Tuesday, April 9, 2019

கர்ணனின் இயல்தளம்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

காரகடலின் 12ம் அத்தியாயம் வாசிக்கும்போது கர்ணனின் இயல்தளம் - பீஷ்மரின் செயல் தளம் பற்றி குழப்பம் வந்தது. முதலில் இயல்தளம் , செயல்தளம் என்றால் என்ன ? இதழாளர்களுக்கும் ,செய்ல்பாட்டாளர்களுக்கும் உள்ள வித்தியாசமா ? .முன்னோரை,பெற்றோரை, உடன்பிறந்தாரை , அன்பு கடன் கொண்டு இருக்கும் தன்னை விரும்பியவர்களை,குலதெய்வங்களை பார்க்க அவர்கள்   "நீ செயல் ஆற்று நாங்கள் விடுதலை செய்கிறோம்"  என்பது போல் நாகமாய்  உருவெடுத்து அவர்கள் பின்னி பிணைய பதறி விழித்து,என்னை காப்பாற்றுங்கள் என இளைய யாதவரிடம் கதற,அவர் வந்தவங்க சொன்னத கேட்டல , செய்லாற்றுரியா ? என கேட்க ஒத்துகொள்கிறார். ஜெயமோகன் சார் , குருஷேத்ரம் வெறும் வேதங்களின் போர் மட்டுமே என்று எனக்கு முதலில் தோன்றியது, ஆனால் இப்போது அந்த வேதங்கள்,  உறவுகள், ஊழ் ,மன அமைப்புகள், தனிப்பட்ட கேரக்டர் எல்லாம் சேர்ந்து உருவாக்கிய கதாபாத்திரங்களுக்கான மோதல் என்று தோன்றுகிறது. எவ்வளவு லேயர்ஸ். 

பீஷ்மர் "“யாதவரே, முடிந்தவரை அகன்றிருக்கிறேன். முழு வாழ்வும் எதையும் செய்யாதிருந்திருக்கிறேன். இருந்தும் இத்தனை கட்டுகளா? என கேட்டு ....ஆனால் சென்றுகொண்டே இருக்கிறார்கள் என கூற இளைய யாதவர் : செல்வது எளிது அல்ல என்கிறார்.  நானே இளைய யாதவரிடம் கேட்பதுபோல் இருந்தது. ஏன் என்றால் அவரே மாதிரி அனைத்தையும் தள்ளி போட்டவன் தான்.ஆனால் ஓடமுடியாது. இளைய யாதவரிடம்  " இவங்க தளையில் இருந்து விடுபட நினைக்கமாட்டாங்களா? என கேட்க [  குடும்ப பந்தத்தில் இருந்து துறந்து செல்கிறவர்களை கூறுகிறாரா? அப்படி என்றால் அதுதான் இயல் தளமா?  கர்ணனும்  அதிரதன், ராதை,குந்தி ,சகோதரர்கள் என கட்டபட்டவந்தானே ? அவனாக அனைத்து வித்தையையும் கற்றுகொள்கிறான். இதைதான் முதலில் நாய்க்குட்டி பறக்க ஆசைப்படக்கூடாது என கூறினாரா? பறக்க ஆசைபட்டால் அதை இயல்தளத்தில் வைத்து செய்ய வேண்டும் ...செயல் ஆற்றவேண்டும் என்கிறார். கார்கடலில் ஏன் கர்ணன் அவ்வளவு அசிங்கமும் அவமானமும் ,ஆணவ அடிவாங்குதலும் படுகிறான் என இப்போது புரிகிறது. ].....கிருஷ்ணர் " “பிதாமகரே, ஒவ்வொரு வழியிலும் அதற்குரிய தவம் தேவையாகின்றது. மைந்தரைப்பெற்று பொருளீட்டி வளர்த்து குடிப்பொறுப்புகளை முழுமைசெய்து ஓய்ந்து குலம்பெருகக் கண்டு நிறைவடையும் எளிய உலகியலான் இயற்றுவதும் தவமே” என்றார். “துறப்போர் துறக்கமுடிவது அவர்கள் எய்தவிருப்பது துறந்தபின்னர்தான் என்பதனால்தான்.” எனகூற ...அவர் சொன்னதை சற்றுநேரம் எண்ணி நோக்கியபின் “நான் எய்தவிருப்பது செயல்தளத்தில்தான் என்கிறீர்களா?” என கேட்க . “ஆம், ஆகவேதான் ஒவ்வொரு துறவிலிருந்தும் திரும்பி வருகிறீர்கள்” என்கிறார் இளைய யாதவர். “யாதவரே, அவ்வண்ணமென்றால் ஞானமும் தவமும் வீடுபேறும் எனக்கில்லையா?” என்று பீஷ்மர் கேட்க . “காங்கேயரே, அன்னமென்பது என்ன?” என  இளைய யாதவர் கேட்க “உண்ணப்படுவது” என பீஷ்மர் புரியாதவராக பதில் அளிக்க  “உண்ணப்படாத ஏதாவது இப்புவியில் உண்டா?” என கேட்கிறார் இளைய யாதவர். அவர் சொல்லவருவதை புரிந்துகொண்டு “இல்லை” என்று பெருமூச்சாக முனகிறார். [ அதிர்ச்சியான இடம்.....மனிதன் தன்னை உண்ண கொடுப்பது, எப்படியாகபட்ட லைப்? .உண்மையில் பீஷ்மருக்கு இப்போது வேறுவழியே இல்லை,,,மொத்தமாக தன்னை கொடுத்து செயல் புரிந்து விடுதலையாவதை தவிர...ஆனால் அவருக்கு ஏன் இன்னும் உயிர் பிரியவில்லை ?]


“உங்கள் வழியேதென்று தேர்க! அது அம்புகளின் வழி..அம்புகளின்றி நீங்கள் இருந்ததே இல்லை என பீஷ்மரிடம் கிருஷ்ணர் கூற அவர் : நீர் பன்னிரு தலைமுறைகளாக மெய்யுசாவும் சாந்தீபனிக் குருநிலையின் முதலாசிரியன்.  [ பன்னிரு தலைமுறைகளா,இது எப்படி ? ] அறிதலைவிட ஆற்றுதல் மேலென்று எண்ணவில்லையா?” என்கிறார். “ஆம், மேல்தான்” ஊர்தலைவிட நடத்தல் மேல். பறத்தல் அதனினும் மேல்.”என கிருஷ்ணர் கூற பீஷ்மர் கடுப்பாகி அவரை பார்க்க “ஆனால் ஊர்வது விழுவதேயில்லை. நடப்பது எளிதில் ஓய்வதில்லை” எனகூறுகிறார். அதற்கு கோபமாய்  “செயலைவிட அறிவே மேலென்றால் அறிவுடையோரும் அறிவிலாரும் ஒன்றென்றே நின்று இயற்றும் இச்செயலுக்கு ஏன் என்னை செலுத்துகிறீர்? சொற்சிடுக்கால் என் சித்தம் மயங்கச்செய்கிறீர்.நான் இப்போ என்னதான் பண்ண ? என கேட்கிறார்.  [ பீஷ்மருக்கு இப்போ அறிதல்தான் முக்கியம் என கூறுகிறாரா? பிராக்டிஸ் பண்ணிய வில்- அம்பின் மூலம் அவர் எதையும் அறியவில்லை ..ஆதலால் செயல்படு என்கிறார்.அம்பின் மூலம் யோகியான அர்ஜுனனால் அவர் அடிக்கபடுவது இதனால் தானா ? ...கர்ணனாவது தோல்வியே கொண்டவன். இவ்வளவுக்கும் பீஷ்மர் சிறுவயதில் இருந்து தோல்வியை அறியாதவர். செயல்படுதளம் என்பது இதுதானா? ...யோகமும் ,சந்தோஷமும் ,விடுதலையும் தரும் செயல் ] 

அதற்கடுத்து கைகளில்லாமல் விற்கலையில் குருவாய் இருக்கும் கண்டகரிடம் சென்று " நீர் எப்படி விற்கலை கற்றுகொண்டீர் ? என கேட்க அவர் "பீஷ்மர் சாதரம் என்னும் காட்டில் வில்பயிலும்போது பார்த்தேன் ...ஒரு அம்பு விடும்போது கடந்து போனேன் ...அதுல இருந்து விரித்து விரித்து எடுத்ததுதான் என்னோட வித்தை என பீஷ்மரிடமே கூறி பீஷ்மரை தன்மேல் அம்புவிட சொல்லி ஒரு அம்புகூட உடம்பில் படாமல் தப்பி பீஷ்மரை வெறுப்பேற்றுகிறார். பீஷ்மர் எப்டி ? என அவரிடம் கேட்க  கண்டகர்: இது விற்கலையின் அடுத்த நிலை. நீங்கள் வில்லேந்தும் கோணம் அம்பின் இயல்பு தோள்தசைகளின் இறுக்கம் விரல்களின் விசை என அனைத்தையும் ஒருகணத்தில் கண்டு அந்த அம்பு எழுவதற்குள் அது சென்று தைக்கும் இடத்தை என்னால் கணிக்க முடியும்.”என கூற பீஷ்மர் இப்போதுதான் "கைகளில்லாத அந்த உடல் ஆடிய அழகிய நடனத்தை ஒருகணத்தில் திரும்பச்சென்று கண்டு,  எய்பவனின் இடத்திலிருந்தே விற்கலையை அதுவரை அவர் அறிந்திருந்ததை உணர்ந்தார். கொள்பவரின் நிலையிலிருந்து முழு விற்கலையையும் ஒரு கணம் நோக்கினார்.கண்டகரை நோக்கி :“வணங்குகிறேன், மெய்யறிவரே. வில்லினூடாக காலம் கடக்கலாகும் என்று இன்று அறிந்தேன். அதற்க்கு கண்டகர் “வில்முனிவரே, அறிவென்று இங்குள்ள அனைத்தும் காலம்கடப்பதற்கானவையே. செல்காலத்தை இக்கணக் காலத்தினூடாக வருகாலத்துடன் இணைப்பதையே எண்ணுதல் என்கிறோம். எண்ணியறியும் மெய்மையெல்லாம் ஒருவழிப்பாதையே”  .....[கர்ணனுக்கு "அறிந்தவற்றை தொகுத்தல். முரண்கொள்வனவற்றை இணைத்தல். ஒன்றென்றாக்கி மேலேறிச்செல்லுதல். இணைப்பறிவே யோகம்" என்று கூறியிருக்கிறார் கிருஷ்ணர் ..ஆனால் பீஷ்மருக்கு கண்டகர் "முதல் அறிதலாக தனக்கு எதிரில் உள்ளவனின் ஆற்றலை அறியும்படி கூறுகிறார். அப்படி அறிந்தால் தான் செயல் படமுடியும் . கையும் காலும் இல்லாதவனே உன்கிட்ட கத்துட்டு விரிச்சு எடுத்து,குருநிலையில் இருந்து மெய்யறிந்து கொண்டு இருக்கிறான் ...நீ இன்னும் ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்க ? என்பது இன்னொரு கோணம் ]  


அடுத்து கண்டகர் தனது மாணவர்களுக்கு வில் பயில கற்றுகொடுத்து கொண்டு இருக்கும்போது அவ்வழியே சென்று வெறும் எட்டும்  சொற்களை கேட்டு அதை மட்டும் ஊழ்க சொற்களாக தனது உள்ளத்தில் வளர்த்தெடுத்து விழி இல்லாமல் வில்வித்தையில் பீஷ்மரை விட ஆயிரம் மடங்கு வல்லவரான காலகண்டகரை சந்திக்கிறார். அவர் வில்லை பார்த்தது கூட இல்லை ஆனால் அவர் மீது அடிக்க பீஷ்மர் என்ன வில்லை எடுக்க நினைக்கிறாரோ அதை கூறுகிறார். பீஷ்மர் பீதியாகி " எப்படி இது?” என்று கேட்க  “தேவவிரதரே, என் எதிரி நானே. இத்தனை அம்புகளால் நான் என்னுடன்தான் பொருதுகிறேன்”  என்கிறார். அவரிடம் கண்டகர் சொற்களால் அறிந்த வில் வேதத்திற்கும் கண்கள் இல்லாமல் நீங்கள் அறிந்த வில்வேததிர்க்கும் என்ன வேறுபாடு என காலகண்டகரிடம் கேட்க ....சொல் இருமுனை கொண்டது. அதன் ஒலியெனும் முனையே புறவுலகை தொட்டுக்கொண்டிருக்கிறது. மறுமுனையில் குறிப்புஎனும் கூர் முடிவிலியை தொடுகிறது. சொல்லில் இருந்து ஒலியை அகற்றுவதே என் ஊழ்கம்” என்றார் காலகண்டர். [ செயல்தளத்தில் இயங்கனும்னா நான்தான் "பெரிய இவன் " னு நிற்காம இங்கு வெறும் சொல்லை கொண்டும் , வெறும் எட்டு வார்த்தைகளை கொண்டும் வேதத்தையே எழுதுற ஆட்கள் இருக்காங்க..அத புரிஞ்சிகிடணும் போல ...பீதியா இருக்கு ...இப்பவே இந்த மாதிரி ஆட்கள்தான் பார்க்கிறேன் ] 

மறுபடியும் இளைய யாதவர் முன்னால வந்து நிற்க " “செயலொருமையால் எய்துவதைவிட மெய்யறிவால் எய்துவது அரியது. அதைவிட ஊழ்கத்தால் எய்துவது அரியது. அரியவை என்பதனாலேயே அவை அனைவருக்கும் உரியவையல்ல. உங்கள் வழி செயலே என்று தெளிக! செயலினூடாக சென்றடைக!” என்ரு கூறி ஒரு கதை சொல்கிறார்..தான் கற்ற அனைத்தையும் பாரம் தாங்காமல் அலையும் சுமந்து கொண்டு  சுலபைஇடம்  அதில் கொஞ்சத்த கைவிடு உன் பாரம் குறையும் என கூறும் அஷ்டவக்கிரர். [ கண்டகர் ,காலகண்டர் ,அஷ்டவக்கிரர்.....ஏன் உடம்பில் குறை உள்ள ஆட்களாக பீஷ்மர் சந்திக்கிறார்] ஆனால் தன்னால் அது முடியவில்லை என கூற .."விதேகத்தை ஆளும் ஜனகராகிய ஸீரத்வஜரை வணங்குக! தன்னைக் கைவிடும் கலையை கற்றுக்கொள்வாய். முற்றாக தன்னைக் கைவிட்டபின் எஞ்சுவதென்னவோ அதுவே உனக்கான மெய்மை என்று அறிவாய் என கூறி ஜனகரிடம் அவளை அனுப்புகிறார். இருவருக்கும் நடக்கும் விவாதத்தின் சாரமாய்" உடலின் வடிவை உணவு அமைக்கிறது,உள்ளம் உடலின் வடிவை சூடுவதில்லை,உயிர்கொண்ட பெரும்பசி சுவையறியாது.ஏனென்றால் அது உடல்கடந்தது , தனியன் என்பவன் : அனைத்தையும் ஆற்றுவோனும், எதையும் ஆற்றாதவனும்....“ஏதேனும் ஒரு செயலில் மகிழ்ந்து ஒன்றுபவன் அச்செயலால் பின்னப்படுகிறான். எதிலும் ஒட்டாதவனே அனைத்தையும் இயற்றுகிறான்” என்ற மூன்று விடையை பெறுகிறாள். அதிலும் திருப்தியுறாமல் அவன் அறிந்த மெய்மையை அறியவேண்டும் என எண்ணி ஜனகனின் உடலுக்குள் புகுந்து   " கல்லில் அமைந்தாலும் மண்ணில் வனைந்தாலும் மரத்தில் செதுக்கினாலும் எழுவது ஒரே தெய்வம்தான் கண்டு கொள்கிறாள் . இளைய யாதவர் " மெய்மை ஒன்றே என்றுதான் " இக்கதை சொல்கிறது என கூறுகிறார்.  [ செயல் மட்டும் இல்லை...செயலினால் நீ என்ன அறிந்து கொண்டாய் என்பது முக்கியம்...ஏன் என்றால் செயல்களத்தில் செல்லுபடியாககூடியது அது மட்டுமே ] 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்