Saturday, April 13, 2019

எட்டி



அன்புள்ள ஜெயமோகன் சார்,

இருட்கனியின் 2ம் அத்தியாயம் படித்து முடித்ததும் எட்டிக்காயை சாப்பிட்டது போல் கசப்பாய் இருந்தது. கிளைமாக்ஸை முதலிலேயே காட்டிவிட்டீர்கள். இன்று எனது தெருவில் இரு மரணங்கள். முதலில் எதற்கு செல்வது என்று புரியவில்லை....ஒருவரை எரித்துவிட்டு வந்து படித்தால் கர்ணன் இடுகாட்டில் சடலமாய் இருக்கிறான். மரணம் இருட்கனியா? இல்லை விடுதலையின் கனியா ?

கர்ணனின் சடலத்தை பார்க்க "துரியோதனன் சீரான நடையுடன் செல்ல அவர்களின் நடையும் அறியாது அவ்வண்ணம் மாறிவிட்டிருந்தது. அச்சூழலில் அந்த நடை அச்சமூட்டும் விந்தைத்தன்மையை கொண்டிருந்தது என்று வாசிக்கும்போது இன்று எனது நடை பற்றி நான் யோசித்தது நினைவுக்கு வந்தது. சடலத்தை தூக்கி செல்லும் ஊர்வலத்தில் எப்படி நார்மலாக நடக்க முடியும் ? ...ஆனால் அச்சமுட்டும் நடை என்பது என்ன ? கலியின் நடையா? 


இந்த நேரத்தில் கணிகர் என்ன எண்ணி கொண்டிருப்பார்?  "தனியன்"  "அரசநாகம் " என்று அவனை ஏற்றிவிட்டு துரியோதனனோடு  இந்திரபிரஸ்தம் செல்ல வைத்தவர்.  விருஷாலி வந்து என்ன எண்ணுவாள் ? என்ன செய்வாள் ? . பாஞ்சாலியின் நிறமும் கர்ணனின் நிறம்போல் காராமணி கருமை தான், கர்ணனின் உடம்பை நினைக்கும் போது அவளும் வந்து போகிறாள்.வெய்யோனில் சிவதரிடம் "தோற்பதில்லை என்ற ஒற்றைச் சொல்லால் என்னை தொகுத்துக்கொண்டிருக்கிறேன் " .....என கூறியவன்.


ஸ்டீபன் ராஜ் குலசேகரன்