Sunday, November 5, 2017

அஸ்வத்தாமனின் அகமறியும் அச்சம் (எழுதழல் - 37)



    நமக்கு வந்த  ஒரு நோயைப் போகுவதற்காக மருந்து உட்கொள்ளும்போது சிலசமயம் அந்த நோயைவிட அதிக உபாதைகளைத் தரும் பக்கவிளைவுகளை அது தருவதுண்டு.  அலோபதி மருந்து ஒவ்வொன்றின் பயன்பாட்டைத் தரும் புத்தகத்தில்  அதன் பக்கவிளைவுகள் அதை தீர்ப்பதற்கான மாற்று மருந்துகளின் பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.  இந்த மருந்து உட்கொள்வதில் தான் என்பதில்லை.  நாம் ஒன்று நிகழ விரும்பி ஒரு செயலை செய்கையில் நாம் எதிர்பார்ப்பது ஒன்று நடக்கலாம்  அல்லது நடக்காமல் போகலாம்.  அதே நேரத்தில் அச்செயல் அதைத் தவிர மற்ற பல விளைவுகளையும் தந்திருக்கும்சிலவற்றை நாம் கவனித்திருப்போம் சில நம் கவனத்தில் வராமல் போய்விட்டிருக்கும்.   அவற்றில் சில மற்றவர்களுக்கு  சில நன்மைகள் தருவதாக இருக்கலாம்சில கெடுதல்கள் தருவனனாக இருக்கலாம்.  எடுத்துக்காட்டாக ஒருவன் தான் செல்வம் சேர்க்க  தொழிற்சாலையை உருவாக்கி நடத்தலாம்அவன் அதில் அதிக லாபமீட்டி செல்வந்தனாக ஆகலாம்அல்லது  தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு செல்வத்தை இழக்க நேரிடலாம்இவை அந்த தொழில் முனைவோன்  எதிர்பார்க்கும் விளைவுகள்.  அதே நேரத்தில் அத் தொழில்  நேரிடையாக அல்லது மறைமுகமாக பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும்.  அதோடுமட்டுமல்லாமல்  அந்த இடத்தின் சுற்றுச் சூழலை பாதித்து பல தாவரங்களை  விலங்குகளை அழித்திருக்கும்சில சமயம் நாம் எதிர்நோக்கா விளைவுகளின் பாதிப்பு மிக அதிகமாகிவிடுவதுண்டு.  அது நமக்கோ சமூகத்திற்கோ  தீங்கு விளைவிப்பதாக ஆகிவிடுவதுண்டு.  எனவே ஒரு  செயல் செய்யத் திட்டமிடுகையில் இந்த பக்க விளைவுகளின் பாதிப்பை நாம் சரியாக கணித்து முடிவுசெய்தல் மிக முக்கியம்.   ஆனால் பலர் பக்க விளைவுகளின் பாதிப்புகளைப்பற்றி எவ்வித உணர்வும் இல்லாமல் ஒரு பெருஞ் செயலில் இறங்குகிறார்கள்.  இதற்கு அரசியல் தலைவர்கள் ஒர் போராட்டத்தை நிகழ்த்துகையில்  ஏற்படும் கலவரங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்

                       
           ஒரு செயலைச் செய்கையில் உண்மையிலேயே அது உருவாக்கப்போகும் விளைவுகள் அனைத்தையும் அறிந்திருக்கிறோமா    என்பது ஐயமே.    சிலர் அச்சத்தின் காரணமாக அதைப்பற்றி சிந்திப்பதை தவிர்க்கின்றனர்.   மேலும் அவர்கள்  கண்கள் அவற்றை காணவியலாதவாறு அவர்களுடைய பெரிதான நோக்கம்விருப்பு  வெறுப்புகள்கொண்டிருக்கும் வஞ்சம்பீடித்திருக்கும் பெருஞ்சினம் என ஏதாவது ஒன்று மறைக்கிறது.  இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி சிந்திப்பவனாலேயே விளைவுகளின் உண்மையான தாக்கங்களை யூகிக்கமுடியும்.  காந்தி போன்ற சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை உள்ள தலைவர்கள் மட்டுமே   இப்படி ஒரு செயல் செய்வதற்கு முன்பாக அது விளைவிக்கப்போகும் பாதிப்புகள் அனைத்தையும் சிந்தித்து முடிவெடுக்கிறார்கள்அப்படி சிந்தித்து செயல்படத்  தொடங்கிய பிறகும்  அவர்கள் எதிர்பார்க்காத பாதிப்புகள் ஏற்படுமானல் பலர் பழித்தாலும் அச் செயலை நிறுத்தி உலகின் முன் நின்று மன்னிபு கேட்டுக்கொள்கிறார்கள்ஆனால் தான் இச்செயலைத் தொடங்கிவிட்டேன் அதை எப்படியாவது முடித்து பலனடையாமல் விடமாட்டேன்அதன் பக்க விளைவுகளைப்பற்றி கவலையில்லை என ஒரு தலைவன் தன் அகங்காரத்தால் செயல்படும்போது அதன் காரணமாக பல்லாயிரம் மக்களின் வாழ்வு  அழிந்து போய்விடுவதை  கண்டிருக்கிறோம்.  அந்தக் காலத் தில் இருந்து இந்தக் காலம்வரை அதற்கான எடுத்துக்காட்டுக்கள் வரலாறெங்கும் விரவிகிடப்பதைப் பார்க்கிறோம்

         
          
துரியோதனனும் தருமனும் போரின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் சிந்திப்பதெல்லாம் வெற்றியை எப்படி பெறுவது தோல்வியை எப்படி தடுப்பது என்பதைபற்றிதான்.  கௌரவர் பாண்டவர்களுடைய அனைத்துப் பிள்ளைகளையும் தன் பிள்ளைபோல் நேசிக்கும்    துரியோதனனக்கு  இப்போருக்காக தன் பிள்ளைகள் அனைவரும் பலியாகிவிடும் சாத்தியம் இருப்பதை காணத் தவறிவிடுகிறது.  அறிவுக்கு அது தெரியாமல் இருக்காதுஆனல் அதை உள்ளத்தில்  உணர்வதில்லை.      உண்மையில் எனக்குத் தெரியும் என்று நாம் சொல்லும்  ஒன்றை நாம் முழுமையாகத் தெரிந்திருப்பதில்லை.  மேலுக்கு போர் என்று வந்தால் இறப்புகளைத் தவிர்க்கமுடியாது என்று  ஒருவர் சொல்வார்ஆனால் கண் எதிரே இறப்பு நேரும்ப்போது பிள்ளகள் எல்லாம்  ஒருவர் பின் ஒருவராக மாண்டு விழும்போது அது அளிக்கும் துயர் மிகப் பெரிதாக இருக்கும்அந்த இழப்புகளை  எவ்வித வெற்றியும் ஈடு செய்யாது

அல்லது ஒருவேளை தோல்வியடைந்தால் அந்தத்தோல்விகூட இதைவிட துயர் தராதுஇதை துரியோதனைன் உள்ளிருக்கும் தந்தையுள்ளம் காணாது போய்விடுகிறது.  நாடு,  புகழ்,  என  அனைத்தையும் இழந்து நிற்கும் பாண்டவர்கள் குந்திதிரௌபதிகூட இவற்றையெல்லாம் தன் உள்ளத்தில் உணர்கிறார்களா எனத் தெரியவில்லை.  அவர்கள் தன் கண்களை விற்று அப்படி வாங்கப்போகும் சித்திரம் தான் என்ன?  இந்த மிகப்பெரும் விலைக்கு அது தகுதியானதா   என அஸ்வத்தாமன் உள்ளம் சிந்திக்கிறது.    அவன்  இந்த பெரும்போரில் தன்னை வெளியில் நிறுத்தி க்கொண்டு அதன் விளைவுகளை கணிக்கிறான்.  அவனால் இதை தெளிவாக் காணமுடிகிறது.  நடக்கப்போவது ஒரு கூட்டுத் தற்கொலை.  கௌரவர்கள் பாண்டவர்கள் விடும் பாணங்கள் அவர்களையே தாக்கப்போகிறதுஅவர்களுடைய கதைகளால் நொறுங்கப்போவது அவர்களுடைய சொந்த எலும்புகள்.  இந்தப் போரின் முடிவில் மிஞ்சப் போவது அக்குடும்பத்தின் சில  அங்கங்கள்  மட்டுமே.   அது  அது அக்குடும்பத்தின் எந்த பாகமாக இருந்தாலும்  குற்றுயிராக எஞ்சிய  நாட்களை வலிகளோடும் வேதனைகளோடும் வாழப்போகிறது.  என்பதை அஸ்வத்தாமன் தன் உள்ளத்தின் கண்கொண்டு பார்க்கிறான்அதில் தன் பங்கும் இருக்கபோவதும் அவனுக்கு தெரிகிறது.  அந்த வலியும் வேதனையும் தன்னையும் சாரப்போவதை யூகித்தறிந்து அதன் அச்சம் அவனுள் நிறைகிறது.  அஸ்வத்தாமன் இனி செய்யப்போகும் செயல்கள் அவன் மீறி நடப்பவையாக ஆகப்போவதை அவன் உணர்கிறான்.  இந்தச் சூழலில் அவன் எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு நல்லிறப்பை.

சென்ற பதின்மூன்றாண்டுகளாக நான் தெய்வங்களிடம் வேண்டிக்கொள்வது ஒன்றேஒரு நல்லிறப்புஎன்னைச் சூழ்ந்து குடிகள் விழிநீர் சிந்த குலத்தோர் நீரளித்து வணங்க எரியேறுதல்கங்கையில் எனக்கான நீர்க்கடன்களை நான் தூக்கி வளர்த்த மைந்தர்கள் அளிக்க மூச்சுலகில் அமைந்து மூதாதையென குனிந்து புவியைப் பார்க்க ஒரு வாய்ப்புபிறிதொன்றுமில்லைபிறந்ததும் வாழ்ந்ததும் எந்நிறைவையும் அளிக்கவில்லைஇறப்பு அந்நிறைவை அளிக்குமென்றால் அது ஒன்றே மீட்புஅருளவேண்டும் தெய்வங்கள்.”

   போர்க்களம் என்பது உண்மையாகப் பார்த்தால் ஒரு பெருங்கொலைக்கூடம்.  அங்கே  அறம் கருணை போன்ற தெய்வங்கள் எல்லாம் ஆற்றல் இழந்து நிற்கும்.  அங்கே மனிதர்களே ஆயுதங்களாக்களாக்கப்பட்டு  மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள்.   ஆயுதமென ஆகும் மனிதனுக்கு  நண்பன்மைந்தன்,  தந்தை,  சீடன்குரு என்ற உறவுகள் பொருளிழந்துபோகின்றனஎதிரி  என்றால் எவராயினும் கொல் என்பதே வேதமென ஒலிக்கும் இடம்.  அந்தப் போர்க்களத்தில்  அஸ்வத்தாமன் கொள்ளும் அச்சம் அவன் கொல்லப்பட நேரிடும் என்பதற்காக அல்லதான் ஒரு கொலை இயந்திரமென ஆகி தன் மனிதத்துவத்தை இழந்துவிடுவோம் என்பதற்காக.  அது அவன் உள்ளத்தில் பெருந் துயரத்தை ஏற்படுத்துகிறது.  போரைத் தவிர்க்க அவன் பாண்டவர்களிடம் மட்டுமே கேட்டுக்கொள்ளமுடியும் எனக் கருதுகிறான்

விழிகள் நீர் கொண்டு மின்ன அவன் கைகளை இறுகப்பற்றி உலுக்கியபடி அஸ்வத்தாமன் சொன்னான் “சென்று சொல் உன் தந்தையிடம்நான் சொன்னேன் என்று சொல்அவர் கைகளைப்பற்றி மன்றாடினேன் என்றுஏன்அவர் காலடி பணிந்து கேட்டேன் என்றே சொல்அவர் எனது ஆடிப்பாவைஆகவே உன் தந்தையென நின்று சொல்லவும் எனக்கு உரிமையிருக்கிறதுஇப்போரைத் தவிர்ப்பதே உன் கடன் என ஆகட்டும்மைந்தாஇந்தப் போர் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்நிலமில்லாது கான்புகுந்து முனிவராக பாண்டவர்கள் வாழ்ந்து மறைவது என்றாலும்கூட இப்போர் தவிர்க்கப்படுவது நன்றுமைந்தர் வாளேந்தி பொருள்பெற்று வாழும் எளிய ஷத்ரியர்களென்றாவார்களென்றாலும் போர் தவிர்த்தல் நன்று.”

இந்த உண்மை நம் மனதையும் அறைகிறது.   பின்னர்  தான் எடுக்கப்போகும் நிலைக்கான  காரணத்தை அவன் சொல்கையில் ஆம் என்றே  நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.  
பின்னர் நீள்மூச்சுடன் தளர்ந்து “எனக்குத் தெரிந்த வழி ஒன்றேஅஸ்தினபுரியின் அரசர் நிலமன்றி பிறிதொன்று அறியாதவர்கொண்டது விடாத முதலைஅவரிடம் பேசிப் பயனில்லைஅவரை வெல்லமுடியாதவராக ஆக்கி பாண்டவர்களை தயங்கிப் பின்னடையச் செய்வது ஒன்றே ஆகும்வழிஆகவே வில்லுடன் அவருடன் நிற்கிறேன்அவருக்காக அனைத்தையும் ஆற்றுகிறேன்” என்றபின் முகம் திருப்பி விடைச்சொல்லெதுவும் உரைக்காது நடந்து அகன்றான்.  சுருதகீர்த்தி அவன் செல்வதை நோக்கியபடி நின்றான்பின்புறம் மட்டுமேயான உடலிலேயே உள்ளத்தின் கொந்தளிப்பு தெரிவதை வியப்புடன் நோக்கினான்ஒவ்வொரு காலடியும் அக்கொந்தளிப்பை காட்டியதுஉடன் சென்ற நிழல் அக்கொந்தளிப்பை கொண்டிருந்ததுஇடைநாழிக்கப்பால் அஸ்வத்தாமன் உடல் மறைந்ததுஅவன் காலடியோசை குறைந்து அமையும் தாளமென ஓய்ந்தத.

அஸ்வத்தாமன் சிரஞ்சீவியென வாழ்ந்துகொண்டிருக்கிறான்,   ஆனால் ஒரு நடைபிணம் போல் அவன் இருப்பு உள்ளது  என்று சொல்வது நம் மரபில் இருக்கிறது.  வேறு யாரையும்விட  மகாபாரதப் போரில் இழி சொல்பெற்றவனாக வியாச பாரதத்தில் அறிகிறோம்.    ஆனால் இன்று வெண்முரசு அவனை அந்நிலையிலிருந்து  சற்று மேம்படுத்துகிறது.  இனி யாராலும் அவனை வெறுத்தொதுக்க முடியாதபடி அவன் கதாப்பாத்திரத்திற்கு  புதிய வடிவம் கிடைக்கிறது.  மாளா மனத்துயருடன் அலைவதாகக் கருதப்படும் சிரஞ்சீவியான அஸ்வத்தாமன் சற்றேனும் இப்போது ஆறுதலடைந்திருப்பார் என நினைக்கிறேன்


தண்டபாணி துரைவேல்