந்து ஒலித்தது. “என் வாழ்நாளெல்லாம் நான் இயற்றும் தவம் ஒன்றே, போரை தவிர்த்தல்.”
  
 கர்ணனின் இந்தச் சிக்கலில் பானுமதி சொல்லும் தீர்வு இரண்டு தரப்புக்கும் இடையிலானது. இப்படி ஒரு மாற்றத்திற்குபின், அதற்கு  சமூகத்தை  அங்கீகரிக்கவைத்தபிறகு,   அடுத்த கட்ட மாற்றத்தை நோக்கி சமூகத்தை அழைத்துச் செல்ல முடியும்.
      
இளையவர்கள்  சமூகத்தை முன்னெடுத்து செல்ல முன்னே விரைபவர்கள்.  சமூகம் இன்னும் வேகமாக வரவில்லையே என்ற ஆதங்கமும் அதற்கான சமூகத்தின் மீது விமர்சனமும் இளையவர்களிடம் இருக்கும். மாற்றம் வேண்டும் என்று அறைகூவி சமூகத்தை அவர்கள் அழைக்கிறார்கள்.  முதியவர்கள் சமூகத்தின் பின்னே நடப்பவர்கள் அதனால் சமூகத்தின் குறைகளை பலகீனங்களை இயலாமைகளை அறிந்தவர்கள். ஆகவே சமூகத்தின் நலனுக்காக இருக்கும் விதிகளை மாற்ற மிகவும் தயங்குபவர்கள். இந்த இருதரப்பாரின்  இடையில் சமரசமாக காணும் மாற்றங்கள் மட்டுமே சமூகத்தை பாதுகாப்பாக குழப்பங்களுக்கு ஆளாக்காமல் முன்னடத்தி செல்லும். இதை இன்றைய சில நாடுகள்எப்படி முன்னேறி உள்ளன எப்படி சில நாடுகள் பெருங்குழப்பதில் மூழ்கி தத்தளித்தன என்பதைக் கண்டு அறிந்துகொள்ளலாம்.


தண்டபாணி துரைவேல்