Monday, April 22, 2019

மைந்தர்கள்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

இருட்கனி 8-ஆம் அத்தியாயம்.  கண்களில் நீர்மல்கச் செய்தது.  எச்சுழலிலும் தந்தையை விட்டுத்தராத மகன் விருஷசேனன் தன் மகன் மீது பேரன்பு கொண்ட அதிரதர்.  இருவரும் அவனை நன்கு புரிந்திருப்பவர்கள்.

சுப்ரியையும், குந்தியும், ராதையும் அவனை புரிந்திருப்பவர்களே வேறொரு கோணத்தில்.  சுப்ரியைக்கு அவன் ஒரு மோசமான கனவு.  என்னுள் இருக்கும் ஆணை வென்று என்னை வென்றாய் அல்லவா பார் என் வழியில் உன்னுள் இருக்கும் பெண்ணை வென்று உன்னை வெல்கிறேன் என்று அவனிடம் சொல்ல வழியே இல்லை.  அவன் முழுவதும் ஆண் மட்டுமே ஆயிற்றே.  அவள் உடலை உரித்து அகற்றிச் செல்லும் நாகினி ஆவதில் ஒரளவு நியாயம் இருப்பதாகவே படுகிறது.  தன் உடல் மதிப்பற்றது என்று அவளை உணரச் செய்திருக்கிறான் அவன்.

அன்னையரிடம் தாள் பணிந்து பெற்றுக்கொள்பவனாக அவன் நடந்து கொண்டாலும் அது வெறும் நடிப்பு, அவன் வானின்று கீழ் நோக்கி வழங்குபவனாகவே எப்போதும் இருக்கிறான், அவனது பெற்றுக்கொள்ளலில் ஒரு போலித்தனம் இருக்கிறது என்று அன்னையரும் உணரக்கூடும்.  தான் சமைப்பதை உண்ணாமல் அடிக்கடி வெளியே சாப்பிட்டால் தான் மிகவும் அவமதிக்கப்படுவதாக வருந்தும் தன் அன்னை என்ற இடமே உணவு அளிப்பதில்தான் உள்ளது என்பதுபோல கருதும் அம்மாவை எண்ணுகிறேன்.

உலக முழுவதும் சூரியன் குறித்த தொன்மங்களை இணையத்தில் தேடினேன்.  உலக முழுவதும் சூரியன் ஆண் கடவுள் (சீனாவில் தையாங் ஷென், இந்தியாவில் சூரியன், எகிப்தில் ரா, தென் அமெரிக்காவின் ஆன்டீசில் இன்டி என்றவாறு) இனூட் எஸ்கிமோக்களுக்கு மட்டும் சூரியன் பெண் கடவுள் மலினா (Malina), கருணை, துணிவு, பேரழகு கொண்ட சூர்யை அல்லது சூர்யதேவி.  வியக்கத்தக்க வகையில் எஸ்கிமோ புராணங்களிலும் அவள் கொடுக்கும் தன்மை கொண்டவளாகவே இருக்கிறாள்.


அன்புடன்,
விக்ரம்,
கோவை.