Friday, April 5, 2019

இமைக்கணம் ஆறாம் அத்தியாயம்அன்புள்ள ஜெயமோகன் சார்,

இமைக்கணத்தின் ஆறாம் அத்தியாயம் படிக்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அப்படியே இப்போது இருக்கும் வாழ்க்கையில் இருந்து,ரிவர்சில்  நாம் விரும்பும் ஒரு வாழ்க்கை ..... அதுவும் சிறுவயதில் இருந்து கிடைத்தால் எப்படி இருக்கும்? ...ஆனால் உண்மையில் அப்படி என்ன பெரிய வாழ்க்கையை நீ எதிர்பார்த்து வாழ்ந்தாய் என மனசு கேட்கிறது. ..பெரிய ஷ்த்ரியனாய் வாழ ஆசைகொண்டவனுக்கு தான் அந்த நடக்கவே போகாத ஒரு பாக்கியம் கிடைக்கும் போல.... ஆனால் எனக்கு சிறுவயதில் "ஸ்டாலின் " மாதிரி அகண்ட பாரதத்தை ஆள வேண்டும் , போப் ஆண்டவராகி உலகையே ஆளவேண்டும் என்று எல்லாம் ஆசை,கனவு வரும்.  வெறும் ஆசை கனவு அவ்வளவுதான். ..அதற்காய் ஒரு மில்லிமீட்டர் கூட தாண்டியது கிடையாது. ஆனால் அலக்சாண்டர் கொசு கடித்து  மலேரியா காச்சலில் இறந்து போனார் என்று முதல்முறை படித்ததும் மனது எங்கேயோ முட்டி நின்றதும் ஞாபகம் வருகிறது.  

வெளியே கணவனிடம் சண்டை பிடித்து நிற்கும் மனைவி போல்[ இந்த காலத்தில் மனைவியிடம் சண்டை போட்டு துரத்தபட்டு மனம் வெம்மி வெம்மி வீட்டில் இருந்து ஒரு நூறு மீட்டர் தள்ளி நிற்கும் கணவன் போல் ] ஒத்தையாய் நின்றுகொண்டு இருக்கும் கர்ணனை மீண்டும் உள்ளே கூட்டி வந்து ஐந்தாம் அத்தியாத்தில்  கேட்ட அதே கேள்வியை சுருதி மாறாமல் கேட்கிறார் "அத்தனை சொல்லியும்கூட உங்கள் துயரை நீங்கள் சொல்லவில்லை"......, எதையோ மறைக்கத்தான் அத தவிர எல்லாத்தையும் கூறினீர்கள் என கூற கர்ணன் மீண்டும் சீறி உடனே ஆம் என ஒப்புக்கொண்டு தனது துயரத்தை கூறுகிறார்"  “நான் உணர்ந்ததையே சொன்னேன். எனக்களிக்கப்பட்ட களத்தில் விழைவைத் தீட்டி வெற்றிநோக்கிச் செல்வதொன்றே நான் செய்யவேண்டியது. ஆனால் பிறிதொன்றும் இக்களத்தில் உள்ளது. என் மெல்லுணர்வுகள். என்னை அலைக்கழிப்பவை அவையே. இருநிலையில் இருந்தே என் வினாக்கள் எழுகின்றன. இருநிலையை வெல்லவே நான் இங்கு வந்தேன். ஒன்றை பற்றிக்கொள்ளவேண்டும் என விழைந்தேன். என்னைப் பற்றிக்கொள்ளும் அளவுக்கு அதை வலுவுள்ளதாக்க முயன்றேன்.” என்றும் தனது சொந்த  தம்பிகளை கொன்று குவித்து இன்னொரு தம்பியை அரியணை ஏற்றவேண்டுமா? என்றும் ...தனக்குள் ஊறி இருக்கும் நஞ்சினால் பாஞ்சாலி துயில் உறியப்படும் போது தான் கொண்டாடினேன் என்றும் ஆனால் அதனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியினால் தன்னையே வெறுத்து மதுவில் திளைத்தேன் எனவும் கூறுகிறார். வெற்றி பெறுவதற்காகதான் மாந்தர் செயலாற்றுகின்றனர் ஆனால் பிறப்பிலேயே தோல்வி என்று இருந்தால் மீண்டும் மீண்டும் பெரும் வெற்றி எல்லாம் என்னை தோற்கடிப்பதுதானே என கேட்கிறார். கர்ணனுக்கு ஒட்டுமொத்தமாக தனது வாழ்க்கை நன்றாய் தெரிகிறது. அவர் மிகவும் குற்றவுணர்வு கொண்டு தவிப்பது பாஞ்சாலியை துகில் உரிக்கும் கட்டத்தில் தான் நடந்துகொண்டதை குறித்துதான் என நினைக்கிறேன். ஏன் என்றால் சொல்வளர்காட்டில்  முனிவர் ஒருவரின் மனைவியை மற்றொரு முனிவர் தனக்கு குழந்தை பெற்று எடுக்க தானம் கேட்க அவர் அந்த காலத்தின் அறத்திற்கு  ஏற்ப கொடுக்கிறார். ஆனால் அந்த பெண்ணின் துயர் கண்ட அவளது மகன் அதை தடுத்து பெண்ணின் சம்மதம் இல்லாமல் ஒருவன் ஒரு பெண்ணை தொடக்கூடாது என்பதுபோல் ஒரு வேதசொல்லை சொல்வான். கர்ணன் காலத்தில் [ இப்போதும் அதுதான் ] சட்டபடி அதுதான் அறமாக இருக்கிறது.  ஆனால் கர்ணனும் துரியோதனனும்  அடுத்தவனின் மனைவியாகிய பாஞ்சாலியை இழுத்து அசிங்கபடுத்த அந்த அறம் நசுங்குகிறது. அதனால் தான் அவன் தவிக்கிறான், தற்கொலை வரை செல்கிறான் .....யாரிடம் மறைத்தாலும் கிருஷ்ணனிடம் மறைக்ககூடாது என எண்ணி  தனது துயரத்தை கூறுகிறான்....கலியுகத்தின் " முதல் பாவமன்னிப்பு கோரல் " இது தானா ? ..... உலகியலிலே சிந்தித்து கொண்டு அதன் அறத்தை மீறியதை நினைத்து துக்கப்படும் கர்ணனிடம் [ நாகவேதம் பிளஸ் அடுத்த வேதத்தின் குழப்பமும் கொண்டவனா கர்ணன் ? இல்லை மகாபாரத்தின் பெரிய மாவீரர்கள் எல்லாரும் அப்படிதானா .....இல்லை வீரர்கள் எல்லாருமே குழப்பம் நிறைந்தவர்களா? ] கிருஷ்ணர் தரையில் ஒரு கோடு வரைந்து அதை  தொடு என்கிறார்.....ஏன் கோட்டை வரைந்து தொடு என்கிறார்? 

கர்ணன் விரும்பும் வாழ்வுக்கு கதை TRANSFORMATION ஆவது அற்புதமாய் இருக்கிறது. வண்ணகடலில் குந்தியும் துரியோதனும் சந்திக்கும் "கார்கோடகன் " கர்ணனை சந்திக்கிறான்.  குந்தி வெட்டி வீசி கர்ணனை அழிக்காமல் [ பாஹுபலி சினிமாவின் துவக்ககாட்சியின் எதிர்வடிவம் போல இருக்கிறது...குந்தியின் கைகள் தண்ணீரின் ஆழத்தில் துழாவி குழந்தையை தூக்குவது]  அள்ளிகொள்கிறாள். கர்ணன் தனது தாயிடமே சேர்கிறான்.

 பீஷ்மர் , திருதாஷ்டினர் ,சகுனி அனைவரின் ஆசிர்வாதத்தோடு  தனது ஐந்து தம்பிகள் புடைசூழ அஸ்தினபுரியின் அரசன் ஆகிறான்.  முக்கியமாய் அவன் விரும்பிய பாஞ்சாலியை திருமணம் செய்து ஐந்து குழந்தைகளுக்கு தகப்பன் ஆகி வலியின் துயர் அறியாமல் ஆட்சி புரிகிறான் .....“ஊழ் என்பது ஒருகையில் வாளும் மறுகையில் மலரும் கொண்ட விந்தைப்பெருந்தெய்வம்” என்றார் தென்தமிழ்நிலத்து நிமித்திகர் சாத்தனார். “நஞ்சும் அமுதும்கொண்டு அது வாழ்வை நெய்கிறதென்கின்றன நூல்கள். எவருக்கும் அது முற்றாக கனிந்ததில்லை. எவரையும் கைவிட்டதுமில்லை. இவரை மட்டும் பிச்சியான பேரன்னை என மடியில் அமரவைத்திருக்கிறது. தன் முலைகனிந்து ஊட்டிக்கொண்டே இருக்கிறது.” என அனைவரும் அவனை புகழ்கின்றனர் . அஸ்தினபுரியில் இந்திரனின் குடை நிறைந்து நிற்கிறது. இப்போது ஊழால் கைவிடப்பட்டவன் என இருக்கும் கர்ணன் கனவு வாழ்க்கையை  வாசிக்கும் போது மனதுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது. 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்