Friday, April 10, 2015

துரியோதனன் காதல்

அன்புள்ள ஜெ,

இப்படிப் பட்ட இடங்களெல்லாம் வருமா என வியக்க வைக்கிறது வெண்முகில் நகரின் பூரிசிரவஸ் வரும் பகுதிகள். காதல் என்ற வஸ்துவைப் பொருத்தவரை என்றுமே விளங்க இயலாத ஒன்று, நல்லவன் என்று நாம் கருதும் ஒருவன் அனைத்தையும் இழந்து நிற்பதும், கர்வம் கொண்ட, தன்னையன்றி எதையும் எண்ணாத ஒருவன் என்று நம்பப்படுபவன் தான் விரும்பியதை அடைவதும். அதன் சமன்பாடுகள் பிடி கிட்டாததால் தான் அது இன்றும் வசீகரிக்கிறது.

இன்று துரியோதனன் பானுமதிக்காகத் தன் திட்டத்தையே மாற்றுகிறான். இனி அவள் தான் தன் பட்டத்தரசி என்று முடிவெடுக்கிறான். அம்முடிவால் அவன் இழக்க நேரும் அரசியல் லாபங்களைப் பற்றியெல்லாம் அவன் கவலைப் படவில்லை. கர்ணன் கூட என்னால் இளவரசரை மாற்ற இயலவில்லை என்றே அங்கலாய்த்துக் கொள்கிறான். பூரிசிரவசிடம் பானுமதியைக் கவர்வதால் வரும் அரசியல் கணக்குகளைப் பற்றித் தான் முதலில் சொல்கிறான் என்றாலும் அது ஓர் வலுவற்ற கணக்காகவே தோன்றுகிறது. கர்ணனும் சரி, பூரிசிரவசும் சரி அவ்வெண்ணத்தையே பிரதிபலிக்கிறார்கள். உண்மையில் துரியோதனனுக்கு அத்தகைய அரசியல் கணக்குகள் எல்லாம் முக்கியமல்ல. அவை பாதகமாக இருந்தால் கூட அவன் பானுமதியைக் கவரத் தான் சென்றிருப்பான்.

இது தான் துரியோதனனுக்கும், பூரிசிரவசுக்கும் உள்ள வித்தியாசம். முடிவெடுக்கும் தெளிவு. சரியோ தவறோ தன் முடிவில் உறுதியாய் இருக்கும் தெளிவு. பூரிசிரவஸ் இளைஞன். எனவே முடிவெடுக்க தடுமாறிக் கொண்டேயிருக்கிறான். காசியை விட சேதி நாட்டின் உறவே அவனுக்கு பயன் தரும் என்ற போதிலும், துரியன் பானுமதியைத் தெரிவு செய்கிறான். ஆனால் பூரிசிரவஸ் இந்த அரசியல் கணக்குகளால் குழம்பி விஜயையை இழக்கிறான். அன்று மிகத் துணிவாக, விஜயை தான் என் அரசி என்று அவன் சொல்லியிருக்கலாம். 

உண்மையில் பூரிசிரவஸ் அரசனாகவே போவதில்லை, தற்போது அவன் நாடு இருக்கும் நிலையில். அவன் மூன்றாவது மகன் தானே. அப்படியிருக்கும் போது யார் பட்டத்தரசி ஆனால் என்ன? துரியன் விஷயம் அப்படி அல்ல, அவன் அரசன். அவன் யாரை பட்டத்தரசியாக அறிவிக்கிறான் என்பது அரசியல் சமன்பாடுகளை மாற்றவல்லது. அப்படியிருந்தும் அவன் தெளிவாக "எனக்கு சேதி நாட்டு இளவரசிகள் தேவையில்லை" என்று முடிவெடுக்கிறான்.

பூரிசிரவசிடம் இருக்கும் அந்த சிறு தயக்கம் தான் அவனைத் தலைவனாவதிலிருந்தும், அவன் விரும்பிய துணையை அடைவதிலிருந்தும் தடுக்கிறது. இந்த தயக்கம் தான் அவனை தேவிகையிடம் "ஆம், உன்னை விரும்புகிறேன்" என்று தெளிவாகச் சொல்லவும் தடையாக இருந்தது. இந்த தயக்கம் எதனால்? அவன் எப்போதுமே தன் தமையன் சலனுக்குக் கட்டுப்பட்டவன். அதனாலேயே அவனால் சுயமாக முடிவெடுக்க இயலுவதில்லை. 

இன்னும் ஓர் நுட்பமான காரணம் உள்ளது. அவனால் தன் முடிவுகளுக்கு பொறுப்பேற்கும் தைரியம் கொள்ள இயலுவதில்லை. அந்த தைரியம் இல்லாதவர்கள் முடிவுகளையே எடுப்பதில்லை. பெரும்பாலானோர் செயல்வீரர்களாவது இதனால் தான். அந்த தைரியம் தானே ஷாத்ரம் எனப்படுகிறது. தன் சரிகள் மட்டுமல்ல தவறுகளுக்கும் தைரியமாக பொறுப்பேற்கும் திறனுடையவனே விரும்பியதை அடைய இயலும்.

துரியனுக்கு அந்த தைரியம் உள்ளது. அதனால் தான், "எனக்கு தன் கணையாழியை அனுப்பிய பெண்ணை இன்னொருவன் கொண்டான் என்றால் நான் வாழ்வதில் பொருளில்லை", என்று முடிவினை மிக எளிதாக எடுக்க முடிகிறது. பானுமதியின் ஓலை கிடைத்தவுடன், "இன்னும் அவள் முகத்தைக்கூட நான் பார்க்கவில்லை. ஆனால் அவளையன்றி எவரையும் என் பட்டத்தரசியாக என்னால் ஏற்கமுடியாது" என்று சொல்ல முடிகிறது. ஒருவேளை பானுமதி கிடைக்காமல் போயிருந்தால் தன்னைத் தானே மாய்த்தும் இருப்பான் அவன். ஆம் அவன் வெற்றுச் சொற்கள் சொல்பவனல்லன். 

தன் முடிவில் உறுதியாயிருப்பவன் தன்னைச் சூழ்ந்திருப்பவர்கள் இதயத்தையும் மிக எளிதாக அவ்வுறுதியாலேயே தன் முடிவை ஏற்றுக் கொள்ள வைக்கிறான். கர்ணன் கூடாது என்று உறுதியாகத் தடுத்திருந்தால் துரியன் மீறியிருக்க மாட்டான் தான். ஆனால் கர்ணன் அந்த எல்லை வரை செல்லவேயில்லை. சொல்லுவதை சொல்லுவோம் என்ற வகையிலேயே அவன் கருத்தைச் சொல்கிறான். 

வெண்முரசில் பெண்மையை இவ்வளவு தூரம் மதித்தவன் வேறு யாராவது உள்ளார்களா? ஏற்கனவே துரியனின் மானசீக ரசிகனாக இருக்கும் எனக்கு அவனை இன்னும் அதிகமாக விரும்பத் தோன்றுகிறது. உண்மையில் துரியோதனன் வரும் பகுதிகளில் பூரிசிரவஸ் அடையும் அந்த உவகை என்னுள்ளும் தளும்புகிறது. 

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.