ஜெ ,
இன்றைய அத்தியாயம் படித்தவுடன், இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென தோன்றியது.
என் அப்பா B.S.N.L. இல் SDE. அவரைப் பிடிக்கும். ஆனால், பயம். அவருக்கு ஒரு P.A. போல , வரும்தொலைபேசி அழைப்புகளை குறிப்பு எடுப்பது, அவர் பைல்களை பத்திரமாக வைப்பது, பார்க்கர்பேனாவிற்கு மை ஊற்றுவது, கல்லூரிக்கு பணம் கேட்பது , புத்தகம் தேவையானால் தெரிவிப்பது இவ்வளவுதான் எனக்கும் அவருக்குமான உரையாடல். அவர் பேசுவதும் பெரும்பாலும் படிப்பு பற்றிய திட்டு, அல்லதுகாபி தா , சாப்பாடு எடுத்து வை அவ்வளவு தான். அவருக்கு என்னை பிடிக்குமா , பிடிக்காதா என்று எனக்குதெரியாது. சொன்னதில்லை. கொஞ்சம் எதிர்த்து பேசுவேன் என்பதால் பிடிக்காது என தான்நினைக்கிறேன்.
ஆனால் எனக்கு அவரை பற்றி , அவர் வேலையைப் பற்றி ஒரு பெருமிதம் இருந்தது. ஒரு நாளும் அவரிடம்சொன்னதில்லை. என் கண்களுக்கு அவர் அழகன். அவர் விரல்கள் குண்டு குண்டாக , உள்ளங்கை பஞ்சுபோல மென்மையாக இருக்கும். அவர் கரம் பற்றி நடக்க வேண்டும் என்பது என் நெடுநாள் கனவு. அவரிடம்சொன்னதில்லை. நேரில் பார்க்கையில் பேச பயமாக இருக்கும்.
ஒரு நாள், வீசிங் என ராத்திரி மருத்துவ மனையில் அட்மிட் செய்தார்கள் . நானும் தங்கையும் காலையில்காபி எடுத்து கொண்டு சென்று பார்த்தோம். ஆனால் எப்படி இருக்குது அப்பா, எங்களுக்கு பயமாஇருந்துச்சு னு ஒண்ணுமே சொல்லலை . அப்படி அவரிடம் பேசி பழக்கம் இல்லை . அவரை டிஸ்சார்ஜ்செய்தார்கள். நல்லா தான் இருந்தார். இரவு எங்கள் குடும்ப மருத்துவரிடம் தனியாக சென்றார். சிறிதுநேரத்தில் மாரடைப்பில் மரணம் அடைந்தார் என தகவல் வந்தது. அப்பாவுக்கு 45. வயது. எனக்கு 19. 15,8, என அடுத்து இரு தங்கைகள். எங்கள் உலகம் தலைகீழாக மாறியது.
அப்பா உடலை கொண்டு வந்து ஹாலில் வைத்தார்கள். முதல்முறையாக அப்பாவுக்கு பக்கத்தில் நான். மெதுவாக விரல்களை பிடித்து கொண்டேன். என்ன மென்மை. எத்தனை நாள் ஆசை? மெதுவாககன்னத்தை தொட்டு பார்த்தேன். இன்னும் எவ்வளவு நேரம்? இப்போ அப்பா என்ன சொல்வாரோ என பயம்இல்லை. அவரால் தான் எதுவும் சொல்ல முடியாதே. ஆனால் உங்களை பிடிக்கும் அப்பா என ஏன்சொல்லவில்லை? எது தடுத்தது? இனி எப்படி சொல்வேன்? நம் பிள்ளைகளுக்கு நம் மீது அக்கறை இல்லைஎன நினைத்திருப்பாரோ ? அந்த கவலையில் உயிர் பிறிந்ததா ?
அப்பா உடலை எடுத்தார்கள். ஆம்புலன்ஸ் ல் நானும் தங்கைகளும். அம்மா வீட்டில். மெதுவாக அப்பாநெற்றியில் முத்தமிட்டு சொன்னேன் அப்பா I லவ் யு .
இருபது வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் அப்பாவிற்கு என்னை பிடிக்குமா , என்றாவது என்னை நினைத்துபெருமைப் பட்டு இருக்கிறாரா ? கேள்விகள் என்னை இன்னும் துரத்துகிறது.
இன்று கர்ணனைப் படிக்கையில் , நான் என் அப்பாவை தான் பார்த்தேன். ஆனால் என் நிலை துரியனைவிட மோசம் அல்லவா?
பிரியமுடன்
அ
அன்புள்ள அ
இது என்னுடைய அனுபவமும் கூட,. நானும் அப்பாவைத் தொட்டது அரிது. உண்மையில் தொடவேண்டும் என்னும் விருப்பம் இன்னும் உள்ளது - அவர் இறந்து முப்பதாண்டுகள் கடந்தும்கூட
சென்றகாலங்களில் மனிதர்கள் தொடுவதை மிக கவனமாகத் தவிர்த்தார்கள். அது உள்ளத்தை வெளிக்காட்டிவிடும் என்னும் அச்சம். ஆண்கள் பெண்களை தொடுவது மிக அரிது
சென்ற ஆண்டு ஒரு குடும்பச்சடங்குக்குச் சென்றிருந்தேன். ஒரு வயதான அக்காவை சாதாரணமாக தொட்டேன். அதுவரை இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தவர் அழத் தொடங்கினார். அவரை பிறர் தொடுவது மிக அரிதாக ஆகிவிட்டிருந்தது. தொடுகை நெகிழச்செய்தது. அத்தனை அக்காக்களையும் அத்தைகளையும் சித்திகளையும் தொட்டு அணைத்துப்பேசினேன். பெரும்பாலானவர்கள் கண்ணீர்விட்டுவிட்டனர்.
தொடுகை, ஆத்மார்த்தமான தொடுகை, நம்மில் மிகக்குறைவு. நம் பண்பாட்டு எச்சரிக்கைகள் அத்தகையவை
ஆனால் அது அன்பின்மையின் அடையாளம் அல்ல. பலசமயம் மிதமிஞ்சிய அன்பை தனது பலவீனமாக ஆண்கள் நினைப்பார்கள். ஆகவே அதை கடுமையால் விலக்கத்தால் மறைத்துக்கொள்வார்கள். என் அண்ணா அப்படித்தான். என்னிடம் ஒரு நல்ல சொல் சொன்னதே இல்லை. ஆனால் அவர் என்னை மிக விரும்புபவரென தெரியும்
உங்கள் அப்பாவும் அப்படித்தான். தொடாமல் அவர் தவிர்த்ததே அன்பு- அவர் அதை பலவீனமாக எண்ணி கூச்சம் கொண்டிருக்கலாம் - வெளியே தெரியக்கூடாது என்பதனால்தான்
தொடவே முடியாத ஓர் ஆணை குந்தி ஏன் விரும்பினாள் என்பது ஆச்சரியமானதுதான்
ஜெ