Saturday, November 4, 2017

ஆழமற்ற நதி:


வெண்முரசில் அவை முறைகளில் வைப்புகள் எப்போதும் முக்கியமானவை. கிருஷ்ணரை வரவேற்க வந்த அரசியர் எண்மரின் வரிசையிலேயே துவாரகையின் அரசியல் சிக்கல்கள் வெளிப்படுகின்றன. முதலில் யாதவ பாமா, பின்பு ஷத்ரிய ருக்மணி, பின்பு கோசலையான நக்னஜித்தி, பால்ஹிகையான லக்‌ஷ்மணை, கைகேயியான பத்ரை, அவந்திகையான மித்ரவிந்தை. இவர்களுக்குப் பிறகே மச்சகுல காளிந்தியும், கான்மகளான ஜாம்பவதியும் வருகின்றனர். நகரும், குலமும், கொடிவழிகளும் அழியத் தேவையான அனைத்தையும் இவர்களும், பிற யாதவ மூத்தோர்களும் செய்து விட்ட பிறகு, அதன் பழியை சம்பந்தமேயில்லாமல், புலனறியும் எவ்வறிவும் தேவையற்ற, தன்னுள் மூழ்கி, எவரையும் அறியாத, எவராலும் அறியவொண்ணாத ஆழத்தில், பிரேமையுடன் கூடிய, பிரேமையின் பொருட்டே எழும் வேணுகானத்தில் மட்டுமே வாழும் முரளியின் மீது சுமத்திவிடுகின்றனர்... ஆனால் இவர்கள் யாருக்கும் கருணை காட்டாத பிரம்மம், அவனுக்கு மட்டுமே மனமுவந்து குழலூதுகிறது. வெண்முரசில் சில தருணங்கள் என்றென்றைக்கும் நினைவில் நிற்பவையாக இருக்கும். அத்தகைய ஒரு தருணங்களில் ஒன்று இது. 

முரளி ஆழமற்ற நதியின் கதிரை நினைவூட்டுகிறான். ஒரு வகையில் ஆழமற்ற நதியும், அயினி புளிக்கறியும் முரளி மற்றும் ராதையின் நவீன வடிவுகள் போலும்... நீலத்தின் இறுதியில் தளர்ந்து போன கிருஷ்ணர் குழலூதும் காட்சி நினைவுக்கு வந்து சென்றது.

அருணாச்சலம் மகராஜன்