Tuesday, June 5, 2018

மைந்தர்கள்




ஜெ

சாதாரணமாகச் சொல்லிச்செல்லும் கதையில் அமையும் நுட்பங்களை நாமே கண்டுபிடிக்கும்போது ஏற்படும் இன்பம் தனிதான். சாத்யகி அவர் மகன்களை திட்டிக்கொண்டே இருக்கிறார். அவர்களுக்கு முறைமைதெரியவில்லை, முகமன் சொல்லத்தெரியவில்லை என்றெல்லாம் சொல்கிறார். கற்பித்துக்கொண்டே இருக்கிறார். 

ஆனால் அவன் முதன்முதலாகப் பாஞாலியை கண்டதும் தலைவணங்கி “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசியை வணங்குகிறேன். எட்டு திருமகள்கள் ஓருடலில் எழுந்தருளிய தோற்றம் தாங்கள் என்று சூதர்கள் பாடிக்கேட்டிருக்கிறேன். பிழையல்ல என்று இப்போது அறிந்தேன்”  என்று அழகாகச் சொல்கிறான். 

அவனைபோல அப்படி அழகாக சாத்யகி சொன்னதே இல்லை. சாத்யகி எப்போதும் வழக்கமான சொற்றொடர்களைத்தான் சொல்கிறான். மகன் தன்னைவிட மேல் என்று சாத்யகிக்குத்தெரியுமா? உள்ளூரத்தெரிந்திருக்கும். இருந்தாலும் தந்தை என்பதனால் அந்தப்பதற்றம். அந்த இடம் அழகாக இருந்தது.
ஸ்ரீனிவாசன்