Sunday, April 5, 2015

வெண்முரசு மூத்த வாசகியின் கடிதம்







ஜெயமோகனே உனக்கு ஆண்டவன் ஆரோகியத்துடன் கூடிய  நீண்ட ஆயுளை ஆசீர்வதிக்கட்டும். இதை எழுதும் என் வயது 77. என்னுடைய 7  8 வயதிலிருந்து புத்தகம் படிக்கும் வழக்கம் உள்ளது. அந்த வயதில் அரையணாவுக்கு அணில் டமாரம் ஜிங்லி என்று கையளவு புத்தகம் கிடைக்கும்.அதை வாங்குவதற்கும் வீட்டில் காசு தரமாட்டார்கள். ஆனால் அந்தவயது தோழிகள் வாங்குவார்கள். அவர்களிடம் எப்படியாவது கெஞ்சி வாங்கி படித்துவிடுவேன். அன்றிலிருந்து கல்கி சாண்டில்யன் பாலகுமாரன் லசுமி அனுத்தமா ஜெயகாந்தன் ஜானகிராமன் சில வங்கமொழி நாவல்கள் இப்படி தமிழில் எழுதும் அத்தனை எழுத்தாளர்களின் நாவல்களையும் படித்திருக்கிறேன்.

என் மகள் மகாபாரதம் படிக்கிறாயா என்றாள். யார் யாரோ எழுதிய எத்தனையோ மகாபாரதம்  படித்தாகிவிட்டது. முதற்பாகம் முதற்கனல் சுமார் ஆயிரம் பக்கம் உள்ளதை வேண்டாம் என்று சொன்னேன். படித்துப்பார் என்றாள். சரி படித்துத்தான் பார்ப்போமே என்று படிக்க ஆரம்பித்தேன். படிக்கிறேன் படிக்கிறேன் படித்துக்கொண்டே இருக்கிறேன். சுமார் ஒன்றரை மாதத்தில் மூன்றுபாகங்களை படித்து முடித்து நாளை வண்ணக்கடல் ஆரம்பிக்கப்போகிறேன்.

புத்தகத்தின் அட்டையில் மகாபாரதம் நாவல் வடிவில் என்று இருக்கிறது. இதில் எது கற்பனை எது வியாசபாரதம்? உதாரணத்திற்கு குந்தி சூரியதேவனுக்கு உரிய மந்திரத்தைக் கூறினாள். உடனே சூரியதேவன் அவள் முன் வந்து “நீ அழைத்ததனால் வந்துள்ளேன் என் அம்சமாக உன் வயிற்றில் குழந்தை உண்டாகும், குழந்தை பிறந்ததும் நீ மறுபடியும் கன்னித்தன்மையை அடைவாய்’ என்றாள் அவளுக்கு உடனே அவள் வயிற்றில் குழந்தை உண்டாகி அந்தரங்கத்தோழி உதவியுடன் அதை ஆற்றில்விட்டுவிட்டதாக இதுவரை வாசித்த மகாபாரதக் கதைகளில் வாசித்திருக்கிறேன். ஆனால் அவள் பத்துமாதம் சுமந்து பெற்றதாக மகாபாரதக்கதயில் எழுதியிருக்கிறாய். அது கற்பனையா?

இப்படி எத்தனையோ சம்பவங்கள் உள்ளது .எழுதினால் கடிதம் நீள்கிறது. இதில் கற்பனை எது வியாசபாரதத்தில் உள்ளது எது என்று குழப்பமாக உள்ளது. வியாசபாரதம் ஆயிரக்கணக்கான சம்ஸ்கிருத சுலோகங்களில் யாத்தது. சிலது கற்பனை என்றால் அத்தனையும் உன் மனதில் பூத்து ஆயிரக்கணக்கான சொற்களாக மலர்ந்து பூவாய் ஏட்டில் கொட்டியிருக்கிறது, உன் மனம் எவ்வளவு பாரம் கொண்டிருக்கும். தினமும் வலைத்தளத்தில் வருகிறது என்று மகள் கூறினாள். இன்னும் பத்து வருடம் வருமாமே. அது அத்தனையும்  படிக்க எனக்கு ஆயுள் கிட்டுமா?

நீலமோ ராதையின் தாபத்தை வார்த்தையில் பிழிந்து வைத்திருக்கிறாய். சுமார் ஆயிரம் பக்கத்தையும் சற்றும் தொய்வில்லாமல் அடுத்து என்ன அடுத்து என்ன என்று படிக்க மனம் ஆவல் கொண்டது. இரவில் 9 மணிக்கு படிக்க ஆரம்பித்தால் ஒரு அரைமணிநேரம் படிக்கலாம் என்று நினைத்தால் புத்தகத்தை மூடமுடியவில்லை. ஒருநாள் இரவு 11 மணி ஆகிவிட்டது. கடிதம் நீள்கிறது.

சென்னைவந்தால் சந்திக்க விரும்புகிறேன். இது விமர்சனம் இல்லை. விமர்சனம் செய்யவே முடியாது.ஐந்தாவது பாகமும் வந்துவிட்டது என்று என் மகள் கூறினாள். அதையும் நான் வண்ணக்கடல் படித்து முடிப்பதற்குள் வாங்கச்சொல்லியிருக்கிறேன். வண்ணக்கடல் படித்துவிட்டு மீண்டும் எழுதுகிறேன். இது விமர்சனம் அல்ல. இதை விமர்சனம் செய்யமுடியாது.  என்ன எழுதுவது எப்படிப்பாராட்டுவது என்று தெரியவில்லை. இன்னும் பத்து வருடம் எழுதுவதற்கும் அதற்கும் மேலாக இன்னும் எழுதுவதற்கும்  ஆண்டவன் ஆரோக்யத்துடன் கூடிய நீண்ட ஆயுளை உன் குடும்பத்தினர்  அனைவருக்கும் அருளட்டும்

இப்படிக்கு

ஆர்.ஜெயலட்சுமி


வணக்கத்திற்குரிய ஜெயலட்சுமி அவர்களுக்கு,

உங்கள் கடிதம் மிகுந்த மனநிறைவை அளித்தது. வெண்முரசு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை.
எல்லாதரப்பினராலும் தங்களுக்குரிய வகையில் வாசிக்கப்படவேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது.

வியாசமகாபாரதம் பற்றிய தங்கள் கேள்விகளுக்கு சுருக்கமாகப் பதிலளிக்கிறேன். வியாசமகாபாரதம் என்று நாம் இன்று அடைந்திருப்பதே பலமுறை எழுதி விரிவாக்கம் செய்யப்பட்டதுதான். வியாசர் ஜய என்ற பேரில் எழுதிய காவியத்தை வியாசரின் மாணவர்கள் பலமடங்கு விரிவாக்கி எழுதினார்கள். பிறகும் பல விஷயங்கள் சேர்க்கப்பட்டன

பின்னர் காளிதாசன் உட்பட பல படைப்பாளிகள் காலந்தோறும் இதை மறுபடி சொல்லியிருக்கிறார்கள். கடைசியாக பாரதி பாஞ்சாலி சபதம் எழுதியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இபப்டி மறுபடி எழுதும் ஒரு நீண்டமரபு நமக்கு எப்போதும் உண்டு

கூடவே நம்முடைய கதை மரபில் பல கதைகளை நாம் வளர்த்துச் சொல்லிக்கொண்டே செல்கிறோம். மகாபாரதத்திற்கும் நம்முடைய கதாகாலட்சேபம், தெருக்கூத்து கதைகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.

மகாபாரதத்திலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட கதைவடிவங்கள் உள்ளன. கர்ணன் யாரென்று குந்திக்குத் தெரியாது என்று ஆதிபர்வம் முதலியவற்றில் வருகிறது. வனபர்வத்தில் அவளுக்கு கர்ணனை சின்னவயதிலேயே தன் மகன் எனத்தெரியும் என்று வருகிறது

காந்தாரி சதைப்பிண்டத்தைப் பெற்றாள் என்று மகாபாரதம் சொல்கிறது. அதுவே திருதராஷ்டிரர் 10 காந்தார இளவரசிகளை மணந்து நூறு பிள்ளைகளைப் பெற்றார் என்று சொல்கிறது. பத்துபேரின் பெயர்களையும் அளிக்கிறது.

துச்சாதனன் பாஞ்சாலியை ஆடைகவர்ந்த கதை வட இந்தியாவின் மகாபாரதத்தில் இல்லை. குந்தி தன் மக்களை நியோக முறைப்படி பெற்றதாகவும் மகாபாரதமே சொல்கிறது

மகாபாரதத்தை கூர்ந்து வாசித்து அதில் இன்றைய பார்வைக்கும், தத்துவரீதியான அணுகுமுறைக்கும் எது உகந்ததோ அதை எடுத்து விரிவாக்கி எழுதியிருக்கிறேன். இதைத்தான் காளிதாசன் முதலானவர்களும் செய்தார்கள்.


ஆகவே வெண்முரசை மகாபாரதத்தில் இருந்து நான் விரிவாக்கிக்கொண்ட நாவலாகவே வாசிக்கவேண்டும். மகாபாரதமாக அல்ல. இந்த வாசிப்பு மகாபாரதத்தை இன்றைய நோக்கில் மேலும் கூர்மையாக புரிந்துகொள்ள உதவும்

ஜெ